ஆசாரியன்
லேவியராகமம் 16: 1-22
பாடம் 9 – ஆசாரியன்
Download PDF
வேதவசனம்
பாடம்
கேள்விகள்
வேதவசனம்
லேவியராகமம் 16: 1-22
1. ஆரோனின் இரண்டு குமாரர் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரித்துப்போனபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:
2. கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.
3. ஆரோன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்திப் பிரவேசிக்கவேண்டும்.
4. அவன் பரிசுத்தமான சணல்நூல் சட்டையைத் தரித்து, தன் அரைக்குச் சணல்நூல் ஜல்லடத்தைப்போட்டு, சணல்நூல் இடைக்கச்சையைக் கட்டி, சணல்நூல் பாகையைத் தரித்துக்கொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த வஸ்திரங்கள்; அவன் ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அவைகளைத் தரித்துக்கொண்டு,
5. இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், சர்வாங்க தகனபலியாக ஒரு ஆட்டுக்கடாவையும் வாங்கக்கடவன்.
6. பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரப்பண்ணி,
7. அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,
8. அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,
9. கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி,
10. போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்தரத்திலே போகவிடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;
11. பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்துக்கான காளையைக் கொண்டுவந்து, அதைக் கொன்று,
12. கர்த்தருடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட சுகந்த தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து,
13. தான் சாகாதபடிக்குத் தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்.
14. பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்துக்கு முன்பாக ஏழுதரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன்.
15. பின்பு ஜனத்தினுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து,
16. இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.
17. பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது.
18. பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி,
19. தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுதரம் அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் புத்திரரின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தக்கடவன்.
20. அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து தீர்த்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரப்பண்ணி,
21. அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்.
22. அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போகவிடக்கடவன்.
பாடம்
தேவனின் ஜனங்கள், தங்களை நேசிக்கிற தேவன் பரிசுத்தராயிருக்கிறார் என்று கண்டுகொண்டார்கள். பாவிகளாக இருக்கும் நமக்கு, அவரது அருகில் நெருங்கிச் சென்று, பிழைத்திருப்பது இயலாததொன்று. ஒரு பாவநிவிர்த்தி செய்யப்படவேண்டும். அது தவறான ஒன்றைச் சரிப்படுத்தக்கூடியதொன்றாக இருக்கவேண்டும். பாவத்துக்கான பரிகாரமானது, ஒரு பலியின் மூலமாக, ஒரு பதிலாள் மூலமாக, ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு ஜீவனின் மூலமாக நிறைவேற்றப்படுகின்றது. பாவநிவிர்த்தி எப்படி நிறைவேற்றப்பட்டது, அது எவ்வாறு நமக்குப் பொருந்தும் என்பதை இந்தப் பாடத்தில் பார்க்கப்போகிறோம்.
சட்டத்தின் நீதிமன்றம் ஒன்றில் நீங்கள் என்றாவது நிற்கவேண்டியிருந்தால், அநேகமாக, உங்கள் வழக்கை எடுத்துரைக்க ஒரு வழக்கறிஞரை நியமிக்க நீங்கள் விரும்புவீர்கள். சட்ட வழக்குமன்றங்கள் அச்சுறுத்தும் இடங்களாகவும், சற்று சிக்கலான விதிமுறைகளின் கீழ் இயங்குபவையாகவும் இருக்கின்றன. ஆகையால், உங்கள் சார்பில் வாதாட ஒரு வழக்கறிஞர் உங்களுக்குத் தேவை.
பழைய ஏற்பாட்டில், இதற்கொப்பான ஒன்றைத்தான் ஆசாரியர்கள் செய்தார்கள். அவர்கள் ஜனங்களின் பிரதிநிதிகளாகத் தேவனுக்கு முன்பாக நின்று, அவர்கள் சார்பாகப் பேசினார்கள். ஆசரிப்புக் கூடாரம் என்றழைக்கப்பட்ட, நடமாடும் ஆராதனை மையத்தில் அவர்கள் ஊழியஞ்செய்தார்கள். அது வெவ்வேறான பகுதிகளாகத் திரைச்சீலைகளால் பிரிக்கப்பட்டிருந்தது. அத்துடன், விதவிதமான அர்த்தங்களைக்கொண்ட பொருட்களைக் கொண்டிருந்தது.
ஆசரிப்புக் கூடாரத்தின் மையப்பகுதியில், மக்களின் பார்வையிலிருந்து பெரிய தொங்குதிரைகளால் மறைக்கப்பட்டிருந்த மகா பரிசுத்த ஸ்தலம் இருந்தது. அதனுள், தண்டுகளால் சுமந்துசெல்லப்பட்ட, மரப்பெட்டியாகிய, மேல் மூடியுடன்கூடிய உடன்படிக்கையின் பெட்டி இருந்தது. அதன் மேல் மூடியில், தேவனுடைய நியாயத்தீர்ப்பை அடையாளப்படுத்தும் தேவதூதர்களான, இரண்டு கேரூபீன்களின் தங்க வடிவங்கள் இருந்தன. இவ்விரண்டு வடிவங்களுக்கிடையே, பாவநிவிர்த்தியின் மறைவிடம் அல்லது கிருபாசனம் என்று அறியப்பட்டிருந்த இடம் இருந்தது.
ஐந்து காட்சிகள் அடங்கிய ஒரு நாடகம்
வருஷத்துக்கு ஒருமுறை பாவநிவிர்த்தியின் நாளன்று, பிரதான ஆசாரியன் திரைக்குப் பின்னால், மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பான். சீனாய் மலையின்மேல் தேவன் இறங்கி வந்ததுபோலவே, மகா பரிசுத்த ஸ்தலத்தில் இறங்கி வருவார். அவர் தாமே நேரடியாகக் காணப்படக்கூடியவராக இறங்கி வரவில்லை. ஆனால், கிருபாசனத்தின்மேல், ஒரு மேகத்திலே தோன்றி, பிரதான ஆசாரியனுக்குக் காண்பித்தார் (லேவியராகமம் 16:2).
தேவன் பெரும்பாலும் உவமைகளால் நமக்குப் போதிக்கிறார். அதிலும் பாவநிவிர்த்தி நாளன்று நடந்ததோ, ஐந்து காட்சிகளைக்கொண்ட ஒரு நாடகமாகும். அவை ஒவ்வொன்றும் இயேசு கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டி முன்னறிவித்து, சிலுவையில் அவர் மரித்ததின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள உதவும்.
காட்சி 1: ஆசாரியன் தோன்றுகிறான்
பிரதான ஆசாரியனை நீங்கள் பார்த்திருந்தால், அவன் தேசத்தின் மிக முக்கியமானவர்களுள் ஒருவன் என்று உடனடியாக நீங்கள் அறிந்துகொண்டிருப்பீர்கள். அவனது மகத்துவமான உடைகள், அவனுடைய பதவியின் கௌரவத்தைப் பறைசாற்றின.
ஆனால், பாவநிவிர்த்தியின் நாளிலோ, பிரதான ஆசாரியன் தனது ஆடைகளைக் களைந்து, மிகவும் அடிமட்டத்திலுள்ள வேலைக்காரன் அணிவதுபோன்ற, சாதாரண வெள்ளைத் துணியை அணிந்துகொண்டு, வீதிகளில் தோன்றினான். ஒரு குத்துச்சண்டை வீரன் போட்டிக்கள வளையத்தில் இறங்குவதைப்போல, பிரதான ஆசாரியன், ஆசரிப்புக் கூடாரத்தை நோக்கி ஒரு சாதாரண அடிமையைப்போல் ஆடையணிந்தவனாய் நடக்கும்போது, அந்த அதிசயக் காட்சியைக் காண, வழியெங்கிலும் மக்கள் வரிசையில் நின்றிருப்பார்கள்.
காட்சி 2: ஆசாரியன் ஆயத்தப்படுகிறான்
மக்களின் பாவங்களுக்காக ஒரு பலியை ஒப்புக்கொடுக்கப் பிரதான ஆசாரியன் தேவ சமூகத்தில் பிரவேசிக்கும் முன்பு, தன் சொந்தப் பாவங்களைக் கையாளவேண்டியது அவனது முதல் முக்கியக் கடமையாக இருந்தது. அவன் அடிக்கப்பட்ட ஒரு காளையின் இரத்தத்தை எடுத்து, மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் கொண்டுசென்று, கிருபாசனத்தின் மீது அதைத் தெளித்தான்.
இது ஜனங்களிடத்தில் வல்லமையானதொரு தாக்கத்தை உருவாக்கியிருக்க வேண்டும். தேசத்தில் மிகக் கண்ணியமான பதவிகளில் ஒன்றை வகிக்கும் பிரதான ஆசாரியன், “எனக்கே ஒரு பலி தேவைப்படுகிற நிலையில் நான் நிற்கிறேன்,” என்று தெரிவிக்கிறான். மற்ற எந்த ஒரு ஆசாரியனும், போதகனும் அல்லது மதத் தலைவனும் எப்பொழுதும் ஒப்புக்கொள்ள வேண்டியிருப்பதைப்போலப் பிரதான ஆசாரியனும், “என் சொந்தப் பாவங்கள் என்மேலிருக்கின்றன, ஆகவே, உங்கள் பாவங்களைக் கையாளுகிற நிலையில் நானில்லை,” என்று ஒப்புக்கொள்கிறான்.
காட்சி 3: பாவநிவிர்த்தி செய்யப்படுகிறது
பின்பு, இரு வெள்ளாடுகள் கொண்டுவரப்பட்டன. ஒன்று அடிக்கப்பட்டது. அதன் இரத்தத்தைப் பிரதான ஆசாரியன் எடுத்துத் திரைக்குப் பின்பாகச் சென்று, தேவனின் நியாயத்தீர்ப்பை அடையாளப்படுத்திய, இரு கேரூபீன்களின் தங்க வடிவங்களுக்கு மத்தியில் இருந்த கிருபாசனத்தின்மேல் தெளித்தான். பலி செலுத்தப்பட்டபோது, நீதியானது திருப்திப்படுத்தப்பட்டது, மற்றும் இரக்கம் வழங்கப்பட்டது.
தோட்டத்தில் தேவன், ஆதாமிடமிருந்து சாபத்தைத் திசைதிருப்பி, அதைப் பூமியின்மேல் விழப்பண்ணியதுபோலவே, இப்பொழுதும், மரணதண்டனைத் தீர்ப்பைப் பாவியின் மீது கூறப்படவேண்டியதற்குப் பதிலாக, ஒரு பலிமிருகத்தின் மீது செலுத்தும்படி அவர் அனுமதித்தார்.
காட்சி 4: பாவம் அறிக்கையிடப்படுகிறது
அதற்கடுத்து நிகழ்ந்ததுதான், பாவநிவிர்த்தி நாளின் வியத்தகு பகுதியாகும். இரண்டாம் வெள்ளாடு கொண்டுவரப்படுகிறது. தேவன், “உயிரோடிருக்கிற அதின் தலையின்மேல் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும்” அறிக்கையிடும்படி, பிரதான ஆசாரியனுக்கு அறிவுறுத்தினார். (16:21).
இன்று ஆலயங்களில், ஒரு குழந்தையின் பிரதிஷ்டை அல்லது ஞானஸ்நான ஆராதனை நடக்கும்போது, போதகர் அல்லது ஆசாரியர் ஜெபிக்கிற வேளையில், அக்குழந்தையைக் கரங்களில் ஏந்தியிருப்பார். அப்பொழுது அந்தக் குழந்தைக்கு தனது பெற்றோரை விட்டுப் பிரிந்து, தெரியாத ஒரு நபரின் கைகளில் இருப்பது, ஆதங்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் எல்லாரும் அறிந்திருப்போம்.
நெளிந்து, திமிறும் ஒரு குழந்தை, எப்பாடுபட்டாவது தம் கரத்தின் பிடியிலிருந்து நழுவித் தப்பிக்க முயற்சிக்கும்போது, ஒரு நல்ல, ஏற்புடைய ஜெபத்தை ஏறெடுக்கப் பெரும்பாலான போதகர்கள் சிரமப்பட்டதுண்டு. ஆனால், இங்கே பிரதான ஆசாரியன் செய்யவேண்டியிருந்த காரியத்துடன் ஒப்பிடுகையில், இந்தப் பிரச்னைகளெல்லாம் ஒன்றுமேயில்லை. அவன், ஒருபுறம் உயிருள்ள வெள்ளாட்டைக் கையில் பிடித்துக்கொண்டு, மற்றொருபுறம் இஸ்ரவேலின் அனைத்துப் பாவங்களையும் அறிக்கைபண்ணவேண்டியதாய் இருந்தது.
பிரதான ஆசாரியன், தனது ஜெபத்தில் எல்லாப் பாவங்களையும் குறிப்பிட்டு அறிக்கையிட்டான். ஒருவேளை நீங்கள் அந்தக் கூட்டத்தில் இருந்திருந்தால், இதற்கொப்பான ஒரு ஜெபத்தைக் கேட்டிருக்கக்கூடும்: “சர்வ வல்ல தேவனே, எங்கள் விக்கிரகாராதனையை நாங்கள் அறிக்கையிடுகிறோம். உம்மிடத்தில் அன்புகூருவதைவிடவும், உமது ஆசீர்வாதங்களின் மீது அதிகமாக அன்புகூர்ந்திருக்கிறோம். எங்கள் பொறாமையை நாங்கள் அறிக்கையிடுகிறோம். நீர் பிறருக்குக் கொடுத்திருக்கிறவற்றைப் பார்த்து, அதை எங்களுக்கென்று இச்சித்திருக்கிறோம். நாங்கள் எங்களது கோபத்தையும் அறிக்கையிடுகிறோம். நாங்கள் பிறரிடம் சீற்றமும், வெறுப்புமாக நடந்துகொண்டிருக்கிறோம்…”.
ஜனங்களின் பாவங்கள் அனைத்தையும் பிரதான ஆசாரியன் அறிக்கைபண்ணவேண்டியிருந்ததால், இது ஒரு மிக நீண்ட ஜெபமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவன் அறிக்கை செய்த பாவங்களை, மக்கள் தங்களுடைய சொந்தப் பாவங்களாக உணர்ந்துகொள்ளும்படியான விதத்தில் அவன் ஜெபித்தான். நீங்கள் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்திருந்தால் ஜெபத்தின் போக்கில், ‘ஆம், அந்தப் பாவம் என்னுடையவைகளில் ஒன்று,’ என்று நினைத்திருப்பீர்கள்.
பிரதான ஆசாரியன் வெள்ளாட்டின் தலையின்மேல் தன் கைகளை வைத்து, ஜனங்களின் பாவங்களை அறிக்கைபண்ணியபோது, தேவன் இந்தப் பாவங்களின் குற்றப்பழிகளையெல்லாம் அந்த ஆட்டின்மேல் செல்லச்செய்தார்: “அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி…” (16:21). ஆகவே, இப்பொழுது மக்களுடைய அனைத்துக் குற்றத்தையும் சுமந்த வெள்ளாடு ஒன்று இருக்கிறது!
காட்சி 5: குற்றப்பழி நீக்கப்படுகிறது
அதையடுத்து நிகழ்வது, நம்முடைய பாவங்களை அறிக்கை செய்யும்போது, தேவன் எப்படி மன்னிக்கிறார் என்பதையும், நம்முடைய குற்றப்பழி எப்படி நீக்கப்படுகிறது என்பதையும் பற்றிய அற்புதமான சித்திரிப்பாகும். அந்த வெள்ளாட்டை “வனாந்தரத்துக்கு” அனுப்பிவிடும்படிப் பிரதான ஆசாரியனிடம் தேவன் கூறினார் (16:21).
வெள்ளாடு, கூடாரங்களுக்கிடையேயும், அதன் பின்பு பாளயத்துக்குப் புறம்பே வனாந்தரத்துக்குள்ளும், ஓட்டிவிடப்படுகிறதான அந்தக் காட்சியைக் கற்பனை செய்துபாருங்கள். தொடுவான விளிம்பில், அந்த நபரும், அந்த வெள்ளாடும் ஒரு புள்ளியாக மட்டும் தெரியும் வரை நீங்கள் பார்க்கிறீர்கள், அதற்கப்பால், அவர்களை உங்களால் பார்க்க முடியவில்லை.
இதைவிட வல்லமையான ஒரு சுவிசேஷக் காட்சி விளக்கத்தை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. இந்த ஐந்து-காட்சி நாடகம், இயேசு கிறிஸ்து உலகிற்குள் வரும்போது தேவன் என்ன செய்வார் என்பதை நமக்குக் காண்பிக்கும் ஒரு முற்காட்சிபோல் இருந்தது.
முற்காட்சி முதல் முக்கிய நிகழ்வு வரை
வரலாற்றின் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகள் முன்னோக்கிச் சென்றால், நமது பாவங்களைப் பரிகரிக்க வந்த பிரதான ஆசாரியரின் பாத்திரத்தில் இயேசு கிறிஸ்து தோன்றுகின்ற முக்கிய நிகழ்வைக் காண்பீர்கள். பழைய ஏற்பாடு, இது எப்படி நிகழும் என்று நமக்குச் சொல்கிறது; புதிய ஏற்பாடு, இது எப்படி நிகழ்த்தப்பட்டது என்று நமக்குச் சொல்கிறது.
காட்சி 1: கிறிஸ்து தோன்றுகிறார்
இயேசு கிறிஸ்துவே நமது பிரதான ஆசாரியர்! அவரே தேவனுடைய குமாரன், அவரது மகிமை, எந்த ஆசாரியனாலும் அணியப்படும் ஆடம்பரமான வஸ்திரங்களைவிடவும் மிகமிகச் சிறப்புவாய்ந்தது. அவர் உலகத் தோற்றத்துக்கு முன்பதாகவே பிதாவின் மகிமைக்குப் பங்குள்ளவராயிருந்தார். ஆனால் பிரதான ஆசாரியன், பாவநிவிர்த்தி நாளன்று தனது மகிமையான வஸ்திரங்களைக் களைந்துபோட்டதுபோலவே, கிறிஸ்துவும் தமது மகிமையைத் துறந்துவிட்டு, ஓர் அடிமையின் ரூபமெடுத்தார். அவர் கந்தைத் துணிகளில் சுற்றப்பட்டு, முன்னணையிலே கிடத்தப்பட்டார்.
காட்சி 2: கிறிஸ்து ஆயத்தப்படுகிறார்
இவ்வுலகில் எந்தவொரு காலத்திலும், யாரொருவர் வாழ்ந்த வாழ்வைவிடவும், இயேசு கிறிஸ்து மிகவும் வேறுபட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார். இயேசு, பிதாவின் சித்தத்தைச் செய்ததுடன், செய்யும்படிப் பிதா அவருக்குக் கொடுத்ததான அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றினார். “அவர் பாவஞ்செய்யவில்லை” (1 பேதுரு 2:22). ஆகையால், அவர் தமக்காகவே பலி செலுத்தத் தேவைப்படவில்லை. பரிபு+ரணமான ஒரு வாழ்வை வாழ்ந்ததால், மற்ற அனைத்து ஆசாரியர்களும் சித்திரிக்க மட்டுமே செய்த செயலைச் செயல்படுத்த, இயேசு தகுதியுள்ளவராயிருந்தார்.
காட்சி 3: கிறிஸ்து பாவநிவிர்த்தி செய்கிறார்
தமது மூன்றாண்டுகால வெளிப்படையான ஊழியத்தின் பின்னர், இயேசு கைது செய்யப்பட்டுச் சிலுவையிலறையப்படும்படித் தீர்ப்பிடப்பட்டார். சிலுவையிலே, அவர் நமது பாவங்களுக்காகப் பலியானார். அவரது இரத்தம் சிந்தப்பட்டபோது, தேவனின் நீதி திருப்தி செய்யப்பட்டது, அதனால் தேவ இரக்கம் வழங்கப்பட்டது. நமது மகா பிரதான ஆசாரியர், நமக்காகப் பாவநிவிர்த்தி செய்து, தேவ சமூகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்ல, புதியதும், ஜீவனுள்ளதுமான ஒரு வழியைத் திறந்தார்.
காட்சி 4: நாம் நமது பாவங்களை அறிக்கையிடுகிறோம்
பாவநிவிர்த்தி நாளன்று, அங்கே இரண்டு வெள்ளாடுகள் இருந்தன. ஒன்று பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மற்றொன்று, வனாந்தரத்துக்குள் போக்காடாகப் போகவிடப்பட்டது. இவ்விரு மிருகங்களுமே, கிறிஸ்து தமது ஜனங்களுக்காக என்ன செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. அவர்தாமே நமது பாவங்களுக்கான பரிகாரப்பலியாகத் தமது ஜீவனை ஒப்புக்கொடுத்தவரும், அவர்தாமே நமது குற்றப்பழியை நீக்கிப்போடுகிறவருமாக இருக்கிறார்.
இங்குதான், நாடகத்தில் பங்குபெற உங்களுக்கொரு வாய்ப்பு இருக்கிறது. பிரதான ஆசாரியன் இரு கரங்களையும் உயிரோடிருக்கிற வெள்ளாட்டின் மீது வைத்து, ஜனங்களின் பாவங்களையெல்லாம் அறிக்கைபண்ணியதுபோலவே, நீங்கள் விசுவாசத்தினால் இயேசு கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டு, உங்கள் பாவங்களை அவரிடத்தில் அறிக்கைபண்ணும்படியாகத் தேவன் உங்களை அழைக்கிறார். நீங்கள் அதைச் செய்யும்போது, உங்கள் குற்றப்பழி நீக்கப்பட்டுப்போகும்.
காட்சி 5: நம் பாவங்கள் நீக்கப்படுகின்றன
உங்கள் பாவங்கள் கிறிஸ்துவின் மீது வைக்கப்படுகின்றபோது, “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ” (சங்கீதம் 103:12), அவ்வளவு தூரத்திற்கு, உங்களிடமிருந்து தாம் அவற்றை விலக்கிவிடுவதாகத் தேவன் வாக்குப்பண்ணுகிறார்.
சஞ்சலப்பட்ட மனச்சாட்சியுடன் போராடிக்கொண்டிருக்கும் ஒரு நபரைக் கற்பனை செய்யுங்கள். நாம் அவளை, சாரா என்று அழைத்துக்கொள்வோம். அவள் மதியீனமான ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டுத் தேவன் தன்னை என்றாவது மன்னிக்க முடியுமா என்று குழம்பிக்கொண்டிருக்கிறாள்.
சாரா, கூட்டத்தில் நின்றுகொண்டு, அந்தப் பாவநிவிர்த்தி நாளின் நாடகத்தைக் கவனித்துக்கொண்டிருக்கிறாள். ஆனால், அவளது தோழி ஒருத்தி அவளிடம் பேச வரும் அந்நேரம், அவள் தன் மனச்சாட்சியில் போராடிக்கொண்டிருக்கிறாள்.
“சாரா, தற்போது நீ பார்த்ததைப் பற்றிச் சிந்தித்துப் பார். அந்த வெள்ளாட்டின் தலையைப் பிரதான ஆசாரியன் பற்றியிருந்தபோது நடந்தது என்ன?”
“அவர் நம் பாவங்களை அறிக்கையிட்டார்.”
“அப்போது அவர் உன் பாவத்தை அறிக்கையிட்டாரா, சாரா?”
“ஆம், அறிக்கைபண்ணினார், எனக்கு மிகவும் குற்றவுணர்வாயிருந்தது.”
“அவர் அறிக்கைபண்ணிய பாவங்களுக்கு என்ன நேர்ந்தது, சாரா?”
“அவை அந்த வெள்ளாட்டின் தலைமேல் வைக்கப்பட்டன.”
சாராவின் தோழி, “பின்பு அந்த ஆட்டுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்கிறாள்.
“அது அகற்றப்பட்டுவிட்டது.”
“எவ்வளவு தூரத்துக்கு அது அகற்றப்பட்டது, சாரா?”
“என் கண்களால் காண இயலாத தூரத்திற்கு.”
அந்தக் காட்சியை எடுத்து உங்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பாருங்கள். இனி ஒருபோதும் உங்களால் காணப்பட முடியாததும், இனி ஒருபோதும் திரும்பிவரவே முடியாததுமான அளவு, வெகுதூரத்துக்கு உங்களிடமிருந்து உங்கள் பாவம் அகற்றப்படுவதை, உங்கள் மனக்கண் முன்பாகக் கொண்டுவர முடிகிறதா? கிறிஸ்து நிறைவேற்றி முடித்த கிரியையின் மூலமாக, உங்கள் பாவம் மன்னிக்கப்பட்டதுடன், உங்கள் குற்றப்பழியும் உங்களைவிட்டு நீக்கப்பட முடியும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டுமென்று, தேவன் விரும்புகிறார்.
பாவநிவிர்த்தியின் நாளானது, இயேசு நம் பாவங்களை எப்படிக் கையாண்டார் என்பதைச் சித்திரிக்கின்றது. அவரது இரத்தம் சிந்தப்பட்டபோது, அவரது அளவற்ற இரக்கம் வழங்கப்பட்டது. பாவநிவிர்த்தியானது, நீங்கள் விசுவாசத்தினால் கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டு, அவரில் நம்பிக்கை வைத்து, உங்கள் பாவங்களை அவரிடம் அறிக்கைபண்ணும்போது, உங்கள் பாவங்களின்மேல் செலுத்தப்படுகிறது. நீங்கள் விசுவாசத்தினால் கிறிஸ்துவைப் பற்றிக்கொள்ளும்போது, உங்கள் பாவத்தின் குற்றப்பழியைக் கிறிஸ்துவினிடமாய்த் தேவன் திருப்பிவிடுவார். அப்படித் தேவன் உங்கள் குற்றத்தை இடமாற்றம் செய்யும்போது, மெய்யாகவே மன்னிக்கப்பட்ட ஒருவரின் சந்தோஷத்துடனும், விடுதலையுடனும் நீங்கள் தேவனை நோக்கிப் பார்க்கத்தக்கதாக, அவர் உங்கள் குற்றத்தை உங்களிடமிருந்து அகற்றிவிடுகிறார்.
ஜெபிப்போம்
கிருபை நிறைந்த பிதாவே, என்னுடைய பிரதான ஆசாரியராக இருக்கும்படியாக, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்குள் வந்திருக்கிறபடியால், உமக்கு ஸ்தோத்திரம். அவர் தமது மகிமையை விட்டுவிட்டு, ஒரு முன்னணையில் வந்து பிறப்பதற்கு விருப்பமாயிருந்தபடியால், உமக்கு ஸ்தோத்திரம். அவர் பாவநிவிர்த்தி செய்யத்தக்கதாக, அவரைத் தகுதிப்படுத்திய அவரது பரிபூரண வாழ்வுக்காக, உமக்கு ஸ்தோத்திரம். அவர் தமது ஜீவனை ஒப்புக்கொடுத்துத் தமது இரத்தத்தைச் சிந்தியதன் மூலம் இதைச் செய்தபடியால், உமக்கு ஸ்தோத்திரம். என் பாவங்களை நான் உம்மிடம் அறிக்கையிடுகிறேன். ஆண்டவரிடம் உங்கள் பாவங்களை அறிக்கை செய்ய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். கிறிஸ்து என் பாவங்களுக்காக மரித்தபடியால் உமக்கு ஸ்தோத்திரம். நீர் அவற்றையெல்லாம், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாக என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக, என்னைவிட்டு அகற்றிவிட்டீர் என்று அறியும் சமாதானத்தை அனுபவிக்க, இப்பொழுது எனக்கு ஒத்தாசை செய்யும். ஆமென்.
கேள்விகள்
1. பழைய ஏற்பாட்டில் ஆசாரியர்களின் பங்கு என்ன?
2. பாவநிவிர்த்தியின் நாள் எதைச் சுட்டிக்காட்டியது? நாம் எதைப் புரிந்துகொள்வதற்கு அது நமக்கு உதவுகிறது?
3. ஏன் எந்த ஆசாரியனும், போதகனும் அல்லது மதத்தலைவனும் உங்கள் பாவங்களைக் கையாள்கிற நிலையில் இல்லை?
4. பாவநிவிர்த்தியின் நாளில் குற்றப்பழி எவ்வாறு இடம் மாற்றப்பட்டு, அகற்றப்பட்டது?
5. இந்த நாடகத்தில் நாம் பங்குபெறவேண்டிய இடம் எது?