< முன் பகுதி




அடுத்த பாடம் >

lesson-7

நியாயப்பிரமாணம்

யாத்திராகமம் 19:16-20:21

பாடம் 7 – நியாயப்பிரமாணம்


Download PDF

வேதவசனம்
பாடம்
கேள்விகள்
வேதவசனம்

யாத்திராகமம் 19:16-20:21

16. மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.

17. அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.

18. கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.

19. எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.

20. கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.

21. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடிக்கும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி.

22. கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

23. அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: மலையைச் சுற்றிலும் எல்லை குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், ஜனங்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள் என்றான்.

24. கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும் ஜனங்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடிக்கு, எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதிருக்கக்கடவர்கள் என்றார்.

25. அப்படியே மோசே இறங்கி ஜனங்களிடத்தில் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.

யாத்திராகமம் 20:1-21

1. தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:

2. உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

6. என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.

7. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

8. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;

9. ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;

10. ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

11. கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

12. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

13. கொலை செய்யாதிருப்பாயாக.

14. விபசாரம் செய்யாதிருப்பாயாக.

15. களவு செய்யாதிருப்பாயாக.

16. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

17. பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

18. ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,

19. மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்.

20. மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான்.

21. ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.

பாடம்

தேவன் தன்னிடம், எரியும் முட்புதரிலிருந்து பேசிய இடத்திற்கே திரும்பிவருவது, மோசேக்கு ஒரு வித்தியாசமான உணர்வாயிருந்திருக்க வேண்டும். அவன் முதலில் அங்குச் சென்றபோது, அவனைச் சுற்றிலும் ஒரு செம்மறியாட்டு மந்தை சூழ்ந்திருந்தது. இப்போதோ, அவன் இருபது இலட்சம் ஜனங்களால் சூழப்பட்டிருந்தான். தேவன் உண்மையுள்ளவராய் இருந்தார். அவர் தம் ஜனங்களை எகிப்திலிருந்து விடுதலையாக்கி, அவர்களைச் சீனாய் மலைக்குக் கொண்டுவந்தது, பழைய ஏற்பாட்டிலுள்ள அவரது மாபெரும் அற்புதங்களுள் ஒன்று.

“கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது” (யாத்திராகமம் 19:18). அம்மலையின் அடிவாரத்தில், தடுப்புகள், அல்லது “எல்லைகள்” (19:12, 23) அமைக்கப்பட்டன. மலை முழுவதும் மிகவும் கடுமையாக அதிர்ந்தது. எக்காளசத்தம் மிகவும் பலமாய்த் தொனித்தது. தேவன், தம்முடைய ஜனங்களுக்குத் தமது நியாயப்பிரமாணங்களைக் கொடுப்பதற்காக இறங்கி வந்துகொண்டிருந்தார்.

தேவனுடைய கிருபையின் புதிய வெளிப்பாடு                            

இரட்சிக்கப்படாத மக்கள் பரலோகம் நோக்கி மேலேறுவதற்குத் தேவனின் நியாயப்பிரமாணம் ஓர் ஏணியாய் என்றுமே இருந்ததில்லை. அது, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் நியாயத்தீர்ப்பிலிருந்து காப்பாற்றப்பட்டிருந்த தேவ ஜனங்களுக்கு, எப்பொழுதுமே ஒரு வாழ்வியல் முறைமையாக இருந்துவந்துள்ளது. அதனால்தான், “உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே” (20:2), என்று தேவன் தம் ஜனங்களுக்கு நினைவுட்டுவதாகப் பத்துக் கற்பனைகள் தொடங்குகின்றன.

“இந்தக் கட்டளைகளையெல்லாம் பின்பற்றுவதால் நீங்கள் என் ஜனம் ஆகலாம் என்பதற்காக இவற்றை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்,” என்று தேவன் சொல்லவில்லை. அவர், “நீங்கள் ஏற்கனவே என் ஜனமாக இருக்கின்ற காரணத்தால், நான் இந்தக் கட்டளைகளை உங்களுக்குத் தருகிறேன்,” என்றுதான் சொன்னார். இரட்சிக்கப்படுவதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று கட்டளைகள் உங்களிடம் கூறவில்லை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தின் மூலம், உங்களைக் கிருபையினால் இரட்சிக்கும்போது, தேவன் உங்களை அழைக்கிறதான வாழ்வையே, கட்டளைகள் வரைபடமாகக் காண்பிக்கின்றன.

தேவ மகிமையின் ஒரு சிறு நிழலாட்டம்

பத்துக் கற்பனைகள் என்பவை, ஏதோ இஷ்டம்போலப் பட்டியலிடப்பட்ட விதிகளின் தொகுப்பல்ல. அவை, தேவனுடைய குணாதிசயங்களை நேரடியாகப் பிரதிபலிக்கக்கூடியவைகள்.

புதிய ஏற்பாட்டில், தேவமகிமையை இழந்துபோவதும், நியாயப்பிரமாணத்தை மீறுகிறதுமே பாவம் என்பதாக வரையறுக்கப்படுகிறது (ரோமர் 3:23; 1 யோவான் 3:4). இவையிரண்டையும் இணைத்துப் பார்த்தால், நியாயப்பிரமாணம் தேவனுடைய மகிமையின் வெளிப்பாடு என்னும் ஏற்கக்கூடிய முடிவுக்கு நாம் வரலாம். 

நீங்கள் விபசாரம் செய்யக்கூடாது என்பது ஏன்? ஏனெனில், தேவன் உண்மையுள்ளவர். நீங்கள் களவு செய்யக்கூடாது என்பது ஏன்? ஏனெனில், தேவன் நம்பத்தக்கவர். நீங்கள் பொய் சொல்லக்கூடாது என்பது ஏன்? ஏனெனில், தேவன் சத்தியத்தைப் பேசுகிறவர். நீங்கள் பிறனுக்குரியதை இச்சிக்கக்கூடாது என்பது ஏன்? ஏனெனில், தேவன் சமாதானமாகவும், தம்மில்தாமே பூரணராகவும் இருக்கிறார். 

தேவன், “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்” (யாத்திராகமம் 20:3), என்று சொல்லும்போது, அவர் ஒருவரே தேவன் என்பதே அதன் காரணமாயிருக்கிறது. அவரைப்போல வேறு ஒருவரும் இல்லை. மேலும், தேவன் தமது கிரியைகளிலெல்லாமிருந்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்பதனாலேயே, வாரத்தின் ஒரு நாளில் நாம் ஓய்ந்திருக்கவேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார். 

தேவனின் கட்டளைகள், இரட்சிக்கப்பட்ட, அவருடைய சொந்த ஜனங்களுக்கே கொடுக்கப்பட்டன. நீங்கள் அவருக்குரியவர்களானால், அவை உங்களுக்குரியவை. தேவன் உங்களிடம், “நீ என்னுடையவர்கள், ஆகவே நான் யார் என்கிற மாதிரியின்மேல், உன் வாழ்க்கையை அமைத்துக்கொள், தெய்வீகமான ஒரு வாழ்க்கை இப்படித்தான் காணப்படும்,” என்று சொல்கிறார். 

தேவனின் அன்பைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி 

தேவன் அன்பாகவே இருக்கிறார். அவரது பத்துக் கற்பனைகளும் அன்பான ஒரு வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதைப் பறைசாற்றுகின்றன. ஒரு முறை நமது ஆண்டவராகிய இயேசுவிடம், “நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது?” (மத்தேயு 22:36), என்று கேட்கப்பட்டது. ஏதேனும் ஒரு கட்டளையைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, இயேசு அவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே” (மத்தேயு 22:37-39), என்று சொன்னார். 

  
கேள்விகள்

1. பத்துக் கற்பனைகள் எப்படித் தொடங்குகின்றன? அவை ஏன் கொடுக்கப்பட்டன? நியாயப்பிரமாணம் இன்று நமக்கு விடுக்கும் செய்தி என்ன?

2. பத்துக் கற்பனைகள் காலத்துக்கு உட்பட்டவையா? இன்று நமக்குப் புதிய கற்பனைகள் தேவைப்படுகிறதா? ஏன் அல்லது ஏன் இல்லை?

3. உங்களுக்கு அனைத்தும் நன்றாகவே நடந்துகொண்டிருந்தால், அத்துடன் நீங்கள் பொதுவாக மதிப்புக்குரிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவருவதாக உணர்ந்தால், பத்துக் கற்பனைகளைப் புறக்கணிப்பது பாதுகாப்பானதா? ஏன் அல்லது ஏன் இல்லை?

4. ஒரு நபர், தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் நோக்கத்தை அவர் தவறவிட்டுவிட்டாரோ என்று எவ்வாறு அறியலாம்?

5. நியாயப்பிரமாணம் எவ்வாறு இரயில் தடத்தைப் போலிருக்கிறது? நியாயப்பிரமாணம் ஒரு நபரின் வாழ்வில் செய்ய வேண்டுமென்று தேவன் நினைக்கிற கிரியைகளை அது நிறைவேற்றி முடிக்கும் பொருட்டு, அதற்கு இன்னும் வேறென்ன தேவைப்படுகிறது?