இரட்சிப்பு
ஆதியாகமம் 6: 5-22
பாடம் 3 – இரட்சிப்பு
Download PDF
வேதவசனம்
பாடம்
கேள்விகள்
வேதவசனம்
ஆதியாகமம் 6: 5-22
5. மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,
6. தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
7. அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.
8. நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.
9. நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.
10. நோவா சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான்.
11. பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.
12. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
13. அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.
14. நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக் கீல்பூசு.
15. நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும்.
16. நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத் தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும்.
17. வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.
18. ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள்.
19. சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள்.
20. ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரக்கடவது.
21. உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித போஜனபதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார்.
22. நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.
பாடம்
வாழ்க்கையைக் குறித்து நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய ஒவ்வொன்றுமே இரு நம்பிக்கைகளிலிருந்து பிறக்கின்றது: தேவன் யாரென்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் மற்றும் நீங்கள் யாரென்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இவற்றைச் சரியாக அறிந்துகொள்வீர்களானால், வாழ்க்கைக்கான திட அஸ்திபாரத்தைக் கொண்டிருப்பீர்கள். அவற்றை அறிந்துகொள்ளத் தவறுவீர்களானால், விரைவிலேயே நீங்கள் அலைக்கழிக்கப்பட்டவராய் ஆவீர்கள்.
இந்தச் சத்தியங்கள் வேதாகமம் குறித்த ஒரு உலகக் கண்ணோட்டத்திற்கு அடித்தளமாகும். ஒரு உலகக் கண்ணோட்டம் என்பது, நாம் நினைக்கும் விதம் மற்றும் வாழும் முறை ஆகியவற்றைத் தீர்மானிக்கும் அடிப்படை நம்பிக்கைகளின் தொகுப்பாகும். தேவன் யார், தாங்கள் யார் என்பதுபற்றிய வெவ்வேறு அடிப்படை நம்பிக்கைகளில் இயங்குவதால், மக்கள் மிகவும் வித்தியாசமான வாழ்க்கைமுறைமைகளைத் தேர்வு செய்கிறார்கள்.
உங்கள் வாழ்க்கை ஒரு தற்செயல் நிகழ்வு, அது உங்களுக்கே உரியது என்றும், நல்ல ஈவுகள் தற்செயலாகவே வருகின்றன என்றும், நீங்கள் நம்புவீர்களானால், நீங்கள் கண்டுணர்வதையும், உங்களுக்குச் சரியெனத் தோன்றுவதையும் பற்றியே உங்கள் வாழ்க்கை சுழன்றுகொண்டிருக்கும். ஆனால், தேவன் உங்களைச் சிருஷ்டித்தார் என்றும், எந்தவொரு நன்மையான ஈவும் அவர் கரத்திலிருந்து வருகிறது என்றும் நீங்கள் நம்புவீர்களானால், அவரை அறிவதும், அவருக்குக் கீழ்ப்படிவதுமே உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாயிருக்கும்.
மேலும், இறக்கும்போது உங்கள் வாழ்வு முடிவுக்கு வருவதாக நீங்கள் நம்பினால், அதில் திருப்தியை அடைவதே உங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்று நீங்கள் நினைப்பது இயற்கையானதுதான். ஆனால், இவ்வுலகில் உங்களுடைய குறுகிய கால வாழ்க்கைக்குப் பிறகு, நீங்கள் உங்களை உண்டாக்கிய தேவனைச் சந்திப்பீர்கள் என்று நம்பினால், அந்த நாளுக்காக ஆயத்தப்படுவதே உங்கள் பிரதான முன்னுரிமையாக இருக்கும்.
இவை முற்றிலும் வேறுபட்ட இரண்டு உலகக் கண்ணோட்டங்கள். அவை இரண்டுமே சரியானவை என ஏகமுடிவாய் ஏற்கமுடியாது. ஒரு படகிலுள்ள சுக்கான் போன்ற இந்த நம்பிக்கைகள், உங்கள் வாழ்வின் திசையை நீங்கள் தெரிந்தெடுப்பதைக் கட்டுப்படுத்தும். இன்று உங்கள் இருதயத்தில் ஆழமாக உருவாக்கப்படும் நம்பிக்கைகள், நாளை நீங்கள் நிற்கப்போகும் ஸ்தானத்தைத் தீர்மானிக்கும்.
ஒரே தொடக்கம், வெவ்வேறு திசைகள்
தொடக்கமுதலே, தேவனுக்குப் பிரதியுத்தரமளிப்பதில் மனிதனின் குடும்பம் மாறுபட்டிருக்கிறது. ஆதாமும், ஏவாளும் இரு பிள்ளைகளைப் பெற்றனர். உலகின் அந்த முதல் இரு சகோதரர்களும் தங்கள் படகுகளின் சுக்கான்களை முற்றிலும் வேறுபட்ட திசைகளில் செலுத்தினர். ஆபேல் தேவனைத் தேடினான். ஆனால், காயீன் தேவனை எதிர்த்ததுடன், அவனது கோபமும் அவனுடைய சகோதரன் மீது கட்டுக்கடங்காமல் பாய்ந்தது. முடிவில், காயீன் ஆபேலைக் கொன்று, உலகின் முதல் கொலைகாரனாக ஆனான்.
காயீனின் செயல்பாடுகள் அவனைத் தேவனிடமிருந்தும், அவனது குடும்பத்திடமிருந்தும் தனிமைப்படுத்தின. ஆனாலும், தேவன் அவனுக்குப் பெரிதான இரக்கத்தைக் காண்பித்தார். காயீனின் சாதனைகள் வியப்புக்குரியவை. அவன் ஒரு பட்டணத்தைக் கட்டினான் மற்றும் அவனது சந்ததியினர் இசை, கலை மற்றும் கலாசாரம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றினர். ஆனால், தேவன் இல்லாமல் அவனது வாழ்வில் தொடர்ச்சியான ஒரு அமைதியின்மை இருந்தது.
ஆபேலின் மரணத்துக்குப் பின்பு, தேவன் இன்னுமொரு மகனை ஆதாமுக்கும், ஏவாளுக்கும் கொடுத்தார். அவனது பெயர் சேத். அவனது வம்சவரிசையில்தான் வேதாகமக் கதை முழுக்கவனம் பெறுகிறது.
ஆச்சரியக் கிருபை
கிருபையினால், விசுவாசத்தைக்கொண்டு மற்றும் கிறிஸ்துவுக்குள், ஜனங்களை இரட்சிக்கக் கரங்களை நீட்டி அணைக்கும் தேவனை, நாம் வேதாகமம் முழுவதிலும் தொடர்ந்து பார்க்கிறோம். இந்த முறையானது, நோவாவின் வரலாற்றின் தொடக்கத்திலேயே ஏற்படுத்தப்படுகிறது: “நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது” (ஆதியாகமம் 6:8).
தேவன், முதலாவது, நியாயத்தீர்ப்பு வருகிறது என்று நோவாவை எச்சரித்ததன் மூலமும், இரண்டாவது, அதிலிருந்து காப்பாற்றப்படும்படிக்கு அவன் என்ன செய்யவேண்டும் என்று அவனிடம் சொன்னதன் மூலமும் நோவாவுக்கு இரக்கம் காண்பித்தார்: “நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு” (6:14).
நியாயத்தீர்ப்பைப் பற்றி வேதாகமத்திலுள்ள எச்சரிக்கைகள், பழிவாங்குகிற ஒரு தேவனின் கோபத்தின் வெளிப்பாடுகள் அல்ல; அவை, “தீமையை நான் அழிக்க வேண்டும், நான் அழிப்பேன். ஆனால், நான் உன்னை அழிக்க விரும்பவில்லை, நீ தப்பிச்செல்ல ஒரு வழி இங்கே இருக்கிறது,” என்று கூறும், அன்பான தேவனின் கிருபையுள்ள அழைப்பாகவே இருக்கின்றன.
கிரியை செய்யும் விசுவாசம்
வரலாற்றில் இதுவரை கண்டிராத வெள்ளத்துக்காக ஆயத்தப்படும்படியாக நோவாவிடம் தேவன் கூறினார். அவ்விதமாகவே, முன்னெப்போதும் நிகழ்ந்திராத ஒன்றிற்காக ஆயத்தமாகும்படி நம்மிடம் தேவன் கூறுகிறார். இயேசு கிறிஸ்து, உயிரோடிருக்கிறவர்களையும், மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்.
விசுவாசம் தேவன் சொல்வதை நம்புகிறது மற்றும் கிரியையில் தன்னை வெளிப்படுத்துகிறது. நோவாவின் விசுவாசத்திற்கு, அவன் உண்டாக்கிய பேழையே சான்று. அவன் தேவன் சொன்னதை விசுவாசித்து, அதன்படிச் செய்தான். “கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது” (யாக்கோபு 2:26). மெய்யான விசுவாசம் என்பது, கீழ்ப்படிதலாகிய கனி பழுத்துக் குலுங்கும் ஒரு ஜீவ விருட்சம் ஆகும். இயேசு, நோவாவின் கதையை ஒரு ஒப்புமைக்காகப் பயன்படுத்தினார்: “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்.
அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்” (மத்தேயு 24:37-39). புசிப்பது, குடிப்பது மற்றும் மணமுடிப்பது ஆகிய அனைத்துமே தேவனிடமிருந்து வரும் வெகுமதிகள். ஆனால், நாம் இவற்றையெல்லாம் மட்டும் அனுபவித்துக்கொண்டு, வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக் குறித்து எண்ணமற்று இருப்போமானால், நமது மகிழ்ச்சி தற்காலிகமானதாகவே இருக்கும். தேவன் தன்னிடம் குறிப்பிட்டுக் கூறியிருந்த நாளுக்காக ஆயத்தப்படுவதே நோவாவின் விசேஷித்த முன்னுரிமையாக இருந்தது. தேவன் சொன்னதை நம்புவதும், அவர் கட்டளையிட்டதைச் செய்வதும்தான், அப்படி ஆயத்தப்படுவதற்கான ஒரே வழி.
தேவன், மழை பெய்யத் தொடங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு, நோவாவைப் பேழைக்குள் பிரவேசிக்கும்படிக் கூறினார் (ஆதியாகமம் 7:4-7). ஒரு துளி மழையைக்கூடக் காணாத நிலையில், பேழைக்குள் பிரவேசிப்பது என்பது ஒரு விசுவாசக் கிரியையாகும். அதற்குள் பிரவேசிப்பதற்கு, ‘தேவனின் வார்த்தைக்காக’ என்பதைத் தவிர, வேறெந்தக் குறிப்பிடத்தக்கக் காரணமும் இல்லை. நியாயப்படி நோவா முட்டாள்தனமாக உணர்ந்திருக்க வேண்டும்.
ஆனால், அதன்பின்பு மழை வந்தது. அதனுடன்கூட, பூமியிலிருந்து நீரூற்றுக்கள் எல்லாம் பிளந்து வெளிவந்தன (7:11). வெட்டாந்தரையில் உருவாக்கப்பட்ட கப்பல் எழும்பிற்று. நோவாவும், அவனது குடும்பத்தினரும் ஒரு புதிய உலகத்திற்குள் தூக்கிக்கொண்டுசெல்லப்பட்டனர்.
கிறிஸ்து என்கிற பேழை
ஜலப்பிரளயமானது, மீண்டும் ஒருபோதும் வராதிருக்கும் ஒரு நியாயத்தீர்ப்பாய் இருந்தது (9:8-16 வசனங்களைக் காண்க). ஆனால், வரவிருக்கும் அதைவிடப் பயங்கரமான மற்றொரு நியாயத்தீர்ப்பைப் பற்றித் தேவன் நம்மை எச்சரிக்கிறார். நோவாவுக்கு ஒரு பேழையைத் தேவன் வழங்கியதுபோலவே, இறுதி நியாயத்தீர்ப்பிலிருந்து காக்கப்படுவதற்கு இயேசு கிறிஸ்து மூலமாக நமக்கொரு வழியை அருளிச்செய்திருக்கிறார்.
பேழைக்குள்ளிருந்தவர்களனைவரும் பாதுகாக்கப்பட்டனர். பேழைக்குப் புறம்பாயிருந்தவர்களனைவரும் அழிக்கப்பட்டனர். தேவன் நமக்கொரு பேழையை அருளியிருக்கிறார். இயேசு கிறிஸ்துவே அந்தப் பேழை!
நோவாவின் பிரசங்கத்தின் மூலமாகத் தேவன் பேசினார். அவனது காலத்தில் வாழ்ந்த மக்களிடம், அவர்கள் உட்பிரவேசித்துக் காப்பாற்றப்படும்படியாக ஒரு பேழை இருந்ததைக் கூறினார் (2 பேதுரு 2:5). அவ்விதமாகவே, தேவன் நமக்கு இயேசுவைக் காண்பித்து, நாம் அவரிடத்தில் வந்தால் இரட்சிக்கப்படுவோம் என்று கூறுகிறார்.
அப்போஸ்தலனாகிய பவுல், கிறிஸ்தவர்களைக் “கிறிஸ்துவுக்குள்” இருப்பவர்களாக விவரிக்கிறார் (எ.கா., ரோமர் 8:1). நோவா பேழைக்குள் இருந்ததுபோலவே, நீங்களும் கிறிஸ்துவுக்குள்ளிருக்க முடியும். நியாயத்தீர்ப்பின் நாள் வரும்போது, கிறிஸ்துவுக்குள்ளிருப்பவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் மூலமாகவே பாதுகாப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டு, மகிமையான புதிய உலகிற்குள் அழைத்துவரப்படுவார்கள்.
தன்னிடத்தில் வரும் அனைவருக்குமே இந்தப் பேழை திறந்துள்ளது. இயேசு சொன்னார், “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோவான் 6:37). நோவாவின் காலத்து மக்கள், ஒரு நல்ல சந்தர்ப்பத்திற்கான திறந்த வாசலைப் பெற்றிருந்தனர். ஒரு பேழை உருவாக்கப்பட்டது. அதைக்கொண்டு ஒட்டுமொத்த சமூகமும் காப்பாற்றப்பட்டிருக்கக்கூடும். ஆனால், நோவாவின் குடும்பத்தைத் தாண்டி, அவனது எச்சரிக்கையை ஒருவர்கூட அன்று நம்பவில்லை.
மழைக்குத் தப்பிக்கொள்ளுங்கள்
சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள், ஒரு போதகர் லண்டனில் தன்னுடைய வீட்டின் வாசிப்பறையில் அமர்ந்து வரப்போகும் ஞாயிறுக்கான பிரசங்கத்தை எழுதிக்கொண்டிருந்தார். நிஜமாகவே லண்டனை நனைத்து ஊறவைத்துவிடும் போல, வெளியில் மழை கொட்டிக்கொண்டிருந்தது!
வயதான ஒரு தம்பதியினர் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் எதிர்பாராதவிதமாய் மழையில் மாட்டிக்கொண்டுவிட்டனர் என்பது நன்றாகத் தெரிந்தது, காரணம் அவர்கள் இருவரிடமும் ரெயின்கோட் அல்லது குடை இல்லை. அவர்கள் அந்தப் போதகர் வீட்டின் ஓர் ஓரமாக இருந்த மரத்தினடியில் நின்றார்கள். அது குளிர்காலம். அம்மரமும் மொட்டையாக இருந்தது. எனவே, எவ்விதத்திலும் அவர்களுக்கு அது அடைக்கலம் தரவில்லை.
அந்தப் போதகர், ஒரு கோட்டை அணிந்துகொண்டு அவர்களை நோக்கிச் சென்றார். அவர்களிடம், “இங்கு நின்றால் நீங்கள் நனைந்துவிடுவீர்கள், வீட்டிற்குள் வந்துவிடுங்களேன்?” என்றார். அவர்கள் அந்தப் போதகரைப் பார்த்து, உண்மையிலேயே கண்ணியமான, ஆங்கிலேயப் பாணியில், “இல்லை, மிக்க நன்றி, நாங்கள் இங்கேயே மிக நன்றாகத்தான் இருக்கிறோம்,” என்றார்கள்.
அந்தப் போதகர், “ஆனால், நீங்கள் நனைந்துகொண்டிருக்கிறீர்கள்! சற்று உள்ளே வந்து மழை நின்றவுடன் செல்லுங்கள்,” என்றார். ஆனால், அவர் சொன்னது எதுவும் அவர்களிடம் பலிக்கவில்லை. அதற்குள் அந்தப் போதகரே நனைந்துபோய்விட்டார். அந்தப் போதகர், அவர்கள் உள்ளே வர விரும்பினால், வருவதற்கு ஏற்றபடி வீட்டின் கதவைத் திறந்துவைத்துவிட்டு, வீட்டிற்குள் சென்றுவிட்டார். அவர்களோ வெளியிலேயே நின்றனர். அப்படியென்ன அவர்களுக்குப் பயமென்று இன்றுவரை அந்தப் போதகருக்குத் தெரியாது.
அந்தத் திடீர் மழைப்பொழிவு, தேவனுடைய நியாயத்தீர்ப்பைப் பற்றிய நல்லதொரு சித்திரிப்பாகும். நீங்கள் வெளியே நின்றால், மழை நேரடியாக உங்கள்மேல் பெய்யும். நீங்கள் அதனால் திக்குமுக்காடிச் சிரமப்படுவீர்கள். ஆனால், நீங்கள் வீட்டினுள் இருந்தால், கொட்டும் பெருமழை, கூரை மீது விழும். நீங்கள் வீட்டிற்குள் இருப்பதால், அது உங்களைத் தொடாது.
இயேசுகிறிஸ்துவே, தேவன் உங்களுக்காக அருளிச்செய்திருக்கும் வீடு – தேவனுடைய நியாயத்தீர்ப்பென்னும் புயலிலிருந்து உங்களுக்கு அடைக்கலம் தருகின்ற பேழை. இயேசு சிலுவையில் மரித்தபோது, பாவத்திற்கான தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவர்மேல் விழுந்தது. அவரையே நம் அடைக்கலமாகக் கொண்டு அவரிடம் நாம் வருமாறு தேவன் நமக்கு அழைப்பு விடுக்கிறார். நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், தேவனின் நியாயத்தீர்ப்பு ஏற்கெனவே அவர்மேல் விழுந்துவிட்டபடியால், அது உங்கள் மீது விழாது: “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை” (ரோமர் 8:1).
இங்கு ஒரு கேள்வி: நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளிருக்கிறீர்களா? உங்களுடைய இரட்சகராகவும், ஆண்டவராகவும் அவரில் உங்கள் விசுவாசத்தை வைத்திருக்கிறீர்களா? நீங்கள் உள்ளே வருவதற்கு, உங்களுக்காகக் கதவு திறந்திருக்கும்போது, நீங்கள் ஏன் வெளியிலேயே நிற்க வேண்டும்?
கிறிஸ்துவில் கிருபை, விசுவாசம் மற்றும் இரட்சிப்பு ஆகியவை ஏதோ புதிய ஏற்பாட்டில் எழுகின்ற புதிய சிந்தனைகளல்ல. வேதாகமத்தின் சாராம்சம் ஒன்றுதான். தேவன் கிருபை நிறைந்தவர். அவர் அப்படித்தான் இருந்திருக்கிறார், அப்படித்தான் இருப்பார்.
கிறிஸ்துவுக்குள்ளிருப்பதென்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளப் பேழை நமக்கு உதவுகிறது. பேழைக்குள்ளிருந்ததால், நோவாவும் அவனது குடும்பமும் தேவனுடைய நியாயத்தீர்ப்பினூடாகப் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டதுபோலவே, கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், நாமும் இறுதி நியாயத்தீர்ப்பினூடாகப் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்படுவோம்.
ஜெபிப்போம்
பிதாவே, நீரே சிருஷ்டிகர் என்றும், என் வாழ்வின் மீது பரிபூரண உரிமைகள் உடையவர் என்றும் நான் விசுவாசிக்கிறேன். எனக்குத் தீமைபற்றிய அறிவு இருப்பதையும், நான் பரதீசிலிருந்து விலக்கிவைக்கப்பட்டிருக்கிறேன் என்பதையும் கண்டுணர்கிறேன். வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக் குறித்த உமது வார்த்தையை விசுவாசிப்பதுடன், உம்மைத் தவிர வேறு எந்த நம்பிக்கையும் எனக்கில்லை என்பதையும் நான் உணர்கின்றேன். உமது கிருபையால் நீர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பியதற்காக நன்றி சொல்கிறேன். இன்று நான் அவரை விசுவாசிக்கிறேன். நான் என் முழு நம்பிக்கையையும் அவர்மேல் வைக்கிறேன். என் இரட்சகராயிருக்குமாறு அவரை நான் அழைக்கிறேன். உமது பரிசுத்த ஆவியால், என்னை இயேசு கிறிஸ்துவுக்குள் வைத்து, அவர் மூலமாக என்னை இரட்சியும். ஆமென்.
கேள்விகள்
1. ஒன்று (இல்லவே இல்லை) முதல் 10 (பரிபுரணமானது) வரையுள்ள அளவுகோலில், எந்த அளவுக்கு நன்றாக நீங்கள் தேவனை அறிந்திருப்பதாக நினைக்கிறீர்கள்? எவ்வளவுக்கு நன்றாக நீங்கள் உங்களையே அறிந்திருப்பதாக நினைக்கிறீர்கள்?
2. தேவன் எப்படி நோவாவுக்குக் கிருபை இரக்கம் காண்பித்தார்? வரப்போகும் நியாயத்தீர்ப்பைப் பற்றித் தேவனின் எச்சரிப்பைக் கேட்கும்பொழுது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? அதைப்பற்றி நீங்கள் எந்த அளவுக்கு யோசித்திருக்கிறீர்கள்?
3. நோவா எவ்வாறு விசுவாசத்தைச் செயல்படுத்தினான்? நீங்கள் எவ்வாறு விசுவாசத்தைச் செயல்படுத்துகிறீர்கள்?
4. இயேசு எவ்விதத்தில் பேழைக்கு ஒப்பானவர்? அநேக ஜனங்கள் பேழைக்குள் வராமல் தவறுவது ஏன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
5. உங்களது சொந்த வார்த்தைகளின்படிச் சொல்வதென்றால், கிறிஸ்துவுக்குள்ளிருப்பது என்பது எதைக் குறிக்கிறது என்று நினைக்கிறீர்கள்