< முன் பகுதி
அடுத்த பாடம் >

lesson-6

இரத்தம்

ஆதியாகமம் 12: 1-13

பாடம் 6 – இரத்தம்


Download PDF

வேதவசனம்
பாடம்
கேள்விகள்
வேதவசனம்

யாத்திராகமம் 12: 1-13 

1. கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

2. இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக.

3. நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள்.

4. ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற்போனால், அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் புசிப்புக்குத்தக்கதாக இலக்கம் பார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

5. அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒருவயதுள்ளதுமாய் இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்துகொள்ளலாம்.

6. அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,

7. அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,

8. அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.

9. பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள யாவையும் ஏகமாய் நெருப்பினால் சுட்டதாய் அதைப் புசிப்பீர்களாக.

10. அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக.

11. அதைப் புசிக்கவேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா.

12. அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசம் எங்கும் கடந்துபோய், எகிப்துதேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.

13. நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.

பாடம்

 

தேவன் ஆசீர்வதிப்பதாக வாக்குத்தத்தம்பண்ணிய குடும்பம் பெருகியது. ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கு, யாக்கோபைப் பெற்றான். யாக்கோபுக்குப் பன்னிரண்டு புத்திரர்கள் இருந்தார்கள். அவர்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் பிதாக்களாக ஆனார்கள். ஒரு பஞ்சத்தின் நிமித்தமாகத் தேவனுடைய ஜனங்கள் எகிப்துக்குக் குடிபெயர்ந்தார்கள். அதற்கடுத்த நானூறாண்டுகளில், அவர்கள் எழுபதுபேர்களடங்கிய ஒரு கூட்டுக்குடும்பம் என்பதிலிருந்து, ஏறத்தாழ இருபது இலட்சம் ஜனங்களாகப் பெருகினார்கள். அவர்கள் வளர்ந்து பெருகியபோது, அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள். ஆனால், உதவி வேண்டி அவர்கள் எழுப்பிய கூக்குரலைத் தேவன் கேட்டு, அவர்களை விடுவித்தார்.

இனவாத ஒடுக்குமுறை மனிதகுல வரலாற்றின் மிகப்பெரிய தீமைகளில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. மிகவும் பண்டைக்காலத்தைய உதாரணங்களுள் ஒன்று, எகிப்தில் கட்டாய உழைப்புக்காகக் கொத்தடிமைகளாக்கப்பட்ட, தேவனுடைய ஜனங்களுடன் தொடர்புடையதாகும். ஆனால், பிறக்கும் எபிரெய ஆண்பிள்ளைகளையெல்லாம் நைல் நதியிலே போட்டுவிடும்படி இடப்பட்ட பார்வோனின் கட்டளை மாபெரும் தீமையாயிருந்தது (யாத்திராகமம் 1:22).

எனவே, மோசே பிறந்தபோது, அவனது தாய் அவனுடைய ஜீவனைக் காப்பாற்றும்படி, அவனை ஒரு கூடையிலே வைத்து, நைல் நதியோரமாய் ஒளித்துவைத்திருந்தாள். பார்வோனின் மகள் அவனைக் கண்டு, அதிசயமான தேவ வழிநடத்துதலின்படி, மோசேக்குப் பாலூட்டி வளர்த்துவருமாறு அவனுடைய தாயையே நியமித்தாள்.

மோசே அரண்மனையில் வளர்ந்தான். ஆனால், அவன் எகிப்தில் நிஜ வாழ்வைக் கண்டபோது, தன் சொந்த ஜனங்கள் நடத்தப்பட்ட விதத்தைப் பார்த்துக் கடுங்கோபமடைந்தான். தான் ஏதாவது இதற்காகச் செய்யவேண்டுமென்று, எபிரெயர்களில் ஒருவனைக் கொடுமையாய் நடத்திய ஓர் எகிப்தியனைக் கொன்றுபோட்டான். இதைப் பற்றிய தகவல் வெளியில் தெரியவந்தபோது, அவன் தன் உயிர் தப்ப ஓடவேண்டியதாயிற்று. அதன் விளைவாக, மீதியான் தேசத்தில், அறியப்படாத ஓரிடத்தில் குடியேறி, சிப்போராளை மணந்துகொண்டு, ஒரு மேய்ப்பனாகத் தன் ஜீவனத்தை அமைத்துக்கொண்டான். அரண்மனையில் தன் வாழ்க்கையை ஆரம்பித்த மோசே, இப்பொழுது அறியப்படாத ஒருவனாக வாழ்ந்துகொண்டிருந்தான்.

தேவன் தமது மௌனம் கலைக்கிறார்

உலகப்பிரகாரமான இன்றைய பல்கலைக்கழம்போன்ற ஒன்றில், எந்தவொரு மாணவனையும்போலவே மோசேயும், ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் தேவனைப்பற்றித் தன் தாயிடமிருந்து கேட்டறிந்த போதனைகளிலிருந்து மிகவும் வித்தியாசப்பட்டிருந்த நம்பிக்கைகள் மற்றும் தத்துவங்களுடன் போராடியிருப்பான். அரண்மனையில், எகிப்திய தேவதைகளான, ஓசைரிஸ், ஹேகெட், ஏபிஸ் மற்றும் ரா ஆகியவற்றின் வழிபாடுகளைப் பற்றி அவன் கற்றிருந்திருக்க வேண்டும்.

அநேகத் தெய்வங்களுக்குள், வேதாகமத்தின் தேவனும் ஒருவர் என்றும், நீங்கள் வணங்குகிற தெய்வமானது, நீங்கள் வளர்க்கப்பட்ட கலாசாரத்தின் ஒரு பிரதிபலிப்பு மாத்திரமே என்றும் அனுமானித்துக்கொள்வது, மோசேக்கு எளிதாக இருந்திருக்கும். ஆபிரகாமுக்குத் தேவன் தரிசனமாகி ஐந்நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆதலால், மோசேக்கு இருந்த மிகப்பெரிய கேள்வி, “தேவன் யார்?” என்பதாகும். இதன் விடையை அவன் எப்படிக் கண்டுபிடித்தான் என்னும் வரலாறு, யாத்திராகமம் 3-ல் காணப்படுகிறது.

தன்னில் தானே நின்று எரியும் அக்கினி

“அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது” (யாத்திராகமம் 3:2). மோசே, ஒரு முட்புதரில் அக்கினி பற்றியிருந்ததைக் கண்டான். ஆனால் அந்த அக்கினியானது, அது பற்றியிருந்த முட்புதரைப் பட்சித்துப்போடவில்லை. அந்த அக்கினி, தன்னில் தானே நின்று எரிகிறதாயிருந்தது. நெருப்பு ஜுவாலைகள், தங்களைத் தூண்டி எரியவிடுகிற எரிபொருள் தீர்ந்ததானால், அவிந்துபோய்விடுகின்றன. ஒரு மெழுகுவர்த்தியானது, மெழுகு தீரும் வரை மாத்திரமே எரிகிறது. பின்பு, அதன் சுடர் அணைந்துவிடுகிறது. ஆனால் இந்த ஜுவாலையோ, மற்றவைகளைப்போல் இல்லை. அது தன் ஜீவனைத் தானே தற்காக்கிறதாயிருந்தது. மோசே ஒருபோதும் அதைப்போல ஒன்றைக் கண்டதில்லை.

மோசே கிட்ட நெருங்கிச் சென்றபோது, தேவன் அக்கினியின் நடுவிலிருந்து அவனுடனே பேசினார்: “நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன்” ;(3:6). பின்பு தேவன், தாம் அறிந்துகொள்ளப்படவேண்டுமென்று அவர் விரும்பியதான நாமத்தை வெளிப்படுத்தினார்: “இருக்கிறவராக இருக்கிறேன்” (3:14).

தேவன் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்குத் தம்மையே வெளிப்படுத்தினார். ஆனால், அவர்களது விசுவாசத்தைச் சார்ந்து அவர் இருக்கவில்லை. தொழில்கள் வாடிக்கையாளர்களைச் சார்ந்துள்ளன. பள்ளிகள் மாணவர்களைச் சார்ந்துள்ளன. மற்றும், சபைகள் அங்கத்தினர்களைச் சார்ந்துள்ளன. ஆனால் தேவன் விசுவாசிகளைச் சார்ந்திருக்கவில்லை. தேவன் இருக்கிறார். அவர் தாமாகவே தமது சொந்த வல்லமையால் இருக்கிறார். அப்படி அவர் இருக்கிற காரணத்தால், நாம் அவரை விசுவாசித்தாலும், விசுவாசியாவிட்டாலும், அவர் எப்பொழுதுமே இருப்பார்.

தேவனை மறுவடிவமைத்தலாகிய அந்தரங்க அவமதிப்பு

தேவன் இருக்கிறவராகவே இருக்கிறவர். நாம் விரும்புகிறபடியெல்லாம் இருக்கக்கூடிய, யாரோவொரு நபராக அவர் இல்லை. நியாயந்தீர்க்கிற ஒரு தேவனைத் தாங்கள் நம்பவில்லை என்றோ, இயேசுவின் மூலமாக மட்டுமே ஜனங்களை இரட்சிக்கிற ஒரு தேவனைத் தாங்கள் நம்ப முடியாது என்றோ மக்கள் கூறும்பொழுது, அவர்கள் உண்மையில் என்ன சொல்ல வருகிறார்களென்றால், அவர்கள் வேதாகமம் கூறும் தேவனை விரும்பவில்லை, அத்துடன் தங்களுக்கு அதிகம் விருப்பமாயிருக்கிற விதத்தில் வேறொரு தெய்வத்தைக் கண்டுபிடிக்கத் தீர்மானித்துள்ளனர் என்பதேயாகும்.

இது எவ்வளவு அவமரியாதையான குற்றம் என்பதை உணர்ந்துகொள்ள, ஒரு மனிதன் தன் மனைவியின் டிஜிட்டல் படத்தைத் திருத்தம் செய்து, தான் விரும்பாத அனைத்து அம்சங்களிலும் மாற்றங்களைச் செய்வதைக் கற்பனை செய்துபாருங்கள். அவள் சற்று எடை கூடியவளாகத் தோற்றமளிக்கிறாள். அதனால், அவன் அவளது உருவத்தை “மறுசீரமைப்பு” செய்கிறான். பிறகு, அவன் விரும்பியபடி அந்தப் படம் உருவாகிறபோது, அவன் தன் மனைவியிடம், “நீ இப்படித் தோற்றமளிப்பதைத்தான் நான் விரும்புகிறேன்!” என்று கூறுகிறான்.

அது மெய்யாகவே அவமரியாதையான கொடுங்குற்றம்! அம்மனிதனின் மனைவி

நன்றாக அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து, எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக, “நான் யாராக இருக்கிறேனோ, அதுதான் நான். நான் எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறபடி இருக்கக்கூடியவள் நான் இல்லை,” என்று சொல்லியிருக்கக்கூடும். அதைப்போலவே, நாம் வேதத்தைத் திறந்து, தேவனைக் குறித்து நமக்குப் பிடிக்காதவற்றைப் பார்த்து, நமக்கு மிகவும் பிரியமானதொரு உருவத்தில் அவரை மறுவடிவமைப்பது, தேவனை ஆழ்ந்த விதத்தில் அவமதிப்பதாகும். தேவன், நீங்கள் விரும்புகிறபடியெல்லாம் இருக்கக்கூடிய, யாரோவொரு நபராக இல்லை. அவர் இருக்கிறவராகவே இருக்கிறவர்!

வாதைகளின் நோக்கம்

வேதாகமத்தின் தேவன் தம்மை, “நான் இருக்கிறேன்,” என்று கூறுவதெல்லாம் மிகவும் சரிதான். ஆனால், அவர் இருக்கிறார் என்றும், மற்றத் தெய்வங்கள் இல்லையென்றும் நாம் அறிந்துகொள்வது எப்படி? வாதைகள் கூறும் விஷயமே அதுதான் (யாத்திராகமம் 7-12). தேவ ஜனங்களைப் போகவிடவேண்டுமென்ற தேவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியப் பார்வோன் மறுத்தான். அவன் தன் வாழ்வில் தேவனின் அதிகாரத்தைக் கண்டுணரவில்லை. ஒருவேளை அவன், தனக்கென்று சொந்தமாகக் கடவுள்கள் இருக்கிறார்கள் என்றும், மோசேயிடம் பேசிய தேவனுக்குக் கீழ்ப்படியத் தனக்கு எந்த அவசியமும் இல்லையென்றும் கருதிக்கொண்டு இருந்திருக்கலாம்.

பார்வோன், தன் சொந்தத் தேவர்களையே வழிபட்டுக்கொண்டிருக்கலாம் என்று தொடர்ந்து நம்பிக்கொண்டிருந்த வரையிலும், ஒரே மெய் தேவனின் ஆளுகையதிகாரத்திற்கு அவன் ஒருபோதும் தலைவணங்கவில்லை. ஆதலால் ஜீவனுள்ள தேவன், எகிப்தியத் தேவர்களின் பின்பாக இயங்கிக்கொண்டிருந்த வல்லமைகளைத் தாழ்த்தி, வீழ்த்துவதன் மூலம், தாம் யாரென்பதை நிரூபித்தார். தேவன் சொன்னார், “எகிப்து தேவர்களின்மேல் என் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்” (12:12).

ஓசைரிஸ் (நைல் நதியின் கடவுள்), ஹேகெட் (பிறப்பின் கடவுள்) மற்றும் ரா (சூரியக் கடவுள்) உள்ளிட்ட பல எகிப்தியக் கடவுள்களைப் பற்றி மோசே கற்றிருந்ததை நாம் ஏற்கெனவே கேட்டோம். இந்தத் தெய்வங்களுள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஆசீர்வாதங்களை எகிப்துக்கு வருவித்தன என்பது இவைபற்றிப் பொதுவாக அறியப்படுவதாகும்.

வாதைகள் மோசேக்கும், பார்வோனுக்கும் இடையேயான ஒரு மோதல் மட்டுமே என்பதையெல்லாம் கடந்து, அதிக அளவிலான அச்சுறுத்தும் ஆபத்துக்களைக் கொண்டிருந்தவைகளாய் இருந்தன. தேவன், பார்வோனிடம் குறிப்பாக, “நைல்தான் உன்னைத் தாங்குகிறது என்று சொல்லிக்கொண்டு, நீ ஓசைரிஸை வணங்குகிறாய். ஆனால், நான் நைல்நதியை ஜீவனற்ற, சேறும் சகதியுமாக மாற்றுவேன். பிறப்பின் தெய்வமாகத் தவளைபோல் சித்திரிக்கப்படும் ஹேகெட்டை நீ வணங்குகிறாய். ஆனால், அவளை ஒருபோதும் அறிந்திராமல் இருந்தால் நன்றாயிருக்கும் என நீ விரும்பும் அளவுக்கு, நான் திரளான தவளைகளைப் பிறப்பிப்பேன். சூரியன் உன்மேல் பிரகாசிப்பான் என்று சொல்லிக்கொண்டு, நீ ரா தெய்வத்தை வணங்குகிறாய். ஆனால், நான் சூரியனை இருளாக மாற்றிவிடுவேன். நீ என்னுடைய ஸ்தானத்தில் வைத்திருந்ததெல்லாம் உனக்கு வாதையாக மாறிப்போகும்,” என்று சொன்னார்.

யாத்திராகமப் புத்தகத்தின் தொடக்கத்தில் எழுந்த மிகப்பெரிய கேள்வி எதுவெனில், ‘துன்புறும் தம் ஜனங்களைத் தேவனால் தப்புவிக்க முடியுமா, அப்படியே அவரால் முடிந்தாலும், அவர் செயல்படப் போதுமான கரிசனம் காட்டுவாரா?’ என்பதுதான். இன்றும்கூட, உலகில் நம்மைச் சுற்றி எழும் துன்பங்களைக் காணும்போது, நாம் அதே கேள்விகளைத்தான் கேட்கிறோம். தேவன் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார்: “எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களை விடுதலையாக்க… இறங்கினேன்” (3:7-8).

ஜீவனுள்ள தேவனை எதிர்த்தல்

பார்வோன் தன் அக்கிரமத்திலிருந்து மனந்திரும்பினால் அல்லது தீமை அழிக்கப்பட்டால் மட்டுமே, தேவ ஜனங்கள் அடக்குமுறையிலிருந்து காப்பாற்றப்பட முடியும். ஜனங்களைப் போகவிடுமாறு, பார்வோனுக்குத் தேவன் கட்டளையிட்டார். ஆனால், அவன் மறுத்தான். தேவன் முதல் வாதையை அனுப்பினார். ஆனால், அவன் துளியளவும் அசையவில்லை. மேலும் வாதைகள் தொடர்ந்தன. பார்வோன் எதிர்த்து நின்ற ஒவ்வொருமுறையும், அவனது எதிர்ப்புக்கான விலைக்கிரயமும் உயர்ந்துகொண்டே போனது.

நமது உலகம்சார்ந்த சமுதாயமும்கூட, தேவனை எதிர்ப்பதைத் தன் உரிமையாகக் கருதுகிறது. காரணம், தேவன் நியாயத்தீர்ப்பை வழங்குவார் என்பதை அது நம்பவில்லை. ஆனால், தேவன் தீமையை அழித்துவிடுவார் என்பதை வாதைகள் சுட்டிக்காட்டுகின்றன, இதை நீங்கள் உணர்ந்துகொள்ளும்போது, நமக்கோர் இரட்சகர் ஏன் தேவை என்பது உங்களுக்குப் புலப்பட ஆரம்பிக்கும்.

எகிப்தில் ஒரு இரத்த பலி

எகிப்தின்மேல் கடைசி வாதை வந்தபோது, தமது ஜனங்கள் பாதுகாக்கப்படும்படி, தேவன் ஒரு வழியுண்டாக்கினார். ஒவ்வொரு குடும்பமும் ஓர் ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும். நான்கு நாட்கள் அதை வைத்திருந்து, அதன்பின்பு அதை அடிக்க வேண்டும். அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தமானது, ஒவ்வொரு வீட்டின் வாசல் நிலைக்கால்களிலும் பூசப்பட வேண்டும். தேவன் சொன்னார், “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்” (12:13).

மோசே தேவனின் சத்தத்தைக் கேட்டான். இந்தப் பயங்கரமான இரவிலே, குடும்பங்கள் பாதுகாக்கப்படும்படியாகத் தேவன் ஒரு வழியை அருளியிருக்கிறார் என்று அறிந்துகொண்டான். பலியிடப்பட்ட ஒரு மிருகத்தின்; இரத்தத்தின் மூலம், விடுதலைக்கான வழி உண்டாயிருந்தது.

மோசே வீடு வீடாகச் சென்று, “ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மூடப்பட்டிருக்கிறீர்களா? அது உங்கள் வீட்டுக் கதவின் மீது இருக்கிறதா? நியாயத்தீர்ப்பின் நாள் வருகிறது. தேவன், ‘அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்,’ என்று கூறியிருக்கிறார். தேவனை அவரது வார்த்தையின்படியே ஏற்றுக்கொண்டு, அவரது கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள். உங்கள் வீட்டின் வாசல் நிலைக்கால்களில் அந்த இரத்தத்தைப் பூசுங்கள். ஏன் இதை இன்னும் நீங்கள் செய்யவில்லை?” என்று கேட்பதைச் சித்திரித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.

தேவன் ஒருமுறைகூட, “ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அளவுக்கு ஜெபங்களை நீங்கள் ஏறெடுத்தால், நான் உங்களைக் கடந்துபோவேன்,” என்று சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். அவர், “நீங்கள் நேர்மையாய் இருந்தால், நான் உங்களைக் கடந்துபோவேன்,” என்றும் கூறவில்லை. அவர், “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்,” என்று சொன்னார்.

இறுதி வாதை வந்த அன்று, ஜனங்களில் சிலர் தங்கள் வீட்டுக் கதவுகளை அண்ணாந்து பார்த்து, தேவனின் நியாயத்தீர்ப்பின் சூறாவளி வெளிப்பட்டபோது, ‘என்ன நடக்குமோ’ என்று யோசித்திருப்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அவர்கள் பின்பற்றித் தொடரவேண்டியிருந்ததெல்லாம் தேவனுடைய வார்த்தை மட்டுமே. இருபது இலட்சம் மக்கள் விசுவாசித்துக் கீழ்ப்படிந்தார்கள். அதனால், அவர்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய நியாயத்தீர்ப்பினோடே பாதுகாக்கப்பட்டார்கள்.

தேவ ஆட்டுக்குட்டி

வேதாகமத்தின் சரித்திரம் முழுவதிலும் இரத்தம்பற்றிய கருப்பொருள் வழிந்தோடிக்கொண்டேயிருக்கிறது. ஆதாமும், ஏவாளும் தோட்டத்தில் பாவம் செய்தபோது, “தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்” (ஆதியாகமம் 3:21). முதன்முதலில் பாவம் நுழைந்த அன்றைய தினத்திலேயே, தேவன் ஒரு மிருகத்தை அடித்தார் என்பதே அதன் அர்த்தமாகும்.

கீழ்ப்படியாமை மரணத்திற்கு நேராக எடுத்துச்செல்லும் என்று தேவன் ஆதாமிடம் கூறினார். அப்படியே அன்று தோட்டத்தில் ஒரு மரணம் நேரிட்டது. ஆதாமின் ஜீவன் காப்பாற்றப்பட்டது. அதற்குப் பதிலாக ஒரு மிருகம் மரித்தது. ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் சரித்திரத்திலும் இதேவிதமான காரியத்தை நாம் காண்கிறோம். ஈசாக்கிற்குப் பதிலாகப் பலியிடப்பட ஒரு மிருகத்தைத் தேவன் அருளினார். இப்பொழுது, எகிப்தில் ஒவ்வொரு குடும்பத்துக்காகவும் ஓர் ஆட்டுக்குட்டி அடிக்கப்படும்.

தேவன் அதே செய்தியை ஒரு புதிய தலைமுறைக்குப் போதித்துக்கொண்டிருந்தார். அவர், “நீங்கள் நியாயத்தீர்ப்பிலிருந்து இன்னொருவரின் மரணத்தினால் காக்கப்படுவீர்கள். அதில், இரத்தம் சிந்துதல் சம்பந்தப்பட்டிருக்கும். அது ஆதாமுக்கும், ஆபிரகாமுக்கும் அப்படித்தான் நிகழ்ந்தது. அது உங்களுக்கும் அப்படியே நிகழும்,” என்று கூறினார். “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபிரெயர் 9:22).

பழைய ஏற்பாட்டில் மிருகங்களைப் பலியிடுதல் இயேசுவின் வருகையைச் சுட்டிக்காட்டி முன்னறிவித்தது. யோவான் ஸ்நானகன் இயேசுவைக் கண்டபோது, அவன், “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!” என்றான் (யோவான் 1:29). அனைத்துத் தீமைகளையும் தேவன் அழித்துத் தீர்கிறதான, கடைசி நியாயத்தீர்ப்பினூடாக நாம் காப்பாற்றப்படும்படிக்கு, அவர் அருளிய ஆட்டுக்குட்டி, இயேசுவே.

எகிப்திலிருந்து புறப்பட்ட விடுதலை யாத்திரைக்கு ஆயிரத்து ஐநூறு வருடங்களின் பின், இயேசு தம் சீஷர்களுடன் பஸ்காவைக் கொண்டாடினார். போஜன வேளையின்போது, அவர் பாத்திரத்தை எடுத்து, “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது,” என்றார் (லூக்கா 22:20). இதன் மூலம் இயேசு தம் சீஷர்களிடம், எகிப்தில் தேவ ஜனங்களை விடுவித்துக் காத்த ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைப்போலவே, தம்முடைய சொந்த இரத்தம், கடைசி நாளில் நியாயத்தீர்ப்பிலிருந்து அவர்களை விடுவிக்கும் என்று கூறிக்கொண்டிருந்தார்.

வேதாகமக் கதையின் முடிவிலே, மகா திரளான பெருங்கூட்டமாகிய ஜனங்கள், சந்தோஷத்தினால் நிரம்பியவர்களாகத் தேவ சமூகத்தில் நின்றுகொண்டிருக்கக் காண்கிறோம். யார் இந்த ஜனங்கள்? அவர்கள் யாவரும், “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்” (வெளிப்படுத்தின விசேஷம் 7:14).

பழைய ஏற்பாட்டிலுள்ள மிருக பலிகளின் மூலம், இயேசு கிறிஸ்துவின் பலியின் அவசியத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளத் தமது ஜனங்களைத் தேவன் ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தார். “…நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே” (1 கொரிந்தியர் 5:7). அவர் தேவனின் நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் விழுந்துவிடாதிருக்க அதைத் தம்மேல் சுமந்துகொண்டார். ஆனால் பஸ்காவில் நிகழ்ந்ததுபோலவே, இரத்தம் சிந்தப்படுவது மட்டுமின்றி, அது பூசப்படவும் வேண்டும். தேவ ஜனங்கள் தங்கள் வீடுகளின் வாசல் நிலைக்கால்களில் இரத்தத்தைப் பூசியதான நிகழ்வில், விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் தேவையாயிருந்தது. அவ்விதமாகவே, இயேசுவின் இரத்தத்தின் இரட்சிக்கும் வல்லமை உங்கள் விசுவாசத்தின் மூலமாக உங்கள் மீது பூசப்படுகிறது.

கேள்விகள்

1. நீங்கள் வளர்ந்துவரும்போது அறிந்திருந்த தேவனைப் பற்றிய போதனைகளிலிருந்து வேறுபட்டிருந்த போதனைகளையும், தத்துவங்களையும் நீங்கள் எங்குச் சந்தித்தீர்கள்? இந்தப் போதனைகள் உங்களை எப்படிப் பாதித்தன?

2. தேவனைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கும் கதைகளெல்லாம் வெறும் பாரம்பரியக் கட்டுக்கதைகளோ என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? தேவன் பேசுவதை நீங்கள் கேட்டால் அவை மாறிவிடும் என்று நினைக்கிறீர்களா?

3. தேவனை/மதத்தைப் பற்றித் தீவிரமாகச் சிந்திப்பதைத் தவிர்த்திருக்கிறீர்களா? ஏன் அல்லது ஏன் இல்லை?

4. பஸ்காவின் இரவிலே, தேவனின் நியாயத்தீர்ப்பு ஏன் சில வீடுகளைக் “கடந்து போனது?” அன்றைய தினத்தில் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதிலே சம்பந்தப்பட்டிருந்தது என்ன?

5. இயேசு ஏன் சிலுவையின் மீது மரித்தார்? கிறிஸ்துவின் இரத்தம் இன்று எவ்வாறு ஒரு நபரின் வாழ்வில் பூசப்படுகிறது?