< முன் பகுதி




அடுத்த பாடம் >

lesson-10

தைரியம்

எண்ணாகமம் 13: 1-33

பாடம் 10 – தைரியம்​


Download PDF

வேதவசனம்
பாடம்
கேள்விகள்
வேதவசனம்

எண்ணாகமம் 13: 1-33

1. கர்த்தர் மோசேயை நோக்கி:

2. நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார்.

3. மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.

4. அவர்களுடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் குமாரன் சம்முவா.

5. சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் குமாரன் சாப்பாத்.

6. யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் குமாரன் காலேப்.

7. இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் குமாரன் ஈகால்.

8. எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் குமாரன் ஓசேயா.

9. பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் குமாரன் பல்த்தி.

10. செபுலோன் கோத்திரத்தில் சோதியின் குமாரன் காதியேல்.

11. யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் குமாரன் காதி.

12. தாண் கோத்திரத்தில் கெமல்லியின் குமாரன் அம்மியேல்.

13. ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் குமாரன் சேத்தூர்.

14. நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் குமாரன் நாகபி.

15. காத் கோத்திரத்தில் மாகியின் குமாரன் கூவேல்.

16. தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே; நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.

17. அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,

18. தேசம் எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும்,

19. அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும்,

20. நிலம் எப்படிப்பட்டது, அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும், அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாயிருந்தது.

21. அவர்கள் போய், சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து,

22. தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது.

23. பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள ஒரு திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டுபேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள்: மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள்.

24. இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்னப்பட்டது.

25. அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள்.

26. அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையார் அனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.

27. அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி.

28. ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம்.

29. அமலேக்கியர் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர் கடல் அருகேயும் யோர்தானண்டையிலும் குடியிருக்கிறார்கள் என்றார்கள்.

30. அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.

31. அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ: நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள்.

32. நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள்.

33. அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.

பாடம்

 

தேவன் மேகஸ்தம்பத்தினாலும், அக்கினிஸ்தம்பத்தினாலும் தம் ஜனங்களுக்கு முன்பாகக் கடந்துசென்று, வனாந்தர வழியாய் அவர்களை நடத்தினார். ஒவ்வொரு நாள் காலையிலும் அவர்கள் சேகரித்த உணவை அவரே அனுப்பி, அவர்களைப் போஷித்தார். ஆனால், தேவன் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்குப்பண்ணிய தேசத்தை அவர்கள் நெருங்கியபோது, அவர்களைப் பயம் சூழ்ந்துகொண்டது. அவர்கள் விசுவாசத்தைச் செயல்படுத்துவார்களா? அல்லது பயத்திற்கு இடங்கொடுப்பார்களா?

தேவனுக்குக் கீழ்ப்படிவது மிகவும் சிரமமானதொன்றாகத் தோன்றும் ஓரிடத்துக்கு நிச்சயம் ஒருநாள் நீங்கள் வருவீர்கள். இஸ்ரவேலர்களுக்கு அது விரைவிலேயே ஆயிற்று. தேவன், இஸ்ரவேல் புத்திரரில் புருஷர்களாகிய சகல தலைகளையும், இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் கணக்கெடுக்கும்படி, மோசேயிடம் கூறினார் (எண்ணாகமம் 1:2-3). அதுதான், இந்தப் புத்தகம் எதைப்பற்றியது என்பதை நமக்குக் கூறுகிறது – தேவன் இந்த ஜனங்களை யுத்தத்திற்கு நேராக வழிநடத்தினார். அவர்களுக்கு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள ஏதுவாயிருக்கக்கூடிய ஒரு இராணுவ நடவடிக்கைக்கு, அவர்களை அவர் ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தார். கடினமான யுத்தங்களும், இறுதி வெற்றியும் அவர்களுக்கு முன்பாக இருந்தன.

கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு,” என்றார் (எண்ணாகமம் 13:1-2). மோசே, சுற்றிப்பார்ப்பவர்களை அனுப்பினான். அவர்கள், தேசம் முழுவதும் நாற்பது நாட்கள் பயணித்து, விவரங்களைச் சேகரித்தார்கள். ஆனால், அவர்கள் திரும்பி வந்தபோது, காரியங்கள் பயங்கரத் தவறுதலாகிப்போயின. பெரும்பான்மையானவர்கள், தேசத்தை வெல்ல முடியாது என்ற நோக்கிலேயே நின்றனர். அவர்களது அவநம்பிக்கையானது பரவியபோது, ஜனங்கள் ஊக்கமிழந்தனர்.

எண்ணாகமம், தேவையற்ற சுற்றுவழிப்பாதையின் கதையாகும். தேவஜனங்கள், நல்வாய்ப்பின் திறந்த வாசல் ஒன்றை எதிர்கொண்டார்கள். ஆனால், அவர்கள் விரைவாய் முன்னேறிச் செல்லாமல், பின்வாங்கிப்போனார்கள். இந்த வரலாறு, கோழைத்தனமான தீர்மானங்களின் நீண்ட, நெடுங்காலப் பின்விளைவுகளைப் பற்றி நம்மை எச்சரிக்கிறது. அத்துடன், இந்த மக்கள் தவறிழைத்தது எங்கே என்பதை நாம் புரிந்துகொள்ள முடிந்தால், அவர்களது தவறுகளை மீண்டும் நாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்காமல் தவிர்க்க அது நமக்கு உதவும்.

குறைகூறும் மக்கள்

தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து விரைந்து முன்செல்வதற்குப் பதிலாக, ஜனங்கள் தங்கள் இன்னல்கள், தங்கள் உணவு மற்றும் தங்கள் தலைவர்களைப்பற்றிக் குறைகூறினார்கள் (காண்க எண்ணாகமம் 11:1, 4-6; 12:1).

தேவன், குறைகூறுபவர்களும், முறுமுறுக்கிறவர்களும் தேசத்திற்குள் பிரவேசிக்க மாட்டார்கள் என்று தீர்மானித்தார் (எண்ணாகமம் 14:22-23). ஆகவே, அந்தத் தலைமுறை முழுவதும் மரித்து, அவர்களது பிள்ளைகள் அவர்களது ஸ்தானத்திற்கு வரும்வரை, அடுத்த முப்பத்தெட்டு ஆண்டுகளை அவர்கள் வனாந்தரத்தில் கழித்தார்கள்.

குறைகூறுதல் எப்பொழுதுமே ஆபத்தானது. இந்தக் கதையின் துயரம் என்னவெனில், சிறப்பான காரியங்கள் இனிதான் வரவிருக்கின்ற பட்சத்தில், தேவன் ஆசீர்வதித்த ஜனம், அவர் கொடுத்தவற்றின்மட்டில் அதிருப்தியாகிப்போனார்கள்.

ஒரு மோசமான மனப்பான்மை உங்களுக்கிருக்கும்போது, நல்ல முடிவுகளை எடுப்பது கடினம். தேவன் உங்களுக்குக் கொடுத்திருப்பவற்றைப் பொறுத்தமட்டில் நீங்கள் அதிருப்தியாயிருந்தால், எச்சரிக்கை! தேவனுடைய ஜனங்கள் தங்கள் வாழ்நாட்காலத்துக்குமான தவறைச் செய்தபோது, அதே நிலையில்தான் இருந்தார்கள்.

ஒரு விமர்சன மனப்பான்மையின் ஆவி, அவர்களது ஆவிக்குரிய நிலைப்பாடுகளிலிருந்து பின்வாங்கச் செய்தது. அது தேவனிடத்தில் அவர்களுக்கிருந்த அர்ப்பணிப்பின் வைராக்கியத்தை உறிஞ்சியெடுத்து, ஆவிக்குரிய தள்ளாடுதலுக்குள் அவர்களை விட்டுவிட்டது. அதனால், தீர்மானிக்கவேண்டிய தருணம் வந்தபோது, அவர்கள் தவறான திசையில் திரும்பிவிட்டார்கள். விமர்சிப்பதும், குறைகூறுவதுமான மக்கள், பொதுவாகத் தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பதில்தான் போய் நிற்பார்கள். ஒரு தவறான முடிவுக்குப் பின்னால், ஒரு மோசமான மனப்பான்மையை நீங்கள் எப்போதுமே காணக்கூடும்.

மெத்தனநிலைத் தலைவர்கள்

தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றத் தகுந்த திட்டத்தை வகுக்க உதவக்கூடிய தகவல்களைத் திரட்டிவருமாறு, மோசே பன்னிரண்டு தலைவர்களை அனுப்பிவைத்தான் (எண்ணாகமம் 13:3). ஆனால், எதிரியின் எல்லைகளுக்குள் நாற்பது நாட்கள் உளவுப் பயணம் மேற்கொண்டபின், அவர்கள் திரும்பிவந்ததென்னவோ, தேவனின் சித்தம் நடைமுறைக்கு ஒத்துவராது என்று மோசேயிடம் சொல்வதற்குத்தான்! “நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள்” (13:31). சுற்றிப்பார்த்தவர்கள் சொன்னது, “நம்மால் அதைச் செய்ய முடியாது. தேசம் ஏற்கெனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நமக்கு அப்பாற்பட்டது,” என்பதுதான்.

அவர்கள் தங்களது அறிக்கையில் தேவனைப் பற்றிக் குறிப்பிடவேயில்லை என்பதைக் கவனியுங்கள். இந்தத் தலைவர்கள், “நாம் என்ன செய்யவேண்டுமென்று தேவன் விரும்புகிறார்?” என்று கேட்பதை நிறுத்திவிட்டு, அதற்கு மாறாக, அதைச் சமாளிப்பது எப்படி என்று தங்களுக்குத் தோன்றியவற்றின் மீது தங்கள் கவனத்தை வைத்தார்கள். தலைமைத்துவம் இதுபோன்ற சமாளிப்பு வேலைகளில் இறங்கும்போதெல்லாம், அது தேவனுடைய ஜனங்களுக்கு மிகுந்த நஷ்டமானதொன்றாக இருக்கும். நாம் செய்யவேண்டுமென்று தேவன் அழைத்திருக்கும் அழைப்பிலிருந்து நமது கவனத்தை இழந்தோமானால், சீக்கிரத்திலேயே நாம் இலக்கின்றி வனாந்தரத்தில் அலைந்து திரிகிறவர்களாகக் காணப்படுவோம்.

உளவாளிகளுள் இருவரான, யோசுவாவும், காலேபும், தேவன் தங்களோடு இருக்கிறார் என்ற உண்மையின்மேல் பார்வையைப் பதித்து, ஒரு சிறுபான்மை அறிக்கையை வழங்கினார்கள். ஆனால், பேசுவதற்கு அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்கப்படுவதற்குள், ஜனங்கள் ஏற்கெனவே தீர்மானித்துவிட்டிருந்தனர்.

நிலைமை கைமீறிப் போவதற்கு மோசே அனுமதித்தான். முதலாவது, ஆய்வு செய்துகொண்டுவந்த குழுவினர், தவறான கூட்டத்தினரிடம் தங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்தார்கள். சுற்றிப்பார்த்தவர்கள் மோசேயால் பணிநியமிக்கப்பட்டவர்கள். ஆனால், அவர்கள் தங்கள் அறிக்கையை, எல்லாருக்கும் சமர்ப்பித்தார்கள். இரண்டாவது, அவர்கள் தங்கள் அதிகார வரம்பை மீறினார்கள். மோசே கேட்டது தகவல்களைத்தான். ஆனால், சுற்றிப்பார்த்தவர்களோ, ஒரு பரிந்துரையையே செய்தார்கள். இதன் விளைவாக, முதலாவது தங்கள் முன் ஒருபோதும் கொண்டுவரப்பட்டிருக்கக்கூடாத ஒரு விஷயத்தில், ஜனங்கள் ஒரு தவறான தீர்மானத்தை எடுப்பது வரை நிலைமை சென்றது. தீர்மானிக்கப்பட்டிருக்கவேண்டிய கேள்வி, அவர்கள் கானானுக்குள் செல்லலாமா என்பதல்ல. மாறாக, அவர்கள் கானானுக்குள் எப்படிச் செல்லவேண்டும் என்பதுதான். மெத்தனமும், நிர்வாகக் கோளாறும் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் பேரழிவின் விளிம்புவரை கொண்டுசென்றது.

இங்கே நமக்கு, மிக முக்கியமான பாடங்கள் சில இருக்கின்றன. தேவனின் ஜனங்கள் அவரது நோக்கங்களை நிறைவேற்றவேண்டுமானால், அவர்கள் நன்றியறிதலுள்ளவர்களாகவும், அவர்களது தலைவர்கள் உண்மையுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். அவர்கள் தகவல்களுக்கப்பால் பார்க்கவும், தேவனை விசுவாசிக்கவும் வேண்டும். எந்தவொரு சபையும் ஆரோக்கியமாய் இயங்குவதற்கான, இன்றியமையாத இரு பரிசோதனைகள் இதோ: ஜனங்களிடையே நன்றியறிதலும், ஒருமனப்பாடுமான ஆவி இருக்கிறதா? தலைவர்களிடையே விசுவாசம் இருக்கிறதா?

வேதனை மிகுந்த கீழ்ப்படிதலுக்கு உங்கள் வாக்கைச் செலுத்துதல்

நாமாக இருந்திருந்தால், கானான் தேசத்துக்குள் பிரவேசிப்பதற்கு வாக்களித்திருப்போம் என்று கற்பனை செய்துகொள்வது நமக்கு எளிதுதான். ஆனால், தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவது என்பது, கணவன்மார்களும், தகப்பன்மார்களும் கொல்லப்படுகிற ஆபத்திற்கும், பிள்ளைகள் சிறையாக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுகிற ஆபத்திற்கும் வழிதிறக்கும் என்று நீங்கள் அறிந்திருந்தால், தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு மெய்யாகவே அத்தனை சீக்கிரத்தில் நீங்கள் வாக்களித்திருப்பீர்களா (உபாகமம் 1:39)?

இதில் பெரிய முரண்பாடு என்னவெனில், அந்தப் பெற்றோர்கள் மட்டும் தேவனுக்கு அப்படியொரு விலையேறப்பெற்ற கீழ்ப்படிதலின் பாதையைத் தெரிந்துகொண்டிருந்தால், அவர்களின் பிள்ளைகள் “பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தில்” (லேவியராகமம் 20:24) வளர்ந்துவந்திருப்பார்கள் என்பதுதான். ஆனால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை முதலிடத்தில் வைத்ததால், அவர்கள் பல ஆண்டுகளை வனாந்தரத்தில் அலைந்து திரிவதிலேயே கழித்தனர். கீழ்ப்படிதலுக்கு எப்பொழுதுமே ஒரு விலையுண்டு. ஆனால், தங்கள் பிள்ளைகளுக்கு முதலிடம் கொடுத்ததால், இந்தப் பெற்றோர்கள் தங்களுக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் மிகப்பெரியதொரு தீங்கிழைத்துக்கொண்டார்கள்.

தேவன், அந்த வனாந்தரத்திலும் தமது ஜனங்களிடத்தில் உண்மையுள்ளவராகவே இருந்தார். அவர் அவர்களுக்கு அனுதினமும் உணவளித்ததுடன், அவர்களை விட்டு அவர் ஒருபோதும் விலகவேயில்லை. ஆனால், தேவனுடைய அபரிமிதமான கிருபையை அனுபவித்துவிட்ட இந்தத் தலைமுறை மக்களோ, அவரது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு எதையுமே செய்ய முன்வரவில்லை. இந்த ஆபத்தை நாம் காணும்போது, எழும் மிகப்பெரிய கேள்வி, “நாம் எப்படி அதைப்போல நடந்துகொள்வதைத் தவிர்க்கப்போகிறோம்?” என்பதுதான்.

உங்கள் அழைப்பைப் புரிந்துகொள்ளுங்கள்

முதலாவது, நிபந்தனையற்றதொரு கீழ்ப்படிதலின் வாழ்வுக்குத்தான் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். ஜனங்கள் கானான் தேசத்துக்குள் பிரவேசிக்கவேண்டும் என்பதே, எண்ணாகமப் புத்தகத்தில் இஸ்ரவேலைக் குறித்துத் தேவனின் சித்தமாயிருந்தது. இன்று நம்மைப் பற்றிய தேவ சித்தம், பிரதான கற்பனையாகிய (“‘உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும்… ஜமற்றும்ஸ உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக’” மாற்கு 12:29-31), என்பதையும், பிரதான பணியாகிய (“புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்” மத்தேயு 28:19), என்பதையும், உள்ளடக்கியது.

உங்களை நேசிக்காத மக்களை நேசிப்பதற்கும் தைரியம் தேவைப்படுகிறது. சுவிசேஷத்தின் நம்பிக்கையைக் கேட்க விரும்பாத மக்களிடத்தில் அதைப் பகிர்ந்துகொள்ளவும் தைரியம் தேவைப்படுகிறது. ஆனால், இதைச் செய்யும்படியாகத்தான் தேவன் நம்மை அழைக்கிறார்.

எவ்வளவுக்கு அதிகமாக உங்களைத் தேவன் ஆசீர்வதிக்கிறாரோ, அவ்வளவுக்கு அதிகமாகத் தைரியமான ஒரு வாழ்க்கை வாழ்வது கடினமாயிருக்கிறது. நமது சௌகரியம்தான் மிக முக்கியமான ஒன்று என்ற மனப்பான்மையை நாம் அடைவது எளிது. ஆனால், சௌகரியமான ஒரு வாழ்க்கைக்கு மட்டுமே தேவன் நம்மை அழைக்கவில்லை. நாம் இனி நமக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கக் கூடாது என்றே கிறிஸ்து நமக்காக மரித்தார். மேலும், அவரது சித்தம் உலகில் நிறைவேற, நம்மை அவர் உலகிற்குள் அனுப்புகிறார்.

விலை மதிப்பிடுதல்

இரண்டாவது, இந்தக் கீழ்ப்படிதலின் வாழ்வுக்கான விலையை நாம் கணக்கிடவேண்டும். தேவன் தமது ஜனங்களை எகிப்திலிருந்து விடுவித்தபோது, பகை நாடுகளின் வழியாய் அவர்களை நேரடியாகக் கொண்டுசெல்வதற்குப் பதிலாக, வனாந்தர வழியாய் அவர்களை நடத்திக்கொண்டுசென்றதன் மூலம், அவர்களது அழைப்பு முழுமையும் விரயமாவதிலிருந்து அவர்களைப் பாதுகாத்தார். ஏனெனில் தேவன், “ஜனங்கள் யுத்தத்ததைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள்,” என்று சொன்னார் (யாத்திராகமம் 13:17). ஆனால் காலப்போக்கில், கீழ்ப்படிதல் அதிக மதிப்புவாய்ந்ததாக இருந்த ஒரு நிலைக்கு அவர்களைக் கொண்டுவந்தார்.

ஒரு போதகரை, அவரது தந்தை ஒருமுறை ஒரு ஏலத்திற்கு அழைத்துச் சென்றார். அப்பொழுது தந்தை அவரிடம், “நீ ஏலம் எடுக்கப்போகிறாய் என்றால், உனது உச்சவிலை வரம்பைப் பற்றி நிர்ணயித்துக்கொள்,” என்று கூறினார். அது, ஓர் ஏலத்துக்குச் செல்லும் எவருக்குமான சிறந்ததொரு ஆலோசனையாகும். ஆனால், கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அது மிக மோசமானதொரு அணுகுமுறையாக இருக்கும்.

நாம் ஓர் உச்சவிலை வரம்பை நிர்ணயிக்க, இயேசு நம்மை அனுமதிக்க மாட்டார். அவர், “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (மாற்கு 8:34), என்று சொன்னார். நமது சிலுவை எது என்று அவர் கூறவில்லை, ஆனால் நாம் அதை எடுத்துக்கொள்ள ஆயத்தமாய் இருக்கவேண்டும் என்றுதான் கூறுகிறார்.

இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாக நாம் இருப்பதனால், “என் பணம் கிறிஸ்துவினுடையது, என் நேரம் கிறிஸ்துவினுடையது, என் வாழ்வு கிறிஸ்துவினுடையது,” என்று நாம் சொல்ல மனதாயிருக்கவேண்டும். அதற்கு மிஞ்சிய உச்சவிலை வரம்பு ஒன்றில்லை.

வெகுமதியின் மீது உங்கள் கண்களை வையுங்கள்

மூன்றாவது, விலைமதிப்பையும் தாண்டி, இயேசுவைப் பின்செல்கிற அனைவருக்கும் வாக்குப்பண்ணப்பட்டுள்ள சிறந்த வெகுமதியை நாம் பார்க்கவேண்டும். “தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்” (மாற்கு 8:35). என்ன விலை கொடுக்கவேண்டியிருந்தாலும் சரி, இயேசுவைப் பின்பற்றுவது என்றுமே மதிப்புவாய்ந்தது.

ஒரு நாள், பணக்காரனான ஒருவன் இயேசுவிடம் வந்து, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள அவன் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். கிறிஸ்து, பணம்தான் அம்மனிதனுடைய ஆவிக்குரிய ஜீவியத்தின் குரல்வளையை அழுத்திக்கொண்டிருக்கிறது என்பதையும், அவனை நிரந்தரமாக விடுவிக்க ஒரே வழி, அவனது செல்வத்தை அவன் விட்டுவிடுவது மட்டுமே என்பதையும் அறிந்திருந்தார். இயேசு, “நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு …பின்பு …என்னைப் பின்பற்றிவா” என்றார் (மாற்கு 10:21). கானானை நெருங்கும்போது தேவஜனங்கள் செய்ததைப்போலவே, இம்மனிதனும் அந்த விலைக்கிரயத்தை எண்ணிப் போராடினான். ஆதலால் அவன், “துக்கத்தோடே போய்விட்டான்” (10:22).

இயேசுவின் வாழ்க்கை மிகவும் வித்தியாசமான விளைவுகளை உடையதாயிருந்தது. அவரது அழைப்பு, சொல்ல முடியாத துயரங்களையும், இழப்பையும் கொண்டிருந்தது (லூக்கா 9:22). ஆனால், அவர் அந்த விலைக்கிரயத்தைச் செலுத்த ஆயத்தமாயிருந்தார். அதை அவர் எப்படிச் செய்தார் என்பதை எபிரெயர் நிருபம் நமக்குக் கூறுகிறது: கிறிஸ்து, “தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு,” சிலுவையைச் சகித்தார் (எபிரெயர் 12:2). வேறு வகையில்; சொல்வதானால், தேவன், இயேசுவுக்கு முன்பாகச் சிலுவையை நிறுத்தியபோது, அவர் அதன் வழியாகப் பார்த்து, அதன் மறுபக்கத்தில் இருந்த சந்தோஷத்தைக் கண்டார். அவர் இறுதி விளைவுகளின் மீது தமது கவனத்தை வைத்தார். அதை ஏசாயா, “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்” (ஏசாயா 53:11), என்று நமக்குக் கூறுகிறார்.

ஆதலால், வித்தியாசமான தெரிவுகளையும், அவற்றின் விளைவுகளையும் பற்றிய இரண்டு கதைகள் இங்குள்ளன. ஒரு கதை, துக்கத்தோடுகூடிய ஒரு மனிதனுடன் முடிவடைகிறது; மற்றொன்று, திருப்தியாகிற ஒரு மனிதருடன் முடிவடைகிறது. விலைக்கிரயத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தேவனுடைய சித்தத்துக்குக் கீழ்ப்படிய அவர்கள் எவ்வளவுக்கு ஆயத்தமாயிருக்கிறார்கள் என்பதில்தான் வித்தியாசம் இருக்கிறது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதை, இவ்விரண்டு வார்த்தைகளில் எது விவரிக்கும் – துக்கப்படுதலா, அல்லது திருப்திப்படுதலா?

சில தலைமுறைகள் மற்றவர்களைவிட, தேவனுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அதிகப் பங்களிப்பாற்றுகிறார்கள். எண்ணாகமப் புத்தகம், காரியம் இப்படித்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பிற்கு நம்மை இட்டுச் செல்கிறது. எல்லாத் தலைமுறைகளும் மனதாரப் பணியாற்றுவதில்லை. தேவஜனங்களிடையே ஒற்றுமையும், அவர்களின் தலைவர்களிடையே தைரியமும், இலக்கின்றி அலைந்து திரிவதிலிருந்து நம்மைக் காத்து, இவ்வுலகில் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்ற நம்மை நிலைநிறுத்தும்.

கேள்விகள்

 1. உங்களுக்குத் தேவன் தந்திருக்கிற (அல்லது தராதிருக்கிற) ஏதேனும் சிலவற்றைப் பற்றி அதிருப்தியடைந்திருக்கிறீர்களா? அதைப்பற்றி உங்களுக்கு நிச்சயமாய்த் தெரியவில்லை எனில், சமீபத்தில் நீங்கள் குறைப்பட்டுக்கொண்டிருந்தது என்னவென்பதைப் பற்றிச் சிந்தியுங்கள்.

2. இந்த அறிக்கைக்குப் பிரதியுத்தரம் சொல்லுங்கள்: “தேவன், உங்களை நிபந்தனையற்றதொரு கீழ்ப்படிதலின் வாழ்வுக்கு அழைக்கிறார்.”

3. தேவனிடத்தில் நீங்கள் பெரும்பாலும் உச்சவிலை வரம்பு நிர்ணயிக்கக்கூடிய இடம் எது? உங்கள் பணமா? உங்கள் நேரமா? உங்கள் வாழ்க்கையா? வேறு ஏதேனுமா?

4. கிறிஸ்தவ வாழ்வின் வெகுமதி என்ன? அதைக்குறித்த தெளிவை நீங்கள் இழக்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்பதை எப்படி அறிந்துகொள்வீர்கள்?

5. நித்தியத்தின் கண்ணோட்டத்திலிருந்து உங்கள் வாழ்க்கையை நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதை, இவ்விரண்டு வார்த்தைகளில் எது விவரிக்கும் – துக்கப்படுதலா, அல்லது திருப்திப்படுதலா?