பழைய ஏற்பாட்டை நாம் கூர்ந்து கவனித்துவந்தால், அதில் கணிசமான அளவுக்கு இஸ்ரவேலர் மேற்கொண்ட யுத்தங்களையும், அவர்கள் எவ்வாறு ஜெயித்தார்கள் என்பதுபற்றியும் கூறப்பட்டிருப்பதை நாம் காணலாம். அந்த யுத்தங்கள் இத்தனை விவரமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதற்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறதென்று நினைக்கிறேன்.

சில யுத்தங்களைப் பொறுத்தவரை, அக்குறிப்பிட்ட யுத்தங்களை எப்படி நடத்துவது என்பது குறித்துத் தேவன் மிகப் பிரத்யேகமான வழிமுறைகளை அளித்தார். உதாரணமாக, எரிகோ யுத்தத்தில், எரிகோவின் மதில்களை இடிந்து விழப்பண்ணச் சரியாக என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யும்படி யோசுவாவிடம் ஆண்டவர் சொன்னார். ஆசாரியர்கள் கொம்பினாலான ஏழு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு பெட்டிக்கு முன்பாக நடக்க, அவர்கள் ஆறு நாட்களுக்குப் பட்டணத்தைச் சுற்றிவர வேண்டும் (யோசுவா 6:4). ஏழாம் நாளில், ஆசாரியர்கள் எக்காளங்களை ஊத, அவர்கள் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவர வேண்டும். ஆசாரியர்கள் அந்த எக்காளங்களை ஊதும்போது, ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்க வேண்டும் என்றும், அப்படி அவர்கள் ஆர்ப்பரிக்கும்பொழுது, மதில்கள் அவர்களுக்கு முன்பாக இடிந்துவிழும் என்றும் ஆண்டவர் யோசுவாவிடம் கூறினார்.

இதைப்போலவே மீதியானியருடன் கிதியோன் நடத்திய யுத்தத்திலும் இதற்கு இணையானதொன்றைக் காண்கிறோம். வனாந்தரம் முழுவதும் வெட்டுக்கிளிகளைப்போல் பரவிக் கிடந்த ஒரு சேனையுடன் போரிடவேண்டிய சேனையை, வெறும் 300 மனிதர்களைக் கொண்டதாகத் தேவன் குறைத்துவிட்டார். தேவனின் கட்டளையைக் கிதியோன் கவனத்துடன் பின்பற்றியபோது, மீதியானியரை அவன் சுலபமாக முறியடித்துவிட்டான்.
புதிய ஏற்பாட்டு விசுவாசிக்கு இந்த யுத்தங்கள் குறிப்பாகத் தெரிவிப்பது என்ன? அப்படி ஏதேனும் முக்கியத்துவம் அவற்றில் உள்ளதா? இந்த யுத்தங்கள் அனைத்தும் ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்தவைகளே என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.

அநேகமாக இவ்வனைத்து யுத்தங்களிலும் காணப்படும் பொதுவான கருப்பொருள் என்னவெனில், தேவன் தம் ஜனங்களுக்கு ஜெயம் கொடுக்கும்படிக்கு, வல்லமையானதொரு யுத்த வீரராக அவர்களுடன் நிற்கிறார் என்பதே. அது தாவீதைப்போல் தனியொருவனாகக் கோலியாத்தை எதிர்கொண்ட அச்சமறியாத வீரனாயினும் சரி, ஒரே மனிதனைச் சங்கரிப்பதுபோல் மீதியானியரைச் சங்கரித்த கிதியோன் போன்ற பயந்தாங்கொள்ளி மனிதனாயினும் சரி, சீரிய இராணுவத்தினருக்குக் கண்மயக்கம் உண்டாகச் செய்து, அவர்களை இஸ்ரவேல் ராஜாவினிடத்திற்கு நடத்திக்கொண்டுபோன எலிசாவாயினும் சரி (2 இராஜாக்கள் 6:8-22). யாராயிருப்பினும், தேவன் எப்போதுமே தம் ஜனங்களின் சார்பாக யுத்தம் செய்தார்.

"அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்" (யோசுவா 10:42).

அவர் தொடர்ந்து அதையே இன்றும்கூட நமக்காகச் செய்கிறார். நமது யுத்தங்களில் நம்மோடுகூட நின்று, நம் சத்துருக்களை முற்றிலும் வீழ்த்துவதற்கான யுத்தத் தந்திரங்களை நமக்குக் கற்பித்துத் தமது வல்லமையால் நமக்கு மகத்தான வெற்றிகளை அளிக்கிறார்.

"என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" (சங்கீதம் 144:1).

பழைய ஏற்பாட்டில், இஸ்ரவேலர் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வதற்கே யுத்தங்களை மேற்கொண்டார்கள். ஆனால், புதிய ஏற்பாட்டில், "நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" (மாற்கு 16:15), என்பதே நம் ஆண்டவரிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட கட்டளையாயிருக்கிறது. தேவனுடைய இராஜ்யத்திற்காகத் தேசங்களைச் சுதந்தரிப்பதே, நமது சுதந்தரமாயிருக்கிறது.

பழைய ஏற்பாட்டில் யுத்த வீரர்கள் சரீரசம்பந்தமான யுத்தசேனைகளோடு போரிட்டு, அவர்களைத் தேவ வல்லமையால் முறியடித்தார்கள். ஆனால், திருச்சபையாகிய நாமோ, மாம்சத்தோடும் இரத்தத்தோடும் போர்செய்யாமல் பிரதானமாக ஆவிகளாயிருக்கிற துரைத்தனங்களோடும் அதிகாரங்களோடும் போர்செய்கிறோம். நாம் நம்மைக் காத்துக்கொள்ளப் பட்டயங்கள், தடிகள் மற்றும் கேடகங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில்லை, மாறாக, நாம் ஜெபம், சுவிசேஷம் அறிவித்தல் முதலான ஆவிக்குரிய ஆயுதங்களை நமது யுத்தத்தில் பயன்படுத்துகிறோம்.

"எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேதுவானவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்" (2 கொரிந்தியர் 10:4,5).

சபையானது கண்களுக்குப் புலப்படும் எந்தவொரு நிலப்பகுதியையும் ஆக்கிரமிக்க யுத்தம் செய்வதில்லை. ஆனால், கிறிஸ்துவை அறிவதிலிருந்து தேசங்களைத் தடுக்கிற அந்தகார வல்லமைகளைக் கீழ்ப்படுத்துவதற்கான ஆவிக்குரிய யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. எக்காளங்களின் முழக்கத்திலும், இஸ்ரவேல் புத்திரர் மகா ஆரவாரமாய் ஆர்ப்பரித்த தொனியிலும், எரிகோவின் மதில்கள் தரைமட்டமாய் இடிந்து விழுந்ததைப்போலவே, நள்ளிரவு நேரத்தில் தேவனுக்கு நன்றி செலுத்தும்படியாகப் பவுலும் சீலாவும் பாடல்களைப் பாடியபோது, அவர்களைப் பிணைத்திருந்த கட்டுகள் உடைந்து, சிறைச்சாலையின் கதவுகளும் திறவுண்டதைக் காண்கிறோம். அந்நிகழ்வின் முடிவு என்னவாயிற்று என்பதை நாம் பார்ப்போமானால், ஜனங்கள் இரட்சிக்கப்பட்டதையும், கிறிஸ்துவின் மகிமையான விடுதலைக்குள்ளாக அவர்கள் அடியெடுத்து வைத்ததையும் நாம் காண முடிகிறது.

பழைய ஏற்பாட்டில் அனைவர் கண்களும் காண, தேவன் இஸ்ரவேல் புத்திரருக்கு அசாத்தியமான வெற்றிகளை அளித்தது, நமக்கு நினைவூட்டுவது என்னவெனில், வான மண்டலப் பொல்லாத ஆவிகளுக்கு எதிராக யுத்தம் செய்ய நமக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தேவையில்லை. மாறாக, கிறிஸ்துவின் நாமத்தினால் இருவர் அல்லது மூவர் ஒருமனப்பட்டுக் கூடி ஜெபிக்கும் ஜெபத்தின் வல்லமையினாலேயே அவை முற்றிலும் வீழ்த்தப்படும் என்பதே ஆகும்.

"பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத்தேயு 18:18,19).

முடிவாக, ஆகாயத்து அதிகாரப் பிரபுவானது எப்போதுமே தேசங்களை அந்தகாரத்தில் வைத்திருக்கும்படியாகத் தன் முழு வல்லமையோடும் எதிர்த்து நிற்கிறது. ஆனால் நாமோ, தைரியத்துடன் முன்னேறிச் சென்று, தேசங்களையும், பிரதேசங்களையும், தேவனுடைய நாமத்திற்கென்று ஜெயமெடுத்து, உரிமைப்படி நமக்குச் சொந்தமானதைச் சுதந்தரித்துக்கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம்.

நல் மீட்பர் பட்சம் நில்லும்
இரட்சண்ய வீரனே;
ராஜாவின் கொடியேற்றி,
போராட்டம் செய்யுமே:
சேனாதிபதி இயேசு
மாற்றாரை மேற்கொள்வார்,
பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார்.
         -ஜார்ஜ் டஃப்பீல்ட் (1858).