மத்தேயு 28:19-20-ல், இயேசு தம் சீஷர்களுக்கு, "போங்கள்" என்றும் "சீஷராக்குங்கள்" என்றும் கட்டளையிடுகிறார். 'எவ்விதமான சீஷர்கள்?' என்பது இதில் யோசிக்கவேண்டிய கேள்வியாகும். இங்கு இயேசு, வார இறுதி நாட்களில் ஆலயத்திலும், ஆலயத்திற்கடுத்த பிற நடவடிக்கைகளிலும் ஈடுபடும்போது மட்டும் இயேசுவின் போதனையின்படி வாழும், "பகுதி வாழ்க்கைச் சீஷர்களைக்" குறிப்பிடுகிறாரா, அல்லது தங்கள் "வாழ்வு அனைத்தும் இயேசுவுக்கே" என்று கருதி, வாரத்தின் அனைத்து நாட்களிலும், தங்கள் வீட்டிலும், தங்கள் பணியிடங்களிலும், சமுதாயத்திலும் கூட இயேசுவின் போதனையின்படி வாழும் "முழு வாழ்க்கைச் சீஷர்களைக்" குறிப்பிடுகிறாரா?

முழு வாழ்க்கைச் சீஷர்களையே இயேசு குறிப்பிடுகிறார் என்று நான் நம்புகிறேன். இப்படி என்னை நம்ப வைத்தது எது என நீங்கள் கேட்கலாம். இயேசு தம்மைப் பின்பற்றிய எல்லாரையும் நோக்கிச் சொன்னார்: "ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்" (லூக்கா 9:23). இங்கே இயேசு, வார இறுதி நாட்களில் மட்டும் உங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக, உங்கள் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றுங்கள் என்றே கூறுகிறார். மேலும், சுவிசேஷங்களில் இயேசு, ஜெப ஆலயங்களுக்கு மட்டும் சென்று தேவராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கிறவராகக் காணப்படவில்லை. இயேசு, ஆவிக்குரிய சத்தியங்களைப் பிரசங்கிக்கப் பொதுமக்களைத் தேடி, வீடுகள், கடற்கரை, ஆயத்துறை, வயல்வெளி நிலங்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்கள் முதலான அவர்களின் இருப்பிடங்களுக்கும் சென்றார்.

முழு வாழ்க்கைக்கான சீஷத்துவம் என்பது என்ன? முழு வாழ்க்கைக்கான சீஷத்துவமானது, சபையுடனும் அதன் நடவடிக்கைகளுடனும் வெறுமனே இணைந்திருப்பதைவிடவும் மேலானது. அது ஒருவரின் ஓய்வு நேரத்தை மட்டும் தேவனுக்குக் கொடுப்பதல்ல. இயேசு போதித்த, முழு வாழ்க்கைக்கான சீஷத்துவ அழைப்பானது, இவையனைத்தையும்விட மிகப் பெரியது. முழு வாழ்க்கைக்கான சீஷத்துவம் ஒரு பயணம். அது, இல்லம், பணியிடம், சமுதாயம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய, வாழ்வின் ஒவ்வொரு
பகுதியிலும் கிறிஸ்துவை உண்மையாய்ப் பின்பற்றவும், அவரது போதனைகளின்படி வாழவும் எடுக்கும் வாழ்நாள் முழுமைக்குமான தீர்மானம். கிறிஸ்து நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதிக்கும் ஆண்டவர்.

நெதர்லாந்தின் பிரதம மந்திரியாகப் பணியாற்றிய டச்சு இறையியலாளர் ஒருவரின் புகழ்பெற்ற கூற்றின்படி, "அனைத்துப் படைப்புக்களிலும், 'இது என்னுடையது! இது எனக்குச் சொந்தமானது!' என்று இயேசு கிறிஸ்து சத்தமிட்டு அறிவிக்காத ஒரு சதுர அங்குலம் கூட இல்லை!" தேவன், ஞாயிறு ஆராதனையைப் பற்றி மட்டுமல்ல, வாழ்வின் அனைத்து அம்சங்களைக் குறித்தும் அக்கறைகொள்கிறார். முழு வாழ்க்கைக்கான சீஷத்துவம் என்பது, மனித வாழ்க்கையிலிருந்து முற்றிலும் பிரிக்கப்பட்ட, தனியொரு நிகழ்வைப் பற்றியது அல்ல. வாழ்வின் அனைத்துப் பகுதியும் இயேசுவுக்கே என்பதைப் பற்றியது. அங்கே ஞாயிறுஃதிங்கள் இடைவெளியோ, பரிசுத்த லௌகிக வேறுபாடோ இல்லை.

நான் கவனித்த வரையிலும், அநேகக் கிறிஸ்தவர்கள் வாரத்துக்குச் சில மணி நேரங்கள் மட்டுமே கிறிஸ்துவின் சீஷர்களாக வாழ்கிறார்கள். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ஞாயிறுகளில் ஆலயத்திற்குச் செல்வதோடு திருப்திப்பட்டுக்கொள்கிறபோது, வேறு சிலரோ, ஆலயத்திலும், ஆலயத்துக்கடுத்த மற்றக் காரியங்களிலும் தங்கள் ஓய்வு நேரங்களில் ஈடுபடுவதுடன் நின்றுவிடுகிறார்கள். மக்கள் விசுவாசத்தையும், வாழ்க்கையின் மற்றப் பகுதிகளையும் பிரித்துவைத்திருக்கிறார்கள். கலாசாரங்களைக் கடந்து, சந்திக்கப்படாத ஜனக்கூட்டத்தாருக்குச் சுவிசேஷத்தை வழங்கும் ஒரு ஊழியக்காரரின் ஊழியத்தைப் போலவோ, தேவனின் வார்த்தையைப் பிரசங்கித்துப் போதிப்பதன் மூலமும், மேய்ப்பனின் அக்கறையோடும் சபையை நடத்திச் செல்லும் ஒரு போதகரின் பணியைப் போலவோ, தாங்கள் செய்துகொண்டிருக்கும் வேலையானது, அத்தனை முக்கியமானதோ, அர்த்தமுள்ளதோ அல்ல என்று நினைக்கின்ற அநேக மக்களை நான் சந்தித்திருக்கிறேன். இப்படிப்பட்டவர்கள், "ஊழியத்தில்" (முழு நேர ஊழியத்தில்) இருப்பவர்கள், மற்றப் பணியிலுள்ளவர்களைக்காட்டிலும் மேலான அழைப்பைப் பெற்றவர்கள் என்று கருதுகிறார்கள். இவர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை தேவனுக்குப் பயனற்ற வேலையைத் தாங்கள் செய்வதாகக் கருதிக்கொள்கிறார்கள். மேலும் இவர்கள், திங்கட்கிழமை வந்தாலே, ஏன் வேலைக்குச் செல்லவேண்டுமென்று புலம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள்.
வெள்ளிக்கிழமைகளில், "அப்பாடா, போதும்!" என்று சந்தோஷப்படுகிறார்கள்.

இவ்வனைத்துக் கணிப்புக்களும் முழு வாழ்க்கைக்கான சீஷத்துவத்தைக் குறித்துக் கற்கும்படி என்னை வழிநடத்தின. வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் இயேசுவுக்கே (முழு வாழ்க்கைச் சீஷர்கள்) என்று கருதும் சில திருச்சபை விசுவாசிகளை நான் நேர்காணல் செய்தேன். அவர்களில் சிலர் எவ்வாறு தங்களது இல்லம், பணியிடம் மற்றும் சமுதாயத்தில் அவர்களின் விசுவாசத்தை வாழ்ந்துகாட்டுகிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்:
"என் குழந்தைகளுடன் நான் பழகும் விதத்தின் மூலம், நான் அவர்களுக்குக் கிறிஸ்துவைக் காட்டுகிறேன்." "நான் தேவனின் சாயலில் படைக்கப்பட்டிருப்பதினால், நான் சப்பாத்தி சமைக்கும்போதெல்லாம், இவ்வுலகத்தில் இருக்கக்கூடிய தேவனுடைய நன்மையான உணவுப்பொருட்களை எடுத்து, அவற்றை ஒன்றாகச் சேர்த்து, ருசிகரமான ஒரு உணவை உருவாக்குகிறேன்." "எங்களது மிகச்சிறந்த நிதி நிர்வாக நிறுவனம், முக்கியமாக, நெறிமுறைகளின்படி மிகச்சிறந்த நிதி ஆலோசனைகளை வழங்குகிறது."

"நான் ஒரு பள்ளியில் பணியாற்றக்கூடிய ஆலோசகர். தேவனுடைய ராஜ்யம் சமீபித்திருக்கிற காரணத்தால், சிரமங்களினூடே கடந்து செல்கிற குழந்தைகளுக்கு ஆதரவானவராக நான் இருந்துவருகிறேன்."

"மிகவும் மோசமான பெயரைச் சம்பாதித்துள்ள எனது தொழிலை நான் மீட்டெடுக்க விரும்புகிறேன். குறுக்கு வழிகளில் செல்லவோ, ஏமாற்றவோ, நல்லிணக்கத்துக்குக் குறைவுண்டாக்கும் எந்த ஒரு வழியிலும் செயல்படவோ நான் விரும்பவில்லை." "எங்களது வீட்டைப் பிறருக்குத் திறந்து கொடுத்ததன் மூலம், தேவன் எப்படி எல்லாரையும் வரவேற்று, அரவணைக்கிறவராக இருக்கிறார் என்பதை, நாங்கள் நடைமுறையில் வெளிப்படுத்துகிறோம்." "நான் ஊழியத்திற்குச் செல்லாதது பற்றிக் குற்றவுணர்வோடிருந்தேன். எனது பணியின் மூலமாக நான் தேவனின் பணியைச் செய்கிறேன் என்று அறிந்து மிகவும் உற்சாகமடைகிறேன். ஒரு நல்ல நிறுவனத்தை நிர்வகிக்கவும், பணியாளர்களை நல்லமுறையில் நடத்தவும், பொறுப்புள்ள தந்தையாக, அன்புள்ள கணவராக மற்றும் நல்லதொரு அயலகத்தவராக இருக்கவும் முடிவதால் அது சாத்தியமாகிறது."

இத்தகைய நிஜ வாழ்வியல் எடுத்துக்காட்டுகள் மூலம், முழு வாழ்க்கைக்கான சீஷத்துவம் என்பது ஏதோ ஒப்புக்காகப் பேசப்படும் ஒழுங்கற்ற ஒரு கருத்து அல்ல என்பது புலனாகிறது. இயேசுவைப் பின்பற்றுவோர் அனைவருமே, வாரத்தின் ஏழு நாட்களிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும், முழு வாழ்க்கைச் சீஷர்களாக வாழவும், அப்படிச் செய்வதனால், இயேசுவின் மிகப்பெரிய கட்டளையை நிறைவேற்றவும் முடியும்.