< முன் பகுதி
அடுத்த பாடம் >

பாவம்

2 இராஜாக்கள் 17:6-28

பாடம் 18 – நீதிDownload PDF

வேதவசனம்
பாடம்
கேள்விகள்
வேதவசனம்

2 இராஜாக்கள் 22:1-20

1. யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் எதிதாள்.

2. அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான்.

3. ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே, ராஜா மெசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் மகன் சாப்பான் என்னும் சம்பிரதியைக் கர்த்தரின் ஆலயத்துக்கு அனுப்பி:

4. நீ பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் போய், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டதும் வாசல் காக்கிறவர்கள் ஜனத்தின் கையிலே வாங்கப்பட்டதுமான பணத்தை அவன் தொகைபார்த்து,

5. பிற்பாடு அவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்கள் கையிலே கொடுத்து, அவர்கள் அதைக் கர்த்தரின் ஆலயத்தைப் பழுது பார்க்கிறதற்காக அதிலிருக்கிற வேலைக்காரராகிய,

6. தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொற்றருக்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி வேண்டிய மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும் செலவழிக்கவேண்டும்.

7. ஆகிலும் அந்தப் பணத்தைத் தங்கள் கையில் ஒப்புவித்துக்கொள்ளுகிறவர்களோ காரியத்தை உண்மையாய் நடப்பிக்கிறபடியினால், அவர்களிடத்தில் அதின் கணக்கைக் கேட்கவேண்டியதில்லை என்று சொல் என்றான்.

8. அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: நான் கர்த்தரின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டுபிடித்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பானிடத்தில் கொடுத்தான்; அவன் அதை வாசித்தான்.

9. அப்பொழுது சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவுக்கு மறுஉத்தரவு சொல்லி, ஆலயத்திலே தொகையிட்டுக் கண்ட பணத்தை உமது அடியார் சேர்த்துக் கட்டி, அதைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்கள் கையிலே கொடுத்தார்கள் என்று சொன்னான்.

10. சம்பிரதியாகிய சாப்பான் பின்னையும் ராஜாவை நோக்கி: ஆசாரியனாகிய இல்க்கியா என்னிடத்தில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்று அறிவித்து, அதை ராஜாவுக்கு முன்பாக வாசித்தான்.

11. ராஜா நியாயப்பிரமாண புஸ்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,

12. ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமுக்கும், மிகாயாவின் குமாரனாகிய அக்போருக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் ராஜா கட்டளையிட்டது:

13. கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் ஜனத்திற்காகவும் யூதாவனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.

14. அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின் குமாரனாகிய திக்வாவின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போய் அவளோடே பேசினார்கள்; அவள் எருசலேமின் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்.

15. அவள் அவர்களை நோக்கி: உங்களை என்னிடத்தில் அனுப்பினவரிடத்தில் நீங்கள் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்:

16. இதோ, யூதாவின் ராஜா வாசித்த புஸ்தகத்தின் வார்த்தைகளிலெல்லாம் காட்டியிருக்கிற பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும், அதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்.

17. அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபமுண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் இந்த ஸ்தலத்தின்மேல் பற்றியெரியும்; அது அவிந்துபோவது இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லுங்கள்.

18. கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீர் கேட்ட வார்த்தைகளைக் குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:

19. நான் இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.

20. ஆகையால், இதோ, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேர்த்துக் கொள்ளுவேன்; நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்வாய்; நான் இந்த ஸ்தலத்தின்மேல் வரப்பண்ணும் சகல பொல்லாப்பையும் உன் கண்கள் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதைச் சொல்லுங்கள் என்றாள்; இந்த மறு உத்தரவை அவர்கள் போய் ராஜாவுக்குச் சொன்னார்கள்.

பாடம்

வடக்கு ராஜ்யம் வீழ்ந்துபோன பிறகு, தெற்கிலிருந்த இரு கோத்திரங்களும் போராட்டங்களைச் சந்தித்தன. அவர்களுடைய அநேக ராஜாக்கள் மாபெரும் பொல்லாப்புகளைச் செய்தார்கள். ஆனாலும், அவர்களுள் ஒருவர் தேவனைத் தேடிப் பின்செல்வதிலே ஆர்வம்கொண்டிருந்தார். யோசியா, தேசத்திலிருந்து விக்கிரகங்களையெல்லாம் அகற்றி, ஒழுக்கநெறிகளின் மிகப்பெரிய மறுசீரமைப்பிற்கு வழிவகுத்தார். ஆனால், ஜனங்களின் இருதயங்கள் மாற்றமடையவில்லை. யோசியாவின் மரணத்திற்குப் பின்பு, தேவஜனங்கள் மீண்டும் தங்களது விக்கிரகங்களிடமே திரும்பினார்கள்.

ஒரு காலைநேரச் செய்தியில், இருபத்தெட்டில் இருபது இந்திய மாநிலங்கள், கூட்டாட்சியை விட்டுவிலகியதுடன், ஒவ்வொன்றும் முழுச்சுதந்திர அரசாங்கத்தையும், ஆயதப்படைகளையும் கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிய நேரிட்டால், நீங்கள் எப்படி உணர்வீர்கள்? அதன்பின்பு, பல்லாண்டுகள் கழித்து, அந்த இருபது சுதந்திர மாநிலங்களும் வீழ்ந்து, எதிரிகளால் கைப்பற்றப்பட்டால், எப்படியிருக்கும்?

எஞ்சியிருக்கும் எட்டு “மாநிலங்களில்” ஒன்றின் குடிமகன் என்ற வகையில், நீங்கள் இனி ஒருபோதும் இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக இருக்கமாட்டீர்கள். மாறாக, மிகச்சிறிய ஒரு தேசத்தின் குடிமகனாக இருப்பீர்கள். ஒருகாலத்தில் பலமானதாகவும், பாதுகாப்பானதாகவும் காணப்பட்ட ஒன்று, இப்பொழுது பலவீனமானதாகவும், பாதுகாப்பற்றதாகவும் காணப்படும்.

யூதாவின் தெற்கு ராஜ்யத்தை உருவாக்கியதான, இரு கோத்திரங்களைச் சார்ந்த தேவஜனங்களுக்கும் அப்படித்தான் இருந்தது. தாவீதின் காலத்தில், ஒன்றுபட்ட பன்னிரண்டு கோத்திரங்களுடன், இஸ்ரவேல் தேசம் ஓர் ஆதிக்க வல்லரசுச் சக்தியாகத் திகழ்ந்தது. ஆனால் பன்னிரண்டில் பத்துக் கோத்திரங்கள், தங்களைச் சுதந்திர தேசமாக அறிவித்துக்கொண்டபின்பு, தெற்குத் தேசத்தின் காரியங்கள் தீவிர மாற்றங்களுக்குள்ளாகின. இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அத்தேசமானது வீழ்ச்சியடைந்தது. இருநூறு ஆண்டுகளுக்குள்ளாக, வடக்கு ராஜ்யம் எதிரிகளால் கைப்பற்றப்பட்டுப் பத்துக் கோத்திரங்களும் சிதறுண்டுபோயின.

ஆபிரகாமின் சந்ததிகளை ஆசீர்வதிப்பதும், அதன்பின்பு அவர்கள் மூலமாக உலகத்தின் தேசங்களனைத்திற்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவருவதுமான தேவனின் வாக்குத்தத்தமானது, மிகவும் சந்தேகத்துக்குரியதாகத் தோன்றியிருக்க வேண்டும். ஆனால், தமது ஜனங்களை ஆசீர்வதிப்பதான தேவனின் வாக்குத்தத்தம், ஒருபோதும் ரத்துசெய்யப்படவில்லை.

மோசமான ஒரு திருப்பம்

பல்லாண்டுகளுக்கு யூதாவின் மக்கள், வடதேசத்திலிருந்த தங்களது சகோதரர், சகோதரிகளைவிட சிறந்ததொரு தலைமைத்துவத்தைப் பெற்றிருந்தார்கள். ஆனால், மனாசே அரியணை ஏறியபோது, காரியங்கள் மோசமான நிலைக்குத் திரும்பத் தொடங்கின. அவர் ஐம்பத்தைந்து வருஷங்கள் அரசாண்டு (2 இராஜாக்கள் 21:1), மற்ற யாவரையும்விடத் தேவஜனங்களுக்கு அதிகத் தொல்லைகளை உண்டுபண்ணினார்: “கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகள் செய்த பொல்லாப்பைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்ய மனாசே அவர்களை ஏவிவிட்டான்” (21:9).

கானானியர்களை, அவர்களது அநேகப் பாவங்களினிமித்தம் அத்தேசத்திலிருந்து தேவன் துரத்திவிட்டார். ஆனால் இப்பொழுதோ, தேவனின் சொந்த ஜனங்கள் அவற்றைக்காட்டிலும் மிக மோசமான காரியங்களைச் செய்துகொண்டிருந்தார்கள். மனாசே, குழந்தைகளைத் தீயிலிட்டுப் பலியிடுகிறதான, ஒரு பொல்லாப்பான சடங்காசாரத்தைக்கொண்ட, மோளேகின் வழிபாட்டை ஊக்குவித்தார் (21:6). தேவன், கானானியர்களை அவர்களது பாவங்களுக்காக நியாயந்தீர்த்தாரெனில், அவர் தமது சொந்த ஜனங்களை நியாயந்தீர்க்காமல் இருப்பாரோ (21:11)? தேவனின் ஜனங்கள், இருண்டதொரு உலகில் வெளிச்சமாயிருக்க அழைக்கப்பட்டார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், அவர்களும் தங்களைச் சுற்றியிருந்த ஜனங்களைப்போல, அதே இருளில்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்!

மனாசேயின் ஆட்சியின் முடிவில், அவரது குமாரனாகிய ஆமோன் அரியணை ஏறினார். ஆனால், அவர் இரண்டாண்டுகள் மட்டுமே நீடித்துப் பின்பு கொலைசெய்யப்பட்டார். அவர் விட்டுச்சென்ற, அவரது எட்டு வயது மகன் யோசியா, ராஜாவானார்.

தேவபக்தியுள்ள ஒரு தலைவனின் தாக்கம்

தனது தகப்பன் மற்றும் தாத்தாவைப் போலல்லாமல் யோசியா, “கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான்” (2 இராஜாக்கள் 22:2).

யோசியா, தன் ராஜ்யபாரத்தின் எட்டாம் வருஷத்தில், அவருக்குப் பதினாறு வயதிருக்கும் காலத்தில், கர்த்தரைத் தேட ஆரம்பித்தார் (2 நாளாகமம் 34:3). ஓர் இளம் வாலிபனாக, அவர் தேவனுக்காகத் தன் இருதயத்தை ஆயத்தம் செய்தார். அது, அவரது முழு வாழ்க்கையையும் வடிவமைத்தது. நீங்கள் இப்போது எதைப் பின்பற்றிச் செல்கிறீர்களோ, அதுதான் நீங்கள் யாராக உருவாகப்போகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கும். கர்த்தரைத் தேடுவதற்கு இது ஏற்ற வயது அல்ல என்று, எந்தவொரு வயதையும் நாம் சொல்லிவிட முடியாது. சிறிய வயதில்கூட, நாம் கர்த்தரைத் தேடலாம்.

தேவஜனங்களைச் சரியான பாதைக்கு மீண்டும் கொண்டுவர யோசியா விரும்பினார். ஆனால், அதை நடப்பிக்கிறதற்கு வேதாகமத்தைப் பற்றிய ஞானமும், பின்பற்றுவதற்குத் தேவபக்தியுள்ள முன்னுதாரணங்களும் அவருக்கு இல்லை. அவர், ஆவிக்குரிய குழப்பத்திலும், வேதாகமத்தைப் பற்றிய அறியாமையிலும் இருந்ததான ஒரு கலாசாரத்தில் வளர்ந்துவந்திருந்தார். எனினும், அவரது இருதயத்தின் ஆழத்தில், தேவனை அறிகிறதற்கான ஓர் ஏக்கம் இருந்தது.

இங்கே ஒரு வெளிப்படையான கேள்வி: நீங்கள் தேவனைத் தேடுகிறீர்கள் என்றால், அவரை எவ்வாறு நீங்கள் கண்டடையப் போகிறீர்கள்? ஒருவேளை நீங்கள், “நான் வித்தியாசமாக இருக்க விரும்புகிறேன். என் குடும்பத்தில், தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டுவரும் காரியங்களை நானும் தொடர விரும்பவில்லை. நான் மாற விரும்புகிறேன். எனக்குத் தேவனின் ஒத்தாசை தேவை என்பதையும் நான் அறிகிறேன். ஆனால், அவரை எப்படிக் கண்டடைவது?” என்று கேட்கலாம்.

வேதாகமத்தை மீண்டும் கண்டடைதல்

தேவாலயத்தில், தேவனைத் தொழுதுகொள்ள முடியும் என்று யோசியா அறிந்திருந்தார். எனவே, அவர் தேவனுடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தீர்மானித்தார் (2 இராஜாக்கள் 22:3-5). அதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா, தேசத்தின் போக்கையே மாற்றியமைக்கக்கூடிய, தூசி படிந்ததொரு பழைய புத்தகத்தைக் கண்டெடுத்தார். அவர், “நான் கர்த்தரின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டுபிடித்தேன்” (22:8), என்று சொன்னார். இந்தப் புத்தகம், அநேகமாக உபாகமத்தின் ஒரு பிரதியாகத்தான் இருக்கவேண்டும். மற்ற அனைத்து இடங்களையும்விட, தேவனுடைய வார்த்தை எப்படித் தேவாலயத்தில்கூடத் தொலைந்துபோக முடியும்?

மனாசே செய்தவற்றைத் திட்டவட்டமாகத் தேவனுடைய வார்த்தை கண்டனம் செய்தது. மேலும், ஆசாரியர்கள் ஏன் வேதாகமத்தைப் புறக்கணித்தார்கள் என்பதைக் கற்பனை செய்வதும் ஒன்றும் கடினமான காரியமல்ல. மனாசேயின் காலத்தில், அவர்கள் வேதாகமத்திலிருந்து பிரசங்கித்திருந்தார்களெனில், அவர்கள் தங்களையே அன்றைய கலாசாரத்துடன் முரண்பட்டவர்களாகக் கண்டிருக்கக்கூடும். ஆகவே, அவர்கள் வேதாகமத்தைப் புதைத்துவிட்டனர். இதனால், ஐம்பது ஆண்டுகளின்பின், தேவனையும், அவரது நியாயப்பிரமாணத்தையும் அறியாத ஒரு சந்ததி எழும்பியது.

இதில் மிக ஆச்சரியமான விஷயம் என்னவெனில், ஆசாரியர்கள், முற்றிலும் வேதாகமங்களைப் பயன்படுத்தாமலேயே ஆலயத்தில் தங்கள் பணிகளைத் தொடர்ந்து செய்தார்கள் என்பதுதான்! ஒருவேளை, அதுவே உங்களது அனுபவமாகவும்கூட இருக்கலாம். நீங்கள் தேவனைத் தேடினீர்கள்; ஆலயத்துக்குச் சென்றீர்கள்; ஆனால், வேதாகமம் திறக்கப்பட்டதென்னவோ அரிதாகத்தான். அப்படியே அது வாசிக்கப்பட்டாலும், அது ஒருபோதும் விளக்கப்படவில்லை. அதனால் நீங்கள் உங்கள் ஆத்துமாவில், தீர்க்கப்படாத பெரும்பசியுடனேயே திரிந்துகொண்டிருக்கிறீர்கள்.

சரியானவற்றையும் தவறானவற்றையும் மீண்டும் கண்டுபிடித்தல்

உபாகமத்தின் புத்தகம், யோசியாவுக்கு வாசித்துக்காண்பிக்கப்பட்டது. “ராஜா நியாயப்பிரமாண புஸ்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டான்” (2 இராஜாக்கள் 22:11).

உங்கள் வாழ்க்கையிலும், தேவனின் வார்த்தையின் முதல் விளைவு, உங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளுமாறு உங்களை உணரவைப்பதாக இருந்தால், நீங்கள் ஆச்சரியப்படாதீர்கள். தேவன் உங்களை அழைத்திருப்பதான ஜீவியம் எதுவென்று நீங்கள் காணும்போது, அதைவிட்டு எவ்வளவு தூரமாக நீங்கள் விலகியிருக்கிறீர்கள் என்பதையும், அவரைவிட்டே எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் காண்பீர்கள். நீங்கள், “இதை நான் ஏன் அறிந்திருக்கவில்லை? என் வாழ்க்கையில் எதுவுமே, தேவன் என்னிடத்தில் எதிர்பார்ப்பது எதனுடனும் ஒத்ததாயிருக்கவில்லையே!” என்று சொல்லத் தொடங்குவீர்கள்.

யோசியா, மூப்பர்களையும், ஜனங்களையும் கூடிவரச்செய்து, உபாகமத்தின் முழுப்புத்தகத்தையும் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தார். ஆலயத்தின் தூணருகே நின்றுகொண்டு, கர்த்தருக்குக் கீழ்ப்படியப் பகிரங்கமானதோர் உடன்படிக்கைபண்ணினார். பின்பு, ஜனங்கள் எல்லாரும் இணைந்துகொண்டு, அதே உடன்படிக்கைக்கு உட்பட்டார்கள் (23:2-3).

தேவனுடைய வார்த்தை, யோசியாவின் வாழ்வில் ஓர் அக்கினியை மூட்டிவிட்டது. அவரும், தேவன் சொன்னவற்றைச் செயல்படுத்துவது என்று தீர்மானித்தார். ‘தேவனுடைய கிருபையினால், நான் அவரைக் கனம்பண்ணுகிற ஒரு வாழ்வை வாழ்வேன்’ என்கிற இந்தத் தரிசனம், அவரது மனதையும், ஆத்துமாவையும் இறுகப் பற்றிக்கொண்டது.

யோசியா, தேசமெங்கிலும் பிரயாணித்து, தேசத்தில் எங்கெங்கு மேடைகளையோ, விக்கிரகாராதனைக்கான மற்ற ஆதாரங்களையோ அவர் காண நேர்ந்தாலும், அவற்றையெல்லாம் முழுவதுமாகச் சங்கரித்தார். இஸ்ரவேலின் சரித்திரத்தில், விக்கிரகாராதனை முறைகளுக்கெதிரான மிகப் பெரிய சங்காரம் அதுதான். இதைப்போன்ற ஒன்று, இதற்குமுன் ஒருபோதும் நடந்ததேயில்லை.

சாலொமோன், தனது அந்நிய தேசத்து மனைவிகளுக்காகக் கட்டிய விக்கிரகாராதனை மேடைகள், யெரொபெயாம் நிறுவிய பொன் கன்றுக்குட்டியைப்போலவே முந்நூறு ஆண்டுகள் நீடித்திருந்தன (23:13, 15). வேறு எந்த ராஜாவும் அவற்றைத் தொடவும் துணியவில்லை. ஆனால் யோசியா, அவற்றை முற்றிலுமாய் நிர்மூலமாக்கினார்.

யோசியாவின் வாழ்நாட்காலத்தில், தேசத்தின் மீதான நியாயத்தீர்ப்பைத் தேவன் நிறுத்திவைத்தார். “உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, எனக்குமுன்பாக அழுதபடியினால் . . . . நான் இந்த ஸ்தலத்தின்மேல் வரப்பண்ணும் சகல பொல்லாப்பையும் உன் கண்கள் காண்பதில்லை” (22:19-20), என்றார்.

யோசியா, நீதியைப் பின்பற்றும் தனது தேடுதலில், தளராத வைராக்கியங்கொண்டிருந்தார்: “கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்் அவனைப் போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை” (23:25). அதனினும் மேலானதொரு கல்வெட்டை நீங்கள் எதிர்பார்க்க முடியாது!

நீதி, இருதயத்தில் தொடங்குகிறது

ஆனால், யோசியாவின் சாதனைகளுக்குச் சில வரம்புகள் இருந்தன. யோசியாவின் சொந்த நடவடிக்கைகளின் நேரடி விளைவாகவே, பெரும்பாலான மாற்றங்கள் வந்தன. அது ஓர் அடிமட்ட இயக்கமல்ல் அது முற்றிலுமாக அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டினால் நடத்தப்பட்டது. இவையனைத்திலும், வற்புறுத்தலுக்கான சக்திவாய்ந்ததொரு அம்சம் இருந்தது. எனவே, யோசியா உயிரோடிருந்த நாளெல்லாம், “அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை” (2 நாளாகமம் 34:33), என்று காண்பது ஆச்சரியமானதாயில்லை. ஆனால் யோசியா மரித்தவுடனேயே, காரியங்கள் அதற்கு முன்பிருந்தவைபோலவே மீண்டும் பின்னோக்கித் திரும்பின.

தீர்க்கதரிசியான எரேமியா, யோசியாவின் சீர்திருத்த வரம்புகள் பற்றி நமக்கொரு சுவாரஸ்யமான உள்நோக்குப் பார்வையைத் தருகிறார்: “. . . . யூதா . . . . கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 3:10). அதுதான் நீங்களா? பெற்றோரிடம் ஒரு மாதிரியாகவும், நண்பர்களிடம் வேறு மாதிரியாகவும் நடித்துக்கொண்டிருக்கிறீர்களா? பணியில் ஒருவராகவும், இல்லத்தில் வேறொருவராகவும், சபையில் மற்றொருவராகவும் இருக்கிறீர்களா? மற்றவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஒத்தவிதத்திலேயே நீங்கள் செய்வதனைத்தும் இருக்கிறதெனில், வேறுபட்ட ஒரு கூட்டத்தாரிடையே இருக்கும்போது, நீங்களும் வேறுபட்ட ஒரு நபராகவே இருப்பீர்கள். அதன் முடிவில், நீங்கள் யாரென்பதையே உங்களால் அறியமுடியாமற்போய்விடும்.

நல்ல நடக்கை என்பது சில நேரங்களில், உங்கள் சூழ்நிலையைப் பிரதிபலிப்பதைக்காட்டிலும் சற்று சிறப்பானதாக இருக்க முடியும். மெய்யான நீதி என்பது தேவனால் மாற்றமடைந்துவந்துள்ள ஓர் இருதயத்திலிருந்து வருகிறது. மேலும், இதற்காகவே தேவன் ஒரு புதிய உடன்படிக்கையை வாக்குப்பண்ணுகிறார்: “நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழு(துவேன்)” (எரேமியா 31:33).

எந்த ஒரு பெற்றோரோ, சபையோ, அரசோ ஒருபோதும் செய்ய முடியாததைத் தேவன் வாக்குத்தத்தமாகத் தந்தார்: அவர் கட்டளையிட்டிருப்பவற்றை நாம் வாஞ்சிக்கும்படியாக, அவரது பிரமாணங்களை நமது மனங்களிலும், இருதயங்களிலும் பெற்றுக்கொள்வோம்.

நூற்றாண்டுகள் பல கடந்தபின், இயேசு திராட்சைரசம் நிரம்பிய பாத்திரத்தை எடுத்து, “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது,” என்றார் (லூக்கா 22:20). தேவன், நம்மை உள்ளிருந்து தொடங்கி மாற்றுவாரென்று, எரேமியா மூலமாக வாக்குப்பண்ணிய அவரது உடன்படிக்கையைப் பற்றியே இயேசு பேசினார்.

நீங்கள் விசுவாசத்திலும், மனந்திரும்புதலிலும், இயேசுவண்டை வரும்போது, அவர் உங்களுக்குள் நீதியைக் குறித்த ஒரு வாஞ்சையை வைப்பார். அதுதான் புதிய உடன்படிக்கையின் வாக்குத்தத்தம். தேவன், அவரது பிரமாணத்தைவிடவும் மேலானதொன்றை நமக்குத் தருகிறார்; அவர் தம்மையே நமக்குத் தருகிறார்! தேவனின் ஆவியானவர், புதிய விருப்பங்களையும், புதிய ஆற்றல்களையும் உங்களுக்குள் சிருஷ்டிப்பார். நீங்கள் தேவனை நேசிக்கவும், நீதிக்காக ஏங்கவும் தொடங்குவீர்கள். நீங்கள் ஜெபிக்க விரும்புவீர்கள். மேலும், நீங்கள் பாவம் செய்யும்போது, கிறிஸ்துவிடம் வரவும், மன்னிப்படையவும் வேண்டிய தேவையை நீங்கள் உணர, நீண்ட காலம் ஆகாது.

நீதிக்கான இந்தப் பசியும், தாகமும், கிறிஸ்தவ ஜீவியத்தின் மிகச்சிறந்த ஆசீர்வாதங்களுள் ஒன்றாகும். தேவன் விலக்கியிருப்பவற்றிற்காகப் பசியாயிருப்பவர்கள், முடிவில் வெறுமையையும், விரக்தியையுமே அனுபவிப்பார்கள். ஆனால், நீதியை வாஞ்சிப்பவர்களோ, திருப்தியடைவார்கள் (மத்தேயு 5:6). கிறிஸ்து உங்களுக்கு ஒரு புதிய இருதயத்தையே கொடுக்கக் கூடுமானபோது, கிறிஸ்தவ மதிப்பீடுகளுடன் வெளிப்புறமாக மட்டும் ஒத்திருப்பதான ஒரு வாழ்விற்கு உடன்படாதீர்கள்.

நீதியானது, தேவனுடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்படுகிறது. தேவனின் வார்த்தை இல்லாமல், நாம் எது சரி, எது தவறு என்று பகுத்தறிந்து கூற முடியாது. நமது குடும்பங்களில், நமது சபைகளில், மற்றும் நமது தேசத்தில் நீதி மீட்டெடுக்கப்பட வேண்டுமாயின், அதற்குத் தேவனிடத்தில் அன்புகூருபவர்கள், வேதாகமத்தை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இயங்கவேண்டும்.
நீதி இருதயத்திலிருந்து புறப்பட்டுப் பொழியவேண்டும். தீய திட்டங்களைவிட, நல்ல பிரமாணங்கள் மேலானவைதான்் அத்துடன் அவை, தீமையைக் கட்டுப்படுத்துவதில் பெருமதிப்புக்குரிய பங்கு வகிக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் நியாயப்பிரமாணமானது, இருதய மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. அதனால்தான், சமயச் சடங்குகளைத் திணிக்க எடுக்கும் முயற்சிகள் எப்பொழுதுமே தோல்வியடைகின்றன.
தமது நியாயப்பிரமாணத்திற்கு, வெளிப்படையான அளவில் மட்டும் ஒத்திருப்பதைக் கட்டாயமாய் வற்புறுத்துவது தேவனுடைய நோக்கமல்ல. அவரது நோக்கம், நீதியைக் குறித்த உள்ளான வாஞ்சையை வளர்த்தெடுப்பதே. இது, புதிய உடன்படிக்கையின் வாக்குத்தத்தமும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையுமாகும். அது, நீதிக்காக ஒரு புதிய ஏக்கத்தையும், தேவனுக்குப் பிரியமானதொரு வாழ்க்கையைப் பின்பற்றுவதற்கு ஒரு புதிய திராணியையும் நமக்குத் தரும்படி, நமது இருதயங்களை மாற்றுவதை உள்ளடக்கியதாகும்.

கேள்விகள்

1. நீங்கள் வளர்ந்துவந்தபோது, பின்பற்றவேண்டியிருந்த விதிமுறையைப் பற்றிப் பேசுங்கள். அது உங்கள் இருதயத்தில் ஏற்படுத்திய விளைவு என்ன?

2. யோசியா, ஆவிக்குரிய குழப்பத்திலும், வேதாகமத்தைப் பற்றிய அறியாமையிலும் இருந்ததான ஒரு கலாசாரத்தில் வளர்ந்துவந்திருந்தார். எனினும், அவரது இருதயத்தின் ஆழத்தில், தேவனை அறிகிறதற்கான ஓர் ஏக்கம் இருந்தது. அவரது அனுபவத்துடன், நீங்கள் அதிகம் ஒத்திருப்பது எங்கே?

3. சன்மார்க்க விதிகளின் மதிப்பு என்ன? அவற்றின் வரம்புகள் யாவை?

4. மெய்யான நீதி எங்கிருந்து வருகிறது?

5. எந்த ஒரு பெற்றோரோ, சபையோ, அரசோ ஒருபோதும் செய்ய முடியாத எதை, தேவனால் செய்ய முடியும்?