நியாயத்தீர்ப்பு
ஆதியாகமம் 11: 1-9
பாடம் 4 – நியாயத்தீர்ப்பு
Download PDF
வேதவசனம்
பாடம்
கேள்விகள்
வேதவசனம்
ஆதியாகமம் 11: 1-9
1. பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.
2. ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.
3. அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
4. பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
5. மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார்.
6. அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.
7. நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.
8. அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள்.
9. பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.
பாடம்
ஆதியாகமத்தின் தொடக்க அதிகாரங்கள் உலகில் பெருகிவரும் பாவத்தின் வல்லமையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. ஆரம்பத்தில் மிகவும் கவர்ச்சிகரமாகத் தோன்றிய தீமை பற்றிய இந்த அறிவு, ஒரு அழிக்கும் சக்தியாகவும், கடும் எதிரியாகவும் மாறியது. ஆதாம் மற்றும் ஏவாளின் பாவம் அவர்களோடு தன்னை இணைத்துக்கொண்டது. அப்படியே, உலகின் முதல் குழந்தையான காயீனுடன், அவன் பிறக்கும்போதே அது ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்தது.
ஏவாளின் பிரசவ வேதனையின் உச்சக்கட்டத்தில், உலகத்தின் முதல் குழந்தையான காயீன் பிறக்கிறான். அவனது தாய்க்கு மருத்துவச்சி இல்லை. அவளுக்கு உதவிசெய்ய அவளது கணவன் மட்டுமே இருந்தான். அவனுக்கோ, என்ன செய்வது என்பதைப்பற்றி சிறிதளவும் தெரியவில்லை. யோசித்துப் பார்ப்பீர்களானால், அவளுக்கும்தான் தெரியவில்லை. ஆனால், தேவ இரக்கத்தினால், அவர்கள் எப்படியோ வெற்றிகரமாக மீண்டுவிட்டார்கள். இப்பொழுது, அவள் காயீன் என்னும் தங்களின் சின்னஞ்சிறு மகனைத் தன் கரங்களில் ஏந்திக்கொள்ளக் கூடுமாயிருந்தது.
ஏவாள் தன் குழந்தையின் பிறப்பில், தேவனின் ஆசீர்வாதத்தைக் கண்டிருக்க வேண்டும். எப்படியும், ஸ்திரீயின் வித்தின் மூலமாகவே சர்ப்பத்தின் தலை நசுக்கப்படும் என்று தேவன் சொன்னார். தன் மகனின் கண்களுக்குள் உற்று நோக்கும்போது, அவன் எவ்வாறு பாவத்தின் பேரலையைத் திருப்பி, அவர்களைப் பரதீசுக்குள் மீட்டெடுத்துச் சேர்க்கப்போகிறான் என்று ஒருவேளை சிந்தித்திருப்பாள்.
அவளது எண்ணங்கள் அப்படிப்பட்டவைகளாய் இருந்திருந்தால், அவள் மிகவும் ஏமாற்றம் அடைந்திருக்க வேண்டும். காரணம், அவள் உற்று நோக்கிய, பார்ப்பதற்கு மிகவும் மாசற்றதாகத் தோன்றிய, அக்குழந்தையின் கண்கள், உலகின் முதல் கொலைகாரனுடையவையாக மாறிப்போயின. குடும்பத்தைத் தீமையிலிருந்து இரட்சிக்கிறவனாக இருந்திருக்கவேண்டிய காயீன், அதற்கு முற்றிலும் மாறாக, இன்னும் ஆழமான தீமைகளை உலகிற்கும், இன்னும் ஆழ்ந்த வேதனைகளைத் தனது பெற்றோரின் இருதயங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறவனானான்.
காயீன் ஒரு கோபம் நிறைந்த வாலிபனாக ஆனதை ஆதியாகமம் 4 விவரிக்கிறது. தேவனை எதிர்த்துப் போராடும் ஒரு உந்துதல் ஏற்கெனவே அவனுக்குள் இருந்தது. அத்துடன், தன் சகோதரன் தேவ ஆசீர்வாதத்தைப் பெற்றனுபவிப்பதைக் காண்பது, அவனது கோபத்தை இன்னும் அதிகரித்தது. காயீன் தன் சகோதரனிடம், “நாம் வயல்வெளிகளுக்குப் போவோம்,” என்றான். அவர்கள் இருவரும் வெளியில் சென்றனர். அவர்கள் அங்குத் தனித்திருக்கும்பொழுது, “காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்” (ஆதியாகமம் 4:8). தீமை இன்னும் புதிய ஆழங்களுக்குள் வேர்விட்டுவிட்டது. முதன்முறையாக வன்முறை வெடித்தது.
நம் குழந்தைகளுக்கு ஒரு அன்பான சூழலை ஏற்படுத்திக் கொடுத்து, நல்ல கல்வியை அளித்து, ஆலயத்திற்கு அழைத்துவருவதையும் பழக்கப்படுத்திவிட்டால், அதன் விளைவாகத் தேவபக்தியுள்ள பிள்ளைகள் உருவாகிவிடுவார்கள் என்று நாம் நினைப்பது என்னவோ இயல்புதான். ஆனால் உலகத்தின் முதல் பெற்றோர் கண்டுணர்ந்த அனுபவத்தின்படி, அது எப்பொழுதுமே அப்படி இருப்பதில்லை. ஒருவழியாக ஆதாமும், ஏவாளும் தீமையை, வளர்ந்துகொண்டேயிருக்கும் ஒரு சக்தியாக உணர்ந்துகொண்டபோது, அவர்கள் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டுத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள் (4:26). அதுதான் முதல் ஜெபமாகும். ஒருவேளை நீங்களும்கூட உங்களது வேதனைகளின் மத்தியில், ஜெபத்தின் உண்மையைக் கண்டுகொள்ளக்கூடும்.
தொடர்ந்து வந்த அடுத்த தலைமுறைகளில், பாவம் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்தோடியது. மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினதுடன், “அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததாகவே இருந்தது” (6:5). பூமியானது, “கொடுமையினால் நிறைந்திருந்தது” (6:11). குறுகிய காலத்துக்குள், நாம் தோட்டத்தில் நிகழ்ந்த கீழ்ப்படியாமையின் செயலிலிருந்து, பூமி முழவதையும் அடித்துக்கொண்டுபோன வன்முறைப் பேரலைக்குள் வீழ்ந்துவிட்டோம். வேதாகமம், (நமது கலாசாரம் நம்ப விரும்புவதைப்போல) மனிதகுல இயல்பு மேம்பட்டுவருகிறது என்று சொல்லாமல், நாம் தேவனைவிட்டு விலகிச் செல்லும்போது மிக மோசமாகிவிடுகிறோம் என்று நமக்குச் சொல்கிறது.
தேவன் பாவத்தை வெட்டியெறிகிறார்
பரவிக்கொண்டேயிருந்த பாவத்துக்குக் கடிவாளமிட, ஜலப்பிரளயத்தைத் தேவன் அனுப்பினார். பேரழிவுக்கேதுவான இந்த ஜலப்பிரளயத்தில், மனிதகுலத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகையையுமே, பேழையின்மூலம் காப்பாற்றப்பட்ட, எட்டுப்பேர் கொண்ட ஒரே ஒரு குடும்பம் மட்டும் என்கிற அளவுக்குத் தேவன் சுருக்கிவிட்டார் (7:23).
தீர்த்து முடிக்கப் பழைய கணக்குகளோ, போராட எதிரிகளோ இல்லாத, புதிய ஒரு சூழலில், பேழையிலிருந்து ஒரு புதிய தொடக்கத்திற்குள் எழும்பி வந்த நோவாவுக்கு ஒரு அற்புதமான வாய்ப்புக் கிட்டியது. ஆனால், நோவா தன்னுடனே புதிய உலகிற்குள் பாவத்தின் வித்துக்களைச் சுமந்து சென்றான். சிறிது காலத்துக்குள்ளாகவே, அவன் குடிபோதைக்குள்ளாகியதுடன், அவனது பிள்ளைகளுள் ஒருவனிடம் பழிகூறும் விமர்சனப்போக்கின் இழிவான வித்துக்கள் வளர்ந்துவந்தன (9:20-23).
ஒரு போதகரும் அவரது மனைவி கேரனும் லண்டனில் வசித்துவந்தபோது, திராட்சை போன்ற, மிக விரைவாய் வளரும், காக்கட்டான் என்னும் ஒருவகைக் களைப்புதர்க்கொடிகளோடு அவர்கள் பதினாறு வருடங்களாகப் போராடினார்கள். அவை, அவர்களது ரோஜாச்செடிகளைச் சுற்றிப் படர்ந்து, சூழ்ந்துகொள்ளும். அவர்களது தோட்டத்தின் களிமண் நிலத்தில் அந்தக் கொடிகள் ஆழமாக வேர்விட்டிருந்தன. அவை அவர்களது தோட்டத்துச் செடிகளின் வேர்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததால், அவற்றை வேரறுப்பது இயலாததாயிருந்தது. அதிகபட்சம் அவர்களால் செய்ய முடிந்தது என்னவென்றால், அதை அடியோடு வெட்டிவிட்டு, வளரவிடாமல் பார்த்துக்கொண்டு, கட்டுக்குள் வைத்திருப்பதுதான்.
பாவமும் அதுபோலத்தான். தேவனின் கட்டளைகளில் ஒன்றை மீறுவதற்கு நீங்கள் தீர்மானிக்கும்பொழுது, நீங்கள் உயிருள்ள ஒரு விதையை நடுகிறீர்கள். அதுவும் வளர்ந்துவரும். அந்த அனுபவம் உங்கள் எல்லைகளை விஸ்தரிக்கும் என்று உங்களிடம் சாத்தான் கூறுகிறான். ஆனால், உண்மை என்னவென்றால், அந்தப் பாவம் உங்கள் ஆத்துமாவில் பயங்கரமான போராட்டத்தை ஏற்படுத்தும்.
பாவத்தைப் பற்றி வேதம் நம்மிடம் கூறும் முதல் காரியம், “அதனிடம் போகாதீர்கள்,” என்பதுதான். தீமையை விட்டு விலகியோடுங்கள். அது ஒரு வளரும் சக்தியாக இருப்பதனால், உங்களால் எவ்வளவு கூடுமோ, அவ்வளவு தூரத்திற்கு அதைவிட்டு விலகியிருங்கள். பல்லாண்டுகாலங்களுக்கு உங்களுடனே தொடர்ந்துவரும் பாவத்தினால் வந்த காயங்கள், தழும்புகள் மற்றும் போராட்டங்களுக்கு உங்;களையே ஒப்புக்கொடுத்துவிடாதீர்கள்.
ஒருவேளை நீங்கள், “பல வருடங்களுக்கு முன்பு அதைப்பற்றிய சிந்தனை எனக்கு இருந்திருந்தால், நலமாக இருந்திருக்கும்,” என்று நினைத்துக்கொண்டிருக்கலாம். இப்பொழுதோ அவைகள் என் வாழ்க்கையில் பழக்கவழக்கங்களாக மாறி, என் ஆத்துமாவிற்குள் போராட்டங்களாக நிலவுகின்றன,” என்றும் நினைத்துக்கொண்டிருக்கலாம். அப்படியென்றால், நீங்கள் மிகச்சிறந்த ஒரு நிலையில் இருக்கிறீர்கள். களைகள் வளரும்படி நீங்கள் அனுமதித்ததைப் பற்றி நேர்மையுடன் ஒப்புக்கொள்வதோடு, அவை உங்கள் வாழ்க்கையை மேற்கொள்ளவிட நீங்கள் விரும்பவில்லை. இதுவே நீங்கள் அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான நேரம். அதைத் தேவன் உங்களுக்குத் தரும் பெலத்தினாலே உங்களால் செய்ய முடியும் (பிலிப்பியர் 4:13).
களைப்புதர்கள் தமது தோட்டத்தை முற்றிலும் அழித்துவிட தேவன் அனுமதிக்க மாட்டார். எனவே, அவர் அதைத் தடுத்து நிறுத்துகிறார். தேவன் இவ்விதமாகத் தமது நியாயத்தீர்ப்பைப் பிரயோகிக்கவில்லையென்றால், நன்மையானவை அனைத்தையும் பாவம் அழித்துவிடும். ஆகவே, தேவன் அதைத் தொடர்ந்து வெட்டி எறிந்துகொண்டிருக்கிறார். ஆதாமும், ஏவாளும் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனதால், தேவன் அவர்களைத் தோட்டத்திலிருந்து வெளியேற்றியதன் மூலம், அவர்களது பாவம் வளர்ந்து பெருகாதபடி அடக்கிவைத்தார். காயீன், முதல் கொலைகாரனாக ஆனதால், தேவன் அவனது குடும்பத்திலிருந்து அவனைப் பிரித்துவிட்டார். நோவாவின் காலத்தில், தீமை பெருக்கெடுத்ததால், ஜலப்பிரளயத்தின் மூலம் தேவன் அதைக் கட்டுப்படுத்தினார். ஆனால், பாவம் வளர்ந்துகொண்டேதான் இருந்தது. அதிசீக்கிரத்திலேயே பாபேலில் இருந்த மக்கள் கூட்டத்தார், தேவனை எதிர்க்கும் தங்களது மீறுதலை வெளிப்படுத்த ஒரு புது வழியைக் கண்டறிந்தனர்.
இருபத்திரண்டாம் தளத்தில் ஒரு குழப்பம்
காலப்போக்கில், சாத்தியக்கூறுகள் நிறைந்த ஒரு உலகத்திற்கு வழிதிறக்கும், ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. செங்கற்கள் ஒரு பிரம்மாண்டமான திட்டத்திற்குப் பாதையமைத்தன: “நாம் புமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்” (ஆதியாகமம் 11:4).
கட்டிடத்தின் உயரம் ஒரு பிரச்னையாக இருக்கவில்லை. மாறாக, மனிதப் பெருமையைப் பறைசாற்றுகிற அதன் நோக்கமே ஒரு பிரச்னையாக இருந்தது. மனிதர்கள் தங்களுக்கென்று சொல்லிக்கொள்ளும்படியான ஒரு பெயர் எடுக்க வேண்டுமென்றும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றும் விரும்பினர். மீண்டுமாக, நாம் தேவனுடைய சிங்காசனத்தைக் கைப்பற்றப்பார்த்தோம்.
மனிதனின் பட்டணத்தில் எழும்பும் அந்தக் கட்டிடத்தைத் தேவன் கவனித்துப் பார்த்து, ஒரு குறிப்பிட்ட அளவுவரை அவ்வேலை தொடர அனுமதித்தார். ஆனால், பின்னர் அதைத் தடுத்து நிறுத்திவிட்டார். “அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள். நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்” (11:6-7).
அதே மனிதனுடன், அந்த பாபேல் கோபுரத்தின் இருபத்திரண்டாம் தளத்தில், ஒன்றாக நீங்களும் கடந்த இரண்டு மாதங்களாகப் பணிபுரிந்துவருகிறீர்கள் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒருநாள் நீங்கள் வந்து அவருக்கு வணக்கம் கூறும்பொழுது, ஏதோ புரிந்துகொள்ள முடியாத சத்தங்களுடன் பதிலளிக்கிறார். இந்த மனிதருக்கு என்னவாயிற்று? குழுவிலுள்ள மற்ற அனைவருமே இப்படித்தான் ஏதோ அர்த்தமற்ற விதத்தில் உளறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் சீக்கிரமே கண்டுகொள்ளுகிறீர்கள். இது ஏதாவது நகைச்சுவையா என்றுகூட நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள்.
கடைசியில், அந்தக் கட்டிடப் பணித்தளத்தில், உங்களைப்போலவே பேசுகிற வேறொரு நபரைக் கண்டு, நிம்மதியாகப் பெருமூச்சு விடுகிறீர்கள். ஆகவே, அவரிடம் நீங்கள், “இந்த மக்களுள் மற்ற அனைவரும் பைத்தியமாகிவிட்டனர். நாம் இங்கிருந்து வெளியேறிவிடுவோம்,” என்கிறீர்கள். எனவே, நீங்கள் இருவரும் உங்களைப்போல் பேசும் மற்றவர்களைக் கண்டுபிடித்து, அனைவரும் ஒரே மொழிபேசும் ஒரு புதிய சமூகத்தை உருவாக்கும்படியாக, ஒன்றாக வெளியேறிச் செல்கிறீர்கள்.
மனிதனின் முரட்டாட்டத்தை, மனித மொழியைத் தாறுமாறாக்கியதன் மூலம் தேவன் தடுத்து நிறுத்தி, இவ்விதமாக, “கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்” (11:9). எதிர்கால விரோதங்களின் விதைகள் ஏற்கெனவே தங்கள் இதயங்களில் விதைக்கப்பட்டவர்களாய், எத்திசைகளிலும் பரவிச் செல்லும் குடும்பங்களின் சிறு குழுக்களால், பாபேல் கைவிடப்பட்டு வெறிச்சோடியது. முரண்பாடு என்னவெனில், மனிதர் தவிர்க்க விரும்பிய, சிதறுண்டுபோகும் நிலைமையைத்தான் தேவன் நிகழப்பண்ணினார். அதையும் அவர், தீமை மேலோங்காதபடிக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே செய்தார்.
தேவனின் கிருபைக்கு இடம்
தேவன் பாவத்தைத் தடுத்து நிறுத்தும்பொழுது, அவர் எப்போதுமே தமது கிருபைக்கான ஓர் இடத்தை உண்டாக்குகிறார். ஆதாமும், ஏவாளும் தோட்டத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர். ஆனால், தேவன் ஒரு மீட்பரை வாக்குத்தத்தம்பண்ணினார். காயீன் தன் சகோதரனைக் கொன்றான். ஆனால், சேத் என்னும் மற்றொரு மகனைத் தேவன் கொடுத்தார். அவன், ஒரு புதிய நம்பிக்கையின் வம்சாவளியைத் தொடங்கினான். ஜலப்பிரளயம் மனித வாழ்க்கையையே முழுவதும் அழித்துவிட்டது. ஆனால், தேவன் நோவாவையும் அவனது குடும்பத்தையும் பேழைக்குள் காப்பாற்றினார். எனவே, பாபேல் கோபுரத்தின்மீது தேவன் தமது நியாயத்தீர்ப்பை வழங்கியபொழுது, அதற்கு ஒரு தீர்வை வழங்கும் முன் நடவடிக்கையை, அவரது கிருபை எப்படிச் செய்யப்போகிறது என்கிற எதிர்பார்ப்பிற்கு நாம் உள்ளாகிறோம்.
பாபேல் கோபுரக் கதையின் முடிவில், சேமில் தொடங்கி ஆபிரகாமின் தகப்பனாகிய தேராகில் முடிவடையும் ஒரு வம்சாவளியைப் பற்றி வாசிக்கிறோம் (11:10-26). தோட்டத்தில் ஆதாமுக்குத் தோன்றியதைப்போலவே, தேவன் ஆபிரகாமுக்குத் தோன்றினார் (அப்போஸ்தலர் 7:2). அந்நேரம்வரை ஆபிரகாமுக்குத் தேவனைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவனது குடும்பம் விக்கிரகங்களை ஆராதித்தது (யோசுவா 24:2). ஆனால், ஆபிரகாமையும், அவன் சந்ததியையும் ஆசீர்வதிப்பதாகத் தேவன் வாக்குத்தத்தம்பண்ணி, அவனது சந்ததியின் மூலமாகப் பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்றும் ஆணையிட்டுக் கூறினார் (ஆதியாகமம் 12:1-3).
பழைய ஏற்பாட்டின் மற்ற அனைத்துப் பகுதிகளும், சிலுவையில் அறையுண்டு, மூன்றாம் நாளில் உயிரோடெழுந்த கிறிஸ்துவை நோக்கி நம்மை நடத்திச் செல்கிறதான, இந்தக் குடும்ப வரிசைப் பட்டியலையே பின்பற்றி வருகின்றன. நாற்பது நாட்கள் கழித்து, அவர் பரமேறினார். அதன்பின்பு, பெந்தெகொஸ்தே நாளன்று, தேவன் பாபேலை மாற்றியமைத்தார். தேவனின் ஆவியானவர் வந்தபோது, அப்போஸ்தலர்கள், தாங்கள் ஒருபோதும் கற்றிராத மொழிகளில், தம்மியல்போடு பேசிக்கொண்டிருப்பதையும், அதனால் உலகெங்கிலுமிருந்து வந்திருந்த மக்கள், தங்கள் தங்கள் சொந்த மொழிகளில், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சுவிசேஷத்தைக் கேட்பதையும், புரிந்துகொள்வதையும் கண்டனர் (அப்போஸ்தலர் 2:5-8, 11).
வித்தியாசம் உங்களுக்குத் தெரிகிறதா? பாபேலில், குழப்பத்திற்கும், மக்கள் சிதறடிக்கப்படுவதற்கும் ஏதுவாயிருந்த பாஷைகள், தேவனிடமிருந்து வந்த நியாயத்தீர்ப்பாயிருந்தன. பெந்தெகொஸ்தே நாளிலோ, புரிந்துகொள்ளுதலுக்கும், மக்கள் ஒன்றுகூட்டிச் சேரக்கப்படுவதற்கும் வழிநடத்துகிறதாயிருந்த பாஷைகள், தேவனிடமிருந்து வந்த ஆசீர்வாதமாயிருந்தன.
தேவன், தம் ஜனங்களை ஒன்றுகூட்டுவது, வேதாகமத்தின் கடைசிப் புத்தகமான, வெளிப்படுத்தலில் அதன் சிகரத்தை அடைகிறது, அங்கே, சகல ஜாதிகளிலும், கோத்திரங்களிலும், ஜனங்களிலும், பாஷைக்காரரிலுமிருந்து வந்ததான மகா திரளான கூட்டமாகிய ஜனங்கள் (வெளிப்படுத்தின விசேஷம் 7:9), ஒன்றாக இணைந்து, தங்களை இரட்சித்தவரும், தங்களை ஒன்றாகக் கூட்டிச் சேர்த்தவருமான கிறிஸ்துவை ஆராதிக்கும்பொழுது: “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக” (7:10), என்று ஆர்ப்பரிப்பதை நாம் காண்கிறோம்.
மனிதனின் பெருகும் முரட்டாட்டத்திற்கு ஒரு முட்டுக்கட்டை போடும்படியாகத் தேவன், மனுக்குலத்தை வெவ்வேறு மொழிபேசும் குழுக்களாகப் பிரித்தார். அந்த முட்டுக்கட்டை, வியக்கத்தக்க அளவுக்குப் பயனுள்ளதாக இருந்துவந்துள்ளது. மனித வரலாறு முழுவதிலும், தேசங்களை ஒன்றிணைக்கப் பற்பல முயற்சிகள் எடுக்கப்பட்டுவந்துள்ளன. ஆயினும், அவற்றின் எந்தவொரு வெற்றியும் ஓர் எல்லைக்குட்பட்டதாகவும், தற்காலிகமானதாகவுமே இருந்திருக்கின்றது. ஆனால், இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவன், அனைத்துத் தேசங்களிலிருந்தும் ஜனங்களைக் கூட்டிச் சேர்க்கிறார். வரலாறு முழுவதிலும், இனம், ஜாதி மற்றும் மொழி ஆகியவற்றால் மக்களைப் பிரித்துவைத்திருந்த தடுப்புச் சுவர்கள் அனைத்தும், பரலோகத்தில் முற்றிலுமாக அகற்றப்படும். அந்த ஒருமைப்பாட்டைத் தமது சபையில் இப்பொழுது வெளிப்படுத்தத் தொடங்குமாறு, தேவன் தம் ஜனங்களை அழைக்கிறார்.
கேள்விகள்
1. இன்றைய நமது கலாசாரத்தில், இயல்பாக மக்கள் நல்லவர்கள் என்று பொதுவாக நிலவும் மனோபாவம்பற்றி, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்களுடன் இது எவ்வாறு ஒத்திருக்கிறது?
2. பாவத்தின் சக்தியின் உண்மையை, உங்கள் சொந்த வாழ்க்கையில் நீங்கள் எங்கே கண்டீர்கள்?
3. உங்கள் வாழ்க்கையில் தேவன் பாவத்தை மட்டுப்படுத்திக் குறைத்ததை, நீங்கள் தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கக்கூடிய ஒரு காலக்கட்டத்தை உங்களால் நினைவுகூர முடியுமா?
4. இதற்கு மாறுத்தரம் கொடுங்கள்: “தேவன் பாவத்தை மட்டுப்படுத்தும்பொழுது, அவர் எப்பொழுதுமே தமது கிருபைக்கு இடம் உண்டாக்குகிறார்.”
5. நாம் ஏன் உலகில் இன்று மிகப் பற்பல பாஷைகளைக் கொண்டிருக்கிறோம் என்று எப்பொழுதாவது நீங்கள் யோசித்ததுண்டா?