பாவநிவிர்த்தி
யாத்திராகமம் 32: 1-16
பாடம் 8 – பாவநிவிர்த்தி
Download PDF
வேதவசனம்
பாடம்
கேள்விகள்
வேதவசனம்
யாத்திராகமம் 32: 1-16
1. மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்.
2. அதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.
3. ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
4. அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.
5. ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான்.
6. மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.
7. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்.
8. அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.
9. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள்.
10. ஆகையால் என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.
11. மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?
12. மலைகளில் அவர்களைக் கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும்.
13. உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்.
14. அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.
15. பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.
16. அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது.
பாடம்
ஒரு புமியதிர்ச்சியையும், ஒரு காட்டுத்தீயையும் அத்துடன் ஒரு பேரிடி மின்னலையும் ஒரே நேரத்தில் அனுபவிப்பதைக் கற்பனை செய்துபாருங்கள்! நிச்சயம் முற்றிலும் பயங்கரமானது. தேவன் சீனாய் மலைமேல் இறங்கிவந்தபோது அப்படித்தான் இருந்தது (யாத்திராகமம் 19:16-20). தேவனைச் சந்திக்கும்படியாக, மோசே ஜனங்களைத் திரட்டினான். ஆனால், தேவனுடைய பிரசன்னத்தின் பயங்கரத்தை உணர்ந்தவர்களாய், ஜனங்கள் மோசேயை நோக்கி, “நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்” (20:19).
மோசே நாற்பது நாட்கள் இரவும் பகலும் மலையின்மேல் தங்கியிருந்தான் (யாத்திராகமம் 24:18). அந்த 40 நாட்கள் முடிகின்றபோது, காத்திருந்ததனாலே ஜனங்கள் மனம் சலித்துப்போனார்கள். மோசேயின் தாமதத்தினாலே சோர்ந்தவர்களாய், அவர்கள் கூட்டங்கூடி மோசேயின் சகோதரனாகிய ஆரோனைச் சூழ்ந்துகொண்டு, “… அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்… எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும்” (32:1), என்று சொன்னார்கள்.
விக்கிரகங்களை உண்டாக்க வேண்டாம் என்று தேவன் ஜனங்களுக்குக் கட்டளையிட்டு ஆறு வாரங்கள்கூடச் செல்லவில்லை. அதற்குள், தங்கள் செவி கேட்கத் தொனித்துக்கொண்டிருந்த தேவனின் குரலை மறந்துவிட்டுத் தேவனின் கட்டளையை மீறினார்கள். அதேபோல், ஆவிக்குரிய, பழைய அனுபவங்களிலேயே நீங்கள் வாழ்க்கையைத் தொடர முடியாது. நிகழ்காலத்திலும் நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படியவேண்டும். அதற்கு, உங்கள் கடந்தகால அனுபவங்கள் ஒருபோதும் ஈடாக முடியாது.
மதம் சார்ந்த ஒரு புதிய இயக்கம்
மோசேயின் வரிசையில் அடுத்துத் தொடர, இயல்பாகத் தெரிந்துகொள்ளப்பட்ட நபராக ஆரோன் காணப்பட்டான். அவனுக்கோ, ஏற்கெனவே சொந்தமாக ஒரு ஊழியம் இருந்தது. தேவஜனங்கள் அவனை அணுகியபோது, அவன் முன்வந்து தங்களை வழிநடத்தத் தயாராக இருப்பதைக் கண்டார்கள். தனது புதிய ஊழியத்தை நிறுவுவதற்கு நிதி திரட்டியதே ஆரோனின் முதல் நடவடிக்கை ஆகும். ஜனங்கள் தங்கள் பொன்னணிகளை நன்கொடையாகக் கொடுக்க, அந்தக் காணிக்கைகளிலிருந்து அவன் ஒரு பொன் கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். ஆரோன், “மக்கள் என்ன விரும்புகிறார்கள்?” என்ற கேள்வியை முதன்மையாகக்கொண்டே ஊழியம் செய்கிறவர்களுக்கெல்லாம் வருந்தத்தக்கவிதத்தில் தந்தையானான். வியாபார ரீதியிலான கோட்பாடுகள், ஊழியத்தை இயக்கும்படி அனுமதிப்பது, விரைவாகவே விக்கிரகாராதனைக்கு வழிநடத்திவிடுகின்றது.
நிச்சயமாக, தான் செய்தது பாரம்பரிய முறைமைகளின்படி மிகச்சரியானவையே என்று, ஆரோன் நியாயப்படுத்த விரும்பினான். அதனால்தான்; அவன், “நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான்” (யாத்திராகமம் 32:5). ஆனால், ஆரோனின் பண்டிகையானது, தன் சுயத்தை வெளிப்படுத்திக்கொள்வதில் முனைந்து ஈடுபடுவதற்கான ஒரு கருவியேயன்றி வேறில்லை.
மறுநாள், “ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்” (32:6). வேறொரு வகையில் சொல்வதானால், மதுபானம் புரண்டோடியது. ஜனங்கள் நிர்வாணமாக இருந்தார்கள். அது ஒரு மாபெரும் கொண்டாட்டம். ஆனால், அது தவறான கடவுளுக்கான ஆராதனையாக இருந்தது.
தற்காலத்தைச் சேர்ந்த ஒரு செய்தி நிருபர் இதுகுறித்து என்ன சொல்லக்கூடும் என்று சிந்திப்பது பயனுள்ளதாக இருக்கும். எப்படியும், உலக மதம் ஒன்றைப் பற்றி செய்தி கொடுக்கும் ஒரு செய்தியாளருக்குப் பொன் கன்றுக்குட்டி ஒரு மாபெரும் செய்திக்கான பொருளாக இருக்கும். “இங்கே, இந்தச் சீனாய் வனாந்தரவெளியில், குறிப்பிடத்தக்க, புதியதொரு மத இயக்கம் பிறந்திருக்கிறது,” என்று நமது நிருபர் தொடங்குவார். “பிரத்யேகப் படைப்பாற்றல் மற்றும் சுய பிரகடனம் ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படும் நூதனமானதொரு வழிபாட்டு முறையை மக்கள் பின்பற்றி வருகின்றனர்,” என்று செய்தி வழங்குவார். அதன்பின்பு, பொன் கன்றுக்குட்டியின் பண்டிகை, தங்களுக்கு ஆழ்ந்த அர்த்தம் பொதிந்ததாயிருந்தது என்று சொல்லக்கூடிய, உற்சாகம் கிளர்ந்து துள்ளும் நடனக் கலைஞர்களுடன் ஒன்றிரண்டு நேர்காணல்கள் இருக்கும்.
முடிவுக்கு வந்த கொண்டாட்டம்
மக்கள் அதை அர்த்தமுள்ளதாகக் கருதியிருக்கலாம். ஆனால், தேவன் அதை அருவருப்பானதாகக் கருதினார். தேவனுடைய ஜனங்கள், அவருடைய முதல் கட்டளைகளில் ஒன்றை மீறியதன் மூலம், தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக்கொண்டார்கள். அது, தேவன் இந்த ஜனங்களை முற்றிலுமாக அழித்துவிட்டு, மோசேயுடன் மீண்டும் புதிய தொடக்கத்தைத் தொடங்க ஆயத்தமாயிருக்குமளவுக்கு, மிக விரைவாகவும், மிக வெளிப்படையாகவும் நிகழ்ந்தது: “ஆகையால் என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன்” (32:10).
ஜனங்களிடம் திரும்பிவந்ததும் மோசேயின் முதல் வேலை, ஆரோனை நேருக்கு நேராய் எதிர்த்துக் கேள்வி கேட்டதுதான்: “நீ இந்த ஜனங்கள்மேல் இந்தப் பெரும்பாதகத்தைச் சுமத்துகிறதற்கு, இவர்கள் உனக்கு என்ன செய்தார்கள்?” (32:21). ஜனங்கள் ஆரோனை ஏதேனும் கொடிய சித்திரவதைக்குள்ளாக்கினார்களா? சொல்லப்போனால், தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாதபடிக்கு, அவனைத் தூண்டி, அதில் முனைப்பாய் ஈடுபட வைத்ததெல்லாம் மக்களின் வற்புறுத்தல்தான். மக்களின் தேவைகள் மற்றும் வியாபார நோக்கங்களின் நெருக்கடிகளை எதிர்க்க முடியாத காரணத்தினால், அவன் அவர்களைப் பாவத்திற்குள் நடத்திவிட்டான்.
ஆரோன் பொறுப்பிலிருந்து நழுவ முயற்சித்தான். அவன் அந்தப் பொன்னை, “சிற்பக்கருவியினால் கருப்பிடித்து” ஒரு விக்கிரகமாக வார்ப்பித்தான் (32:4), ஆனால், மோசே தன் சகோதரனை எதிர்கொள்ளும்போதோ, ஆரோன் கதைக்கு ஒரு பரிசுத்தப் பூச்சுப் பூசிய விளக்கத்தைத் தந்தான்: “அப்பொழுது நான்: பொன்னுடைமை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரக்கடவர்கள் என்றேன். அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது” (32:24). இதுதான் நடந்தது!
தன் சகோதரனை எதிர்கொண்டபின், அதில் பயனேதும் இல்லை என்றறிந்த மோசே, ஒரு தீர்மானத்துக்கு வரும்படியாக ஜனங்களை அழைத்தான்: “கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள்” (32:26), என்றான். ஒவ்வொருவருக்குமே மனந்திரும்புவதற்கான வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அதில் பிரமிக்கத்தக்க அளவுக்குப் பெரும்பாலானவர்கள் மனந்திரும்பினார்கள்.
பாவநிவிர்த்தியின் அர்த்தம்
மறுநாளில் மோசே ஜனங்களை நோக்கி, “நீங்கள் மகா பெரிய பாவஞ்செய்தீர்கள்” (32:30), என்றான். ஊரறிந்த ஒரு இரகசியத்தை, மீண்டும் அவன் பேசுவதைக் கவனியுங்கள்! இந்த ஜனங்கள் ஏற்கெனவே தாங்கள் பாவம் செய்துவிட்டதை அறிந்திருந்தனர். அதற்காக அவர்கள் மனந்திரும்பவும் செய்தார்கள்! பின்னர் ஏன், மோசே மறுநாள் எழுந்து அவர்களிடம், “நீங்கள் மகா பெரிய பாவம் செய்தீர்கள்,” என்று சொல்லவேண்டும்? ஏன், மன்னிப்புக் கேட்டது என்னவாயிற்று?
மோசே அத்துடன் அந்தப் பேச்சை ஏன் நிறுத்தவில்லை? அவர்கள் மன்னிக்கப்பட்டார்கள் என்பதை அவர்களுக்குச் சொல்லவேண்டியது அவன் கடமையில்லையா? இந்த ஜனங்கள் மனம் வருந்தினார்கள். அதற்குமேல் மோசே அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? மேலும், அவர்களை மன்னிப்பது தேவனுடைய காரியம் இல்லையா? பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு முன்பாக வேறொரு காரியம் நிகழ்ந்தாகவேண்டும்.
வேதாகம வரலாற்றின் இக்குறிப்பிட்ட கட்டத்தில், வேதாகம வார்த்தையாகிய பாவநிவிர்த்தி என்னும் சொல்லைக் காணப்பெறுகிறோம். மோசே ஜனங்களிடம், “உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்கு ஏறிப்போகிறேன்” (32:30), என்றான். பாவநிவிர்த்தி என்பது தவறான ஒன்றைச் சீர்பொருந்தச்செய்ய முற்படுவதாகும். குற்றம் காணப்படுகிற எவ்விடத்திலும், நாம் அதற்குப் பரிகாரம் என்ன என்கிற கேள்விக்குறியைச் சந்திக்கிறோம். காரியங்களை எது சீர்பொருந்தப்பண்ணும்?
மனம் வருந்துவது சீர்பொருந்தச் செய்யாது
ஒரு முறை ஒரு போதகர், கல்லூரியில் கால் பந்தாட்டப் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிரணியினர் கோல் போடுவதை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தனர். அவர்தான் கடைசிக் காப்பாளனாக நின்றிருந்தார். வாழ்வா, சாவா என்கிற ஒரு சூழலில், எப்படியோ பந்தைக் கோல் எல்லைக்கு அப்பால் அகற்றிவிட அவரால் முடிந்தது.
துரதிர்ஷ்டவசமாக, பந்து கல்லூரித் தலைவரின் அறையை நோக்கிப் பயணித்து, அவரது ஜன்னலை நொறுக்கியது. தலைவர் மிக மெச்சும்படியாக அதைப்பற்றிப் பட்சமாய் நடந்துகொண்டார் – ஆனால், ஜன்னலை மாற்றித் தரவும், ஏற்பட்ட உடைசலை அப்புறப்படுத்திச் சுத்தம் செய்யவும்வேண்டுமென அவர் எதிர்பார்த்தார். உடைத்ததைச் சீர்ப்படுத்தச் செய்யவேண்டியிருந்தது அதுதான்.
ஒரு பாவநிவிர்த்தி என்பதைக் குறித்து நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய முதல் விஷயம், அதற்குத் தேவைப்படுபவை எவை என்பது. அதற்குத் தேவைப்படுபவை, எப்போதுமே பாதிக்கப்பட்ட தரப்பினரால்தான் நிர்ணயிக்கப்படுகின்றன. அங்கே, உடைக்கப்பட்ட ஜன்னலின் அருகே, மண்ணில் புரண்ட அரைநிஜாருடன் நின்றுகொண்டிருந்த அந்தப் போதகருக்கு, அவ்வளவு ஒன்றும் வாக்குவாதத் திறமை இருந்ததாகத் தோன்றவில்லை! அவர், “நான் மிகவும் வருந்துகிறேன்,” என்றார். அது நல்லதே. ஆனாலும், அது போதுமானதாக இல்லை. சேதம் விளைவிக்கப்பட்டாயிற்று, இப்பொழுது அது சரி செய்யப்படவேண்டும். அந்தப் போதகர், “மீண்டும் இதுபோல நான் செய்யமாட்டேன்,” என்று சொல்ல விரும்பினார். ஆனால், அதுவும்கூடப் பெரிதாக ஒன்றும் பயன்படப்போவதில்லை என்று உணர்ந்தார்.
கல்லூரியின் தலைவர், “நீங்கள் செய்யவேண்டியது இதுதான். உடைசலைச் சுத்தம் செய்துவிட்டு, ஜன்னலைச் சரியாக மாற்றித் தாருங்கள்,” என்று சொன்னார். அதுதான் காரியங்களைச் சீர்ப்படுத்தச் செலுத்தப்படவேண்டிய விலைக்கிரயமாகிய பரிகாரம். தேவனுக்கு விரோதமான நமது தவறுகளை எது சீர்பொருந்தப்பண்ணும்?
சிலர், மனம் வருந்துவதால் எதையுமே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடலாம் என நினைக்கிறார்கள். நாம் மெய்யாகவே மனந்திரும்பி, உத்தமமாகவே மாற முயற்சித்தால், தேவனுடன் கணக்கு நேராகிவிடும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால், மனம் வருந்துவது மாத்திரம் போதாது. ஏறக்குறைய இருபது இலட்சம் பேர் மனந்திரும்பினார்கள். அப்பொழுதும் அங்கே ஒரு பிரச்னை இருந்தது. நாம் செய்தவற்றுக்காக மனம் வருந்துவது, நமது பாவத்தின் குற்றவுணர்ச்சியை அகற்றாது. நமக்கொரு பரிகாரம் தேவை.
ஒரு மாபெரும் தலைவர் சீர்பொருந்தச் செய்ய முடியாது
ஒருவேளை, பாவநிவிர்த்தி செய்வதென்பது, மோசேயால் செய்யக்கூடுமான ஒன்றாக இருந்ததா? தேவஜனங்களின் வாழ்வைக் காக்கும்பொருட்டு, தேவன் வேறொருவரின் ஜீவனை ஏற்க ஆயத்தமாக இருந்தார் என்பதைப் பஸ்காவின்போது, ஆட்டுக்குட்டியின் மரணத்திலிருந்து அவன் அறிந்திருந்தான்.
மோசேயே ஆட்டுக்குட்டிக்குப் பதிலாகப் பாவநிவிர்த்திப் பலியாக இருந்திருந்தால்?
மோசே ஜனங்களிடம், “உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்கு ஏறிப்போகிறேன்” (32:30), என்றான். ஆக, தன்னார்வமாக முன்வர நமக்கொருவர் இருக்கிறார்! பழைய ஏற்பாட்டின் மிகப்பெரிய ஆவிக்குரிய தலைவன் முன்வந்து தேவனிடம், “ஐயோ, இந்த ஜனங்கள்… மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள். ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும்” (32:31-32), என்று சொன்னான். மோசே தன் வாழ்வையே ஜனங்களுக்காக ஒப்புக்கொடுக்கத் தயாராக இருந்தான். அதிலும், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டுத் தான் நரகத்திற்குச் செல்ல நேர்ந்தாலும், அவன் அதற்கு ஆயத்தமாகவே இருந்தான்.
ஆனால், தேவன் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை: “உடன்பாடில்லை, மோசே. பாவநிவிர்த்தி செய்வது என்பது உன்னுடைய தகுதிக்கு அப்பாற்பட்டது.” மோசேக்கு, அவனுக்கே உண்டான பாவங்கள் இருந்தன. அப்படித் தன் சொந்தப் பாவங்களுடனிருக்கும் ஒரு மனிதன், மற்றவர்களுடைய பாவங்களுக்காகப் பரிகாரம் செய்யக்கூடிய நிலையில் இல்லை. இந்த மக்களுக்கு வாழ்க்கை தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும். ஆனால், பாவநிவிர்த்தி இல்லாமல், அவர்கள் தேவனுடைய பிரசன்னத்தைப் பறிகொடுக்க நேரிடும் (33:3).
ஜனங்கள் இதைக் கேட்டபோது, துக்கித்தார்கள் (33:4). இப்பொழுது அவர்கள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படையான கேள்வியைப் பிரத்யேகமான விதத்தில் எதிர்கொண்டார்கள்: “தேவனுடைய பிரசன்னத்தை மீண்டும் கொண்டுவர என்ன செய்யவேண்டும்? மனம் வருந்துவது அதைச் செய்யாது எனில், மோசே அதைச் செய்ய முடியாது எனில், நம் பாவங்களைப் பரிகரிக்கக்கூடியது எது?”
அதிகபட்ச முயற்சியுடனான கீழ்ப்படிதல் சீர்பொருந்தச் செய்யாது
ஒருவேளை, தீவிர அர்ப்பணிப்புடன் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல், தேவ பிரசன்னத்தைத் திரும்பக் கொண்டுவந்துவிடுமா? யாத்திராகமம் 25-30 அதிகாரங்களில், வாசஸ்தலத்தைக் கட்டுவதற்கான திட்டவட்டமான கட்டளைகளைத் தேவன் கொடுத்தார். அத்துடன், இந்தக் கட்டளைகளுக்குத் தேவஜனங்கள் கீழ்ப்படிந்தார்கள் என்பதை யாத்திராகமம் 36-39 அதிகாரங்கள் மிக நுணுக்கமாகப் பதிவு செய்கின்றன. தேவனின் ஜனங்கள், அவர் தங்களைச் செய்யச் சொன்னதை அப்படியே சரியாகச் செய்தார்கள்: “கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்” (39:32).
வாசஸ்தலத்தின் திரைச்சீலைகளின் மீது ஒரு பெண் பூத்தையல் வேலைப்பாடுகளைச் செய்வதைக் கற்பனை செய்துபாருங்கள். தேவனின் விளக்கமான வழிமுறைகளை அவள் பின்பற்றும்போது, நான் கீழ்ப்படிந்தால் ஒருவேளை தேவன் எங்களிடம் திரும்பிவருவார் என்று நினைக்கிறாள். ஒரு மரத்தச்சர், தான் தேவனைத் துக்கப்படுத்தியிருக்கக் கூடாது என்று நினைக்கிறார். அவர், என் கரங்கள் தேவன் கட்டளையிட்டவற்றைச் செய்யக் கூடுமானால், ஒருவேளை அவர் எங்களை மீண்டும் ஆசீர்வதிப்பார், என்று யோசிக்கிறார்.
தேவஜனங்கள் மிகவும் உன்னிப்பாகத் தங்களைக் கீழ்ப்படிதலுக்கு அர்ப்பணித்தார்கள். ஆனால், அவையனைத்திற்குப் பின்பும் தேவ பிரசன்னம் திரும்பிவருவதற்கான யாதொரு அடையாளத்தையும் காணோம். அவர்கள், அந்நேரத்தில் தேவனோடு சீர்பொருந்தும்படிச் செய்யத்தக்கது எதுதானென்று குழம்பியிருக்க வேண்டும்.
தகுதிவாய்ந்த ஒரு பலி சீர்பொருந்தச் செய்யும்
ஏழு மாதங்கள் கழித்து, ஜனங்கள் தேவபிரசன்னத்திற்காக ஏங்கிக்கொண்டிருந்த காலத்தில், அது எப்படி நிகழக்கூடுமென்று மோசே அவர்களிடம் சொன்னான்: “கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும்” (லேவியராகமம் 9:6). அவன் என்ன சொல்லப்போகிறான் என்பதைக் கேட்க, ஜனங்கள் ஸ்தம்பித்துப்போய், அமைதியாகக் காத்திருந்திருக்கலாம்.
பின்பு மோசே ஆரோனிடமாய்த் திரும்பி அவனை நோக்கி, “நீ பலிபீடத்தண்டையில் சேர்ந்து, உன் பாவநிவாரண பலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்” (9:7), என்றான். பாவநிவிர்த்தி செய்யப்படும்போது மட்டும்தான், தேவனின் பிரசன்னமும், ஆசீர்வாதமும் திரும்பிவர முடியும்.
தேவன் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான். என்ன நடக்குமோ என்று பார்ப்பதற்குக் காத்துக்கொண்டிருந்த வேளையில், மக்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டிருந்திருக்கவேண்டும்: “மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து, ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது” (9:23). தேவன் திரும்பி வந்தார்! “ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள்” (9:24).
தங்களது கூடாரத்தில் அமர்ந்துகொண்டு ஒரு தம்பதியினர், அப்பொழுதுதான் அவர்கள் கண்ணால் கண்டதைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதைக் கற்பனை செய்துபாருங்கள்: “இதைப்போன்ற ஒன்றை நான் ஒருபோதும் கண்டதில்லை. ஒரு பலி மிருகத்தின் இரத்தம் சிந்துதல், தேவ பிரசன்னத்தைத் திரும்பக் கொண்டுவரும் என்று யார்தான் கற்பனை செய்திருப்பார்கள்?” என்று அவர் சொல்கிறார்.
அவள், “ஆம், இது வியக்கத்தக்கது. ஆனால், அத்தனை மாதங்கள் மனம் வருந்தியும், அத்தனை மாதங்கள் கீழ்ப்படிந்தும், மோசேயும்கூட நமக்காகத் தன் ஜீவனை ஒப்புக்கொடுக்க முன்வந்தும், அவையெதுவுமே எந்தவொரு மாற்றத்தையும் செய்யாதபோது, இந்தப் பலி எப்படி அதைச் செய்தது என்பது எனக்குப் புரியவில்லை. இரத்தம் சிந்துதலுடன் சம்பந்தப்பட்ட ஒரு பலி என்பதில் வல்லமையான ஏதோவொன்று நிச்சயம் இருக்க வேண்டும்,” என்று சொல்கிறாள்.
வேதாகம வரலாற்றில், இந்த ஆரம்ப நிலையிலேயே, இயேசுவின் வருகைக்காகத் தேவன் ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தார். தேவகுமாரன் உலகத்திற்குள் வர வேண்டியிருந்தது ஏன் என்பதை நாம் புரிந்துகொள்ளும்பொருட்டு, நம் சிந்தனையை வடிவமைப்பதே பழைய ஏற்பாட்டின் பலிகளின் முழு நோக்கம் ஆகும். பழைய ஏற்பாட்டின் பலிகளில் எதிர்பார்க்கப்பட மட்டுமே முடிந்ததை, இயேசு, சிலுவை மீது தம் மரணத்தினால் நிறைவேற்றி முடித்தார். கிறிஸ்து, நம் பாவங்களுக்காகப் பரிகாரம் ஆனார். அவரை விசுவாசிப்போர் யாவருக்கும் அவர் தேவனுடைய பிரசன்னத்தையும், ஆசீர்வாதத்தையும் திரும்பக் கொண்டுவருகிறார்.
நீங்கள் போதுமான அளவுக்கு உங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தினால், நீங்கள் தேவனுடன் சீர்பொருந்திவிடலாம் என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். அல்லது, ஆலயத்துக்கு முறையாகச் செல்வதன் மூலமும், ஜெபிப்பதன் மூலமும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தால், உங்கள் பாவங்களை நீங்கள் பரிகரித்துவிட முடியும் என்றுகூட நீங்கள் நினைக்கலாம். இவையெல்லாம் நல்லவைதான். ஆனால், அவை போதுமானவை அல்ல. இயேசுவின் பலியும் அவரது இரத்தம் சிந்தப்படுதலும் மட்டும்தான் தேவனிடத்தில் நமக்காகப் பாவநிவிர்த்தி செய்கின்றவை. “நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்” (1 யோவான் 2:2).
குறிப்புகள்:
1 ஏறக்குறைய இருபது இலட்சம் ஜனங்கள் பாளயத்தில் இருந்தார்கள் என்று சொல்லப்பட்டிருப்பதால், 19,97,000 பேர் மோசேயின் அழைப்புக்குப் பிரதியுத்தரம் அளித்து, அவனது சார்பில் நிற்பதைத் தெரிந்துகொண்டதாக, நாம் யூகித்துக்கொள்ளலாம். 3,000 மக்கள் இந்த அழைப்பை மறுத்தார்கள். அந்த நாள்தான் அவர்களது ஜீவியத்தின் இறுதி நாளாக இருந்தது என்பதால் நாம் இதை அறியவருகிறோம் (யாத்திராகமம் 32:28).
2 அனைத்துப் பணிகளும் செய்து முடிக்கப்பட்டபோது, எல்லாப் பொருட்களும் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டு, இரண்டாம் வருஷம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் ஸ்தாபனம்பண்ணப்பட்டது (யாத்திராகமம் 40:17). அவர்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள் (யாத்திராகமம் 19:1). ஆகவே, இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. அத்துடன், ஆறு வாரங்களடங்கிய இரண்டு காலப்பகுதிகளுக்கு மோசே அவர்களிடமிருந்து புறம்பே போயிருந்தான் என்றும் நாம் அறிகிறோம். எனவே, பயணக் காலமும், மோசே அவர்களுடன் இல்லாத நாட்களும் சேர்ந்து மொத்தம் ஐந்து மாதங்கள் ஆகின்றன. இரண்டாம் வருஷத்தின் தொடக்கத்தில் வாசஸ்தலம் ஸ்தாபனம்பண்ணப்பட்டது. ஆகையால், அதற்கான வேலைகளில், வருஷத்தின் மீதமுள்ள ஏழு மாதங்களை அவர்கள் கழித்திருக்க வேண்டும்.
கேள்விகள்
1. தேவன், தமது சத்தம் தொனிக்க, அவரது பத்துக் கற்பனைகளை உங்களிடம் பேசுவதை, நீங்கள் கேட்க முடிவதே அவற்றைக் கைக்கொள்வதற்கு உங்களுக்குப் போதுமான அளவுக்கு உதவும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஏன் அல்லது ஏன் இல்லை?
2. மக்களை மன்னிப்பது தேவனின் கடமையா? ஏன் அல்லது ஏன் இல்லை?
3. ஒரு நபர் பாவம் செய்துவிடுகிறபோது, போதுமான அளவு மனம் வருந்துவதோ, போதுமான அளவு கீழ்ப்படிந்திருப்தோ தேவ பிரசன்னத்தை ஏன் கொண்டுவராது? எது கொண்டுவரும்?
4. “பாவநிவிர்த்தி” என்பது என்ன?
5. பழைய ஏற்பாட்டில் காணக்கூடிய மிருகங்களின் பலிக்கும், இயேசுவின் சிலுவைப் பலிக்கும் என்ன வித்தியாசம்?