நாமனைவரும் பரபரப்பானதும் தொல்லைகள் நிறைந்ததுமான ஒரு உலகத்தில் வாழ்கிறோம். இந்த ஸெல்ஃபி உலகில், பிள்ளைகள் தாங்கள் “விரும்பத் தக்கவர்களாகத்” தோற்றமளிப்பதற்குப் படாதபாடுபடுகிறார்கள். மாணவர்களுள் சிலர், போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் தங்களது தகுதிச் சான்றிதழ்களை “வசீகரமானவையாக” உருவாக்கிக்கொள்வதற்காக உழைத்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் மற்ற மாணவர்கள், தொலைந்து, அழிந்துகொண்டிருக்கும் இன்றைய உலகில், தங்கள் பாவங்களிலிருந்தும், அடிமைத்தனங்களிலிருந்தும் மீண்டு, வெளிவருவதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அனைத்திற்கும் தீர்வு தேடும் இவ்வுலகில் இன்னும் சிலர், சமூக ரீதியான தனிமை மற்றும் மனச்சோர்விலிருந்தும்கூட வெளிவருவதற்காகப் பிரயாசப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பெரியவர்களுள் சிலர், வேலைகளில் உயர்ந்த நிலையை அடைய முயற்சித்துக்கொண்டிருக்கும்பொழுது, வேறு சிலரோ, தங்கள் வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிப்பதிலேயே இன்னும் உழன்றுகொண்டிருக்கிறார்கள். சில பெற்றோர்கள், தமது பிள்ளைகளின் இரட்சிப்பைக் குறித்த அல்லது அலைந்து திரியும் தங்கள் பிள்ளைகளை மீட்டெடுக்கும் பாரத்தைச் சுமந்துகொண்டிருக்கையில், மற்றவர்கள் வயதான தங்கள் பெற்றோர்களைப் பற்றிய பாரத்தைச் சுமந்து திரிகிறார்கள். வயது முதிர்ந்தவர்கள் தங்களுடைய சரீர ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரச் செழிப்பைப் பற்றிய பாரத்தோடிருக்கிறார்கள். இவ்வுலகப் பிரயாசத்தின் கடுமையிலிருந்து யாருக்கும் விலக்கு இல்லை. வாழ்க்கையின் களைப்பிலிருந்து யாருக்கும் விலக்கு இல்லை. இந்தக் காரணத்தினால்தான், இயேசு:
“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்” (மத்தேயு 11:28-30).


இயேசுவின் வார்த்தைகளிலிருந்து, குறைந்தபட்சம் மூன்று அற்புதமான சத்தியங்களை நாம் காணலாம்.

1. கிருபையுள்ள ஒரு அழைப்பு
என்னிடத்தில் வாருங்கள். இது கிருபையுள்ள ஒரு அழைப்பு. இந்தக் கிருபையுள்ள அழைப்பு யாருக்கு விடுக்கப்படுகிறது? எல்லாருக்கும் இந்தக் கிருபையுள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது. குறிப்பாக, வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிற எல்லாருக்கும், களைத்தும், சுமைகளால் அழுத்தப்பட்டும் இருக்கிறவர்களுக்கும் மற்றும் உற்சாகமிழந்தும், விரக்தியடைந்தும் இருக்கிறவர்களுக்கும் இவ்வழைப்புக் கொடுக்கப்படுகிறது.
பாவத்தின் பாரத்தை நீங்கள் சுமந்துகொண்டிருக்கிறீர்களா? துயரத்தின் ஒரு சுமை உங்கள் மேல் சுமந்திருக்கிறதா? கவலையை ஒரு சுமையாய்ச் சுமந்து திரிகிறீர்களா? விசனம் ஒரு பாரமாய் உங்களை அழுத்திக்கொண்டிருக்கிறதா? தோல்வியைச் சுமந்து தள்ளாடுகிறீர்களா? பாரச்சுமையை நீங்களே சுமந்து திரிந்ததெல்லாம் போதும். இயேசுவிடம் வந்துதான் பாருங்களேன். இயேசுவிடம் வருவதற்காக நீங்கள் உங்கள் பாரங்களை இறக்கிப் போட்டுவிட்டு வர வேண்டிய அவசியமில்லை. உங்கள் அதிக வருத்தமும், பாரச்சுமையுமே இயேசுவிடம் வருவதற்கு உங்களைத் தகுதிப்படுத்துகின்றன. யோவான் 6:37-ல், இயேசு கூறுகிறார், “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.” இது அற்புதமானதல்லவா? இது உற்சாகமூட்டுகிறது, இல்லையா? தம்மிடத்தில் வருகிற எவரையும் அவர் புறம்பே தள்ளிவிட மாட்டார்.
நீங்கள் இயேசுவிடம் வந்தால் உங்களுக்கு என்ன நடக்கும்? உங்களுக்கு வழங்குவதற்கென்று அவரிடம் மகிமையானதொன்று இருக்கிறது. இயேசு வழங்கவிருப்பது என்ன என்பதைப் பார்ப்போம்.

2. மகிமையான ஓர் ஈவு
இயேசுவின் கிருபையுள்ள அழைப்பை ஏற்று நீங்கள் அவரிடம் வந்தால், அவர் வழங்கும் இளைப்பாறுதல் என்கிற மகிமையான ஈவைப் பெற்றுக்கொள்வீர்கள். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிற எல்லாருக்கும், களைத்தும், சுமைகளால் அழுத்தப்பட்டும் இருக்கிறவர்களுக்கும்;, உற்சாகமிழந்தும், விரக்தியடைந்தும் இருக்கிறவர்களுக்கும், கலங்கிப் போய், உடைக்கப்பட்டவர்களாய் இருக்கிறவர்களுக்கும் கொடுக்கப்படும் மகிமையான ஓர் ஈவு, இளைப்பாறுதல்தான்.
நாம் கவனிக்கவேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்களை இங்கு நான்
குறிப்பிட விரும்புகிறேன். முதலாவது, அது இயேசுவின் மகிமையான ஈவு. அதாவது, அவர் வழங்கும் அந்த இளைப்பாறுதல் ஒரு பரிசு. இயேசு சொல்கிறார், “நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்வதற்காக நீங்கள் இயேசுவுக்கு எதையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அது இலவசமான ஒரு பரிசு. சிலுவையிலே இயேசு கிறிஸ்துவின் என்றென்றைக்குமான ஒரே பரிகாரக் கிரியையானது, இந்த மகிமையான ஈவை ஒரு இலவசப் பரிசாக்கி இருக்கிறது. நீங்கள் இப்பரிசை வாங்கத் தேவையுமில்லை, உங்களால் வாங்கவும் முடியாது, அதை நீங்கள் பெற்றுக்கொள்ள மட்டுமே முடியும்.
இரண்டாவது, அவரது மகிமையான ஈவு, உங்கள் சரீரங்களுக்கான ஓய்வு மாத்திரம் அல்ல, ஆனால் உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல். மத்தேயு 11:28-30-ல், இயேசு இரு முறைகள் இளைப்பாறுதலைப் பற்றிப் பேசுகிறார். இயேசு இரண்டாம் முறை இளைப்பாறுதலைக் குறிப்பிடும்போது, அவர், “உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” என்கிறார். இந்த மகிமையான ஈவானது, உழைப்பு, பிரயாசம், வேதனை, வருத்தம் ஆகிய இவற்றுக்கு மத்தியில் உங்கள் சரீரங்களுக்கு ஓய்வு என்னும் தற்காலத்துக்கான வாக்குத்தத்தத்தையும், உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் என்னும் வருங்காலத்துக்கான வாக்குத்தத்தத்தையும் கொண்டுள்ளது. இயேசு இப்பொழுது வழங்கும் இவ்விளைப்பாறுதலானது, உழைப்பதிலிருந்து முற்றிலுமாக ஓய்ந்திருப்பதைக் குறிக்கவில்லை. நாம் இப்பொழுது உழைப்போம், ஆனால் நமது உழைப்பிலே திருப்தி, சந்தோஷம், அர்த்தம் மற்றும் நோக்கம் ஆகியவற்றை அனுபவிப்போம். வருங்காலத்துக்கான வாக்குத்தத்தமானது, தேவனின் மகிமையான சமூகத்தில் அடையும் நித்திய இளைப்பாறுதலாகும். முட்களற்ற, குருக்குகளற்ற, வியர்வையற்ற உழைப்பையும், இளைப்பாறுதலையும் தேவ சமூகத்தில் நாம் அடைவோம்.
இயேசுவிடம் வாருங்கள் – இது ஒரு கிருபையுள்ள அழைப்பு. உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் – இது ஒரு மகிமையான ஈவு. கடைசியாக, அனைவரையும் அழைத்து, இளைப்பாறுதலை வழங்குபவர் எப்படிப்பட்ட நபர் என்பதைப்பற்றிப் பார்ப்போம்.

3. சாந்தமுள்ள இரட்சகர்
இயேசுவைச் சாந்தமுள்ள இரட்சகராக, மத்தேயு 11:29 விவரிக்கிறது. இயேசு
தமது சொந்த இருதயத்தைக் குறித்துக் கூறுமிடம், வேதத்திலேயே இது ஒன்றுதான். அவர், இருதயத்தில் கடுமையும், கர்வமும் உள்ளவர் அல்ல. அவர், இருதயத்தில் முரட்டுத்தனமானவரும், மேட்டிமையானவரும் அல்ல. அவர், இருதயத்தில் மென்மையும், பணிவும் உள்ளவர். வேறொரு வகையில் சொன்னால், அவர், இருதயத்தில் சாந்தமும், தாழ்மையும் உள்ளவர். அவர் தம்மிடத்தில் வருகிறவர்களுக்கு இப்படிப்பட்டவராகவே இருக்கிறார். உங்கள் வாழ்க்கையிலேயே நீங்கள் சந்திக்கக்கூடிய மிக மிக மென்மையான, சாந்தமான மற்றும் தாழ்மையான நபர் இயேசுவே.
இந்த சாந்தமுள்ள இரட்சகர் வழங்கும் நிகழ்காலத்துக்குரிய ஓய்வு எதற்கு ஒப்பாயிருக்கிறது? வசனம் 29-ல், இயேசு சொல்கிறார், “என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்.” நுகம் என்பது இரு எருதுகளின்; மீது வைக்கப்படும் பாரமான ஒரு குறுக்குச் சட்டமாகும். அது இரு எருதுகளை ஒன்றாகப் பிணைக்கிறது. ஒருவேளை, இப்பொழுது, “நீங்கள் என்னைக் கேலி செய்கிறீர்களா? இயேசுவிடம் வந்த பின்பு நான் ஒரு நுகத்தைச் சுமக்க வேண்டியிருக்குமா, என்ன?” என உங்களுக்குள் நீங்கள் கேட்டுக்கொள்ளக்கூடும்.
முதலாவதாக, வசனம் 30-ல், என் நுகம் கடினமானதாயும், என் சுமை பாரமானதாயும் இருக்கிறது என்று இயேசு கூறவில்லை. மாறாக, இயேசு, “என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது” எனக் கூறுகிறார். சுருக்கமாகச் சொல்வதானால், இயேசு, என் நுகம் ஒரு நுகமோ, என் சுமை ஒரு சுமையோ அல்ல என்கிறார். ஜே. சி. ரைல் அழகாகக் கூறியிருக்கிறார்: “ஒரு பறவைக்கு அதன் இறகுகள் எப்படியோ, அதைவிட அவரது நுகம் ஒருபோதும் பாரமாயிருக்காது.” அவர் ஏற்கெனவே சிலுவையில் பெரும் பாரச் சுமையைச் சுமந்து விட்டார். இனி நான் ஒரு பாரச் சுமையைச் சுமக்கத் தேவையில்லை. நீங்களும்கூடச் சுமக்கவேண்டிய அவசியமில்லை.
இரண்டாவதாக, அவருடைய நுகத்தை நீங்களே சுயமாகச் சுமந்துகொண்டு போகவில்லை. உலகத்திலிருக்கிறவனைக் காட்டிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர், உறுதியானவர் மற்றும் வல்லவர். அவரே நம் சாந்தமுள்ள இரட்சகர். அவர் ஒரு கடினமான கண்காணி அல்ல. மென்மையான இருதயமுள்ள மற்றொருவரின் பெலன், உங்களோடிணைந்து சுமையை இழுக்கிறது. பாரமான சுமையைச் சுமந்து செல்லும் யாரொருவருக்கும், தேவகுமாரனுடன் ஒரே நுகத்தில் பிணைக்கப்படுவது என்பது, கிடைத்தற்கரிய மிகச்சிறந்த பரிசாகும். நீங்கள் கிறிஸ்துவுடன் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருப்பதால், பெலன் உங்களுக்குக் கடந்து வருகிறது.
மூன்றாவதாக, இயேசு அவரது நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ள மட்டும் சொல்லவில்லை. நீங்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் சொல்கிறார். அவர்மீது சார்ந்துகொண்டு, அவரிடமிருந்து கற்றுக்கொள்கிறதான ஒரு ஆயுட்காலப் பயணமாக அது அமையப் போகிறது. அது அவருடனான ஒரு இனிமையான உறவின் ஐக்கியமாய் இருக்கும். நீங்கள் சுமந்து செல்லும் பாரத்தைப் பற்றியும், உங்களது பாடுகள், உங்கள் கவலைகள் மற்றும் பயங்களைப் பற்றியும் அவரிடம் பேசுவீர்கள். அவரும் உங்களிடம் பேசுவார். அவரிடமிருந்து, உங்களுக்குத் தேவையான உதவியையும், பெலனையும் பெற்றுக்கொள்வீர்கள்.

இயேசுவிடம் வருவதென்பது, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கப் போகும் மகிமையான ஒன்றின் தொடக்கம் மட்டுமே. நீங்கள் இதை வாசிக்கிறபொழுது, நான் உங்களிடம் இதைக் கேட்க விரும்புகிறேன். சாந்தமுள்ள இரட்சகராகிய இயேசுவிடம் இன்று நீங்கள் வருவீர்களா? கிறிஸ்துவின் கரங்கள் என்றும் திறந்தே இருக்கின்றன. நீங்கள் நிகழ்கால ஓய்விற்காகவும், நித்திய இளைப்பாறுதலுக்காகவும் அவரிடம் வருவதற்காக அவர் தமது பு+ரணப் பொறுமையை உங்களுக்கு வெளிப்படுத்துகிறார். அது உங்களுக்கு வழங்கப்படுவதாயிருக்கிறபோதிலும், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தப் பரிமாற்றம் நிகழாவிடில், சாந்தமுள்ள இரட்சகர் உங்களுக்கு வழங்க விரும்புவது பலன் தராது.