சிங்காசனம்
1 சாமுவேல் 8:1-22
பாடம் 13 – சிங்காசனம்
Download PDF
வேதவசனம்
பாடம்
கேள்விகள்
வேதவசனம்
2 சாமுவேல் 7:1-16
1. கர்த்தர் ராஜாவைச் சுற்றிலும் இருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது, அவன் தன் வீட்டிலே வாசமாயிருக்கையில்,
2. ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்.
3. அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான்.
4. அன்று ராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
5. நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் வாசமாயிருக்கத்தக்க ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ?
6. நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும், நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், கூடாரத்திலும் வாசஸ்தலத்திலும் உலாவினேன்.
7. நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரத்தையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுருமரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் புத்திரருக்குள் உலாவி வந்த எவ்விடத்திலாவது யாதொரு வார்த்தையைச் சொன்னதுண்டோ?
8. இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,
9. நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.
10. நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்வரையில் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கும்படி அவர்களை நாட்டினேன்.
11. உன்னுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் உன்னை நீங்கலாக்கி, இளைப்பாறவும் பண்ணினேன்; இப்போதும் கர்த்தர் உனக்கு வீட்டை உண்டுபண்ணுவார் என்பதைக் கர்த்தர் உனக்கு அறிவிக்கிறார்.
12. உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.
13. அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.
14. நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.
15. உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.
16. உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்கிறார் என்று சொல்லச்சொன்னார்.
பாடம்
இஸ்ரவேலின் முதல் ராஜாவான சவுல், பெரிய காரியங்களைச் சாதித்தான். ஆனால், அவன் தேவனுக்குப் பிரியமாக நடக்கவில்லை. அவன் சாதித்தது நீடித்து நிலைக்கவில்லை. தேவன், அவனுக்குப் பதிலாக, யாரும் அறிந்திராத மேய்ப்பனான, தாவீதை எழும்பப்பண்ணினார். தாவீது, கோலியாத்தை முறியடித்தபோது, அவன் யாரென்பதை அனைவரும் அறிந்தார்கள். தாவீதின்மேல் பொறாமைகொண்ட சவுல், எதிர்காலத்தை அழிக்க முயற்சிப்பதிலேயே தனது வாழ்வின் கடைசிக் காலங்களைக் கழித்தான். ஆனால், தேவனின் கரம் தாவீதின்மேல் இருந்தது. சவுல் மரித்தபோது, தேவனுடைய இருதயத்துக்குப் பிரியமான ஒரு ராஜாவுக்கு முடிசூட்டுவதற்கான வழி திறந்தது.
புதிய ராஜாவுக்கு, உடனடியாகவே எதிர்ப்புக் கிளம்பியது. சவுலின் விசுவாசிகள் சிலர், மண்ணின் மீதான தங்களது உரிமையைக் காக்கப் போராடினர். ஆனால், அடுத்த இரண்டு வருடங்களில், தாவீதின் குடும்பம் பலப்பட்டது, சவுலின் குடும்பமோ பலவீனப்பட்டுப்போனது (2 சாமுவேல் 3:1). அனைவருமே கடைசியில் தாவீதை ராஜாவாக ஏற்றுக்கொண்டனர் (5:1-5).
தாவீதின் தலைமையின்கீழ், தேவஜனங்கள் எருசலேமைக் கைப்பற்றினார்கள். பட்டணம் கைவசமானபோது, தாவீது அங்கே தனது அரண்மனையைக் கட்டித் தன் அரசாங்கத்தின் மையத்தை ஸ்தாபித்தான். பின்பு தாவீது, தேவன் தமது ஜனங்களைச் சந்தித்த இடமாகிய உடன்படிக்கையின் பெட்டியை, எருசலேமுக்குக் கொண்டுவந்தான். தேசத்தினுடைய வாழ்வின் மையத்தில் தேவ பிரசன்னம இருந்தது.
தேசம் ஒன்றுபட்டிருந்தது, தேவஜனங்கள் செழித்திருந்தார்கள். அங்கே சமாதானம் இருந்தது. தாவீது, தான் கற்பனை செய்ததைவிடவும் அதிக அளவில் ஜெயமுள்ளவனாகி வந்தான். அதனால் அவன், தன் சார்பில் ஏதோவொன்றைத் திரும்பச் செலுத்துவதற்கான நேரம் அது என்று உணர்ந்தான். தாவீது, உத்தம இருதயமும், சிறந்த எண்ணங்களும் கொண்டிருந்த, தேவனுக்கடுத்ததொரு மனிதனாயிருந்தான்.
தேவனைக் கனம்பண்ண, ஒரு ராஜாவின் திட்டம்
தேவனுடைய பெட்டி ஒரு கூடாரத்தில் இருந்தபோது, தான்மட்டும் ஓர் ஆடம்பரமான அரண்மனையில் வசிப்பது சரியானதென்று, தாவீது உணரவில்லை. அவன், தேவனுக்கு ஓர் ஆலயத்தைக் கட்டும் எண்ணங்கொண்டிருந்தான். ஆகவே, தன் சிநேகிதனான நாத்தானை அழைத்து அதைத் தெரிவிக்க அவன், “நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே” என்றான் (7:3). ஆனால் அன்றிரவு தேவன் நாத்தானிடம், தாவீது தேவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுவதைவிடவும், தேவனே தாவீதுக்கென்று ஒரு வீட்டைக் கட்டுகிறவராக இருப்பார் என்று வெளிப்படுத்தினார்.
நீங்கள் தேவனுக்கென்று ஏதாவதொரு நற்கிரியையைச் செய்ய வாஞ்சிக்கும்போது, தேவன் அந்த வாசலை அடைக்கிறதொரு சூழ்நிலையில் நீங்கள் எப்போதாவது இருந்ததுண்டா? நீங்கள் சில முயற்சிகளை முன்னெடுத்தீர்கள். ஆனால், அது பலனளிக்காமல் இருந்தது உண்டா? அல்லது, உங்களிடம் சிறந்த திட்டம் இருந்து, வேறு யாரோ அதை மேற்கொண்டிருந்தார்களா? தேவன் ஒரு வாசலை அடைக்கும்போது, நீங்கள் தாழ்மையின் உச்சக்கட்டச் சோதனையை எதிர்கொள்வீர்கள்.
தாழ்மைபற்றி சி. எஸ். லூயிஸ், “[ஒரு நபர்], உலகின் மிகச்சிறந்த தேவாலயத்தை வடிவமைத்து, அது மிகச்சிறந்ததென்று அறிந்தும், அதில் மகிழ்வதைக்காட்டிலும், வேறொருவர் அதைச் செய்திருந்தால், அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அல்லது வேறு விதமாகவோ அதில் மகிழ்ச்சியடையும் ஒரு மனநிலை,”1 என்று விளக்கமளித்துள்ளார். உண்மையான தாழ்மை என்பது, எல்லாக் காலங்களிலும் தேவனுடைய பெயரை மகிமைப்படுத்துவதும், நமது பெயரைச் சிறுமைப்படுத்துவதும் ஆகும்.
தாவீது, தாழ்மையைக் கற்றுக்கொண்டான், அது அவனுக்குக் கீர்த்தியாயிற்று. தேவன் தாவீதிடம், அவன் தேவாலயத்தைக் கட்டப்போவதில்லை என்று கூறியபின்பு, அதைக்குறித்து அவன் ஆர்வமிழந்துவிட்டிருந்தாலும்கூட, ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் தாவீதின் தாழ்மையானது, திட்ட மாதிரிகளை வரைந்து, பொருட்களைச் சேகரித்துவைத்து, அதன்பின் அந்த ஆலயக்கட்டுமானப் பணியைத் தன் குமாரனிடம் ஒப்படைத்தது மூலம் வெளிப்படுத்தப்படுகிறது (1 நாளாகமம் 28:11-20).
ஏமாற்றமும், வாக்குத்தத்தத்தின் வாசலும்
அடைபட்ட வாசலைக் குறித்த ஏமாற்றத்தைத் தாவீது எதிர்கொண்டபோது, தேவன் அவனுக்கு ஓர் அற்புதமான வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார்: “கர்த்தர் உனக்கு வீட்டை உண்டுபண்ணுவார்” (2 சாமுவேல் 7:11). பின்பு தேவன், தாம் செங்கல்லையும், சுண்ணாம்புச்சாந்துக் கலவையையும் பற்றிப் பேசவில்லை என்பதை விளக்கினார். அவர், தாவீதின் சந்ததியில் ஒருவரைப் பற்றிய வாக்குத்தத்தத்தைச் செய்தருளினார்: “உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது”–அதாவது, நீ மரிக்கும்போது–”நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்” (7:12).
தேவன், தாவீதின் ஒரு சந்ததியைத் தாம் எழும்பப்பண்ணுவதாக வாக்குத்தத்தம் செய்தார். இந்தச் சந்ததியைக் குறித்துத் தேவன், “அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன். நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்” (7:13-14), என்று சொன்னார்.
தாவீதின் எந்தக் குமாரன், இந்த வாக்குத்தத்தங்களையெல்லாம் நிறைவேற்றக்கூடும்? யாதொரு ராஜ்யத்தின் ஆளுகையும், என்றைக்கும் எப்படி நீடித்து நிலைக்கக்கூடும்? தாவீதின் குமாரனான ஒருவர், எப்படித் தேவகுமாரனாகவும் இருக்கக்கூடும்?
ஒத்திவைக்கப்பட்ட ஒரு வாக்குத்தத்தம்
தேவாலயம் கட்டுவதான, தாவீதின் கனவை நனவாக்கச் சாலொமோனைத் தேவன் அனுமதித்தார். அது பிரதிஷ்டைபண்ணப்பட்டபோது, தேவமகிமையின் மேகம் இறங்கிவந்து, ஆலயம் முழுவதையும் அவரது பிரசன்னத்தினால் நிறைத்தது. ஆனால், சில வருடங்களுக்குப்பின், சாலொமோன் மரித்துப்போனான். சில நூறு வருடங்களுக்குள், சாலொமோன் கட்டிய ஆலயம் அழிக்கப்பட்டுப்போயிற்று.
தாவீதின் காலத்திலிருந்தே வேதாகமச் சரித்திரமானது, ஆலயத்தைக் கட்டக்கூடியவரான, சிங்காசனம் நீடித்து நிலைத்திருக்கக்கூடியவரான, மற்றும் தேவனின் குமாரனாயிருக்கக்கூடியவரான, தாவீதின் ஒரு குமாரனைத் தேடுவதைச் சுற்றியே சுழன்றுகொண்டிருந்தது. புதிய ஏற்பாட்டின் முதல் வசனம், இந்த வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட குமாரனாக, இயேசுவை நமக்கு அறிமுகப்படுத்துகிறது: “தாவீதின்
குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு” (மத்தேயு 1:1).
தேவனின் வாக்குத்தத்தம் நிறைவேற்றப்படும் என்பதை மரியாளுக்குத் தேவதூதன் அறிவித்ததை, லூக்கா பதிவு செய்கிறான்: “நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக…. கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்” (லூக்கா 1:31-32).
இயேசு தமது ஊழியத்தைத் தொடங்கும்போது, அவரது அற்புதங்களை ஜனங்கள் கண்டு, அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு, “தாவீதின் குமாரன் இவர்தானோ?” என்றார்கள். (மத்தேயு 12:23). அதன்பின் மூன்றாண்டுகள் கழித்து, அவர் எருசலேமுக்குள் பிரவேசித்தபோது, அவர்கள் பேரீச்சைக் கிளைகளை அசைத்து, “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தார்கள் (மத்தேயு 21:9).
என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதான சிங்காசனம்
இயேசுவின் பிறப்பைக் காபிரியேல் தூதன் அறிவித்தபோது, அவன், “கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது” என்றான் (லூக்கா 1:32-33). ஆனால், எப்படி யாதொரு ராஜ்யமும் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்? இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, பரலோகத்துக்கு ஏறிச் சென்றார். மரணத்துக்கு இனி அவர்மேல் அதிகாரமில்லை. இயேசு, “எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டிய” பிதாவின் வலதுபாரிசத்தில் (1 கொரிந்தியர் 15:25), ராஜாதி ராஜாவாக வீற்றிருக்கிறார்.
இயேசு கிறிஸ்து, என்றென்றுமுள்ள சதாகாலங்களிலும் ராஜ்யபாரம்பண்ணுவார் (வெளிப்படுத்தல் 11:15). அத்துடன், அவரது சீஷர்களும் அவருடைய ஆளுகையில் பங்கடைவார்கள் என்று அவர் வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார். இயேசு, “நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும் படிக்கு அருள்செய்வேன்” (வெளிப்படுத்தல் 3:21), என்று சொன்னார்.
தாவீதின் ஒரு குமாரன், ஓர் ஆலயத்தைக் கட்டி, என்றென்றைக்கும் அரசாளுவார் என்று தேவன் வாக்குத்தத்தம்பண்ணிவிட்டார். இயேசு இந்த மாபெரும் வாக்குத்தத்தங்களுடன் பொருந்துமாறு தம்மையே எவ்வாறு அடையாளப்படுத்திக்கொண்டார் என்று நாமும் பார்த்துவந்திருக்கிறோம். ஆனால், தேவனுடைய வாக்குத்தத்தத்தின், மிகச்சிறப்பாகக் குறிப்பிட்டுக் கூறவேண்டிய பகுதி எதுவெனில், தேவன்தாமே தாவீதின் குமாரனுக்குப் பிதாவாக இருப்பார் என்பதே. தாவீதின் ஏதாவதொரு மகன் எப்படித் தேவகுமாரன் என்று எடுத்துரைக்கப்பட முடியும்? தாவீதின் குமாரன், தேவனின் சொந்தக் குமாரனாயிருப்பார் என்கிற தேவனின் வாக்குத்தத்தமானது, வேதாகமத்தின் மிகச்சிறந்த அற்புதத்தை நோக்கி நம்மை நடத்துகிறது.
தேவனின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து
தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த, மரியாளிடத்தில் இயேசு பிறந்தார் (மத்தேயு 1:16). ஆனால், மரியாள் மற்றும் யோசேப்புக்கிடையேயான தாம்பத்ய உறவின் மூலம் இயேசு பிறக்கவில்லை (1:25). அவர், தேவனுடைய சிருஷ்டிக்கும் அற்புதத்தின் மூலம், கன்னியின் கருவில் கர்ப்பந்தரிக்கப்பட்டார்: “பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்”(லூக்கா 1:35). தாவீதின் குமாரனான இயேசு, தேவகுமாரனாயிருக்கிறார்!
பொதுவாக, ஒரு மகன் என்று நினைக்கும்போது, தனது தந்தைக்கு இருபது அல்லது முப்பது ஆண்டுகள் கழித்துப் பிறக்கும் ஒருவரையே நாம் அவ்வாறு குறிப்பிடுவோம். ஆனால், இயேசு தேவனுடைய குமாரனாயிருக்கிறார் என்று வேதாகமம் கூறும்போது, அவர் தமது பிதாவின் சுபாவத்துக்குப் பங்குள்ளவராயிருக்கிறார் என்று நமக்குக் கூறுகிறது, அதாவது, அநாதியானவராயிருப்பதான தேவனின் சுபாவம், குமாரனிடமும் இருக்கிறது என்று வேதம் தெரிவிக்கிறது. தேவகுமாரன், பிதாவிடமிருந்து பிரிந்திருந்த காலம் ஒன்று, ஒருபோதும் இருந்ததில்லை: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது” (யோவான் 1:1).
தேவன், இயேசுவில் ஒரு மனிதனாக வந்தது எப்படியென்பது ஒரு இரகசியமாய் இருக்கிறது எனினும், இந்தச் சத்தியம் உணர்ந்து கொள்ளப்பட்டுவிட்டால், பின்பு அது மற்ற அனைத்திற்குமே அர்த்தம் விளங்கிக்கொள்ள ஏதுவாயிருக்கிறது. தேவன், மனிதன் ஆனார். நித்திய குமாரனானவர், மாம்சமெடுத்தார். என்றென்றைக்கும் பிதாவின் அருகில் ஒன்றாயிருந்துவந்த ஒரே பேறானவர், தேவனையும், மனிதனையும் ஒன்றாயிணைக்கிறவராய்த் தாவீதின் குமாரன் ஆனார்.
தேவனின் பிள்ளைகள்
நீங்கள் தேவகுமாரனாகிய இயேசுவில் விசுவாசிக்கிறவராகும்போது, பிதாவானவர் உங்களைத் தமது குடும்பத்திற்குள் சுவீகாரப் புத்திரராக்கிக்கொள்வார்: “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான் 1:12).
நீங்கள் சுயமதிப்பு இழந்து, தன்னம்பிக்கை இழந்து, போராடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில், இயேசு யார் என்பதும், அவர் தமது ஜனங்களுக்காக என்ன செய்கிறார் என்பதுமான உண்மையை உணருங்கள். இயேசு தேவகுமாரனாயிருக்கிறார். விசுவாசம் உங்களை இயேசுவோடு இணைக்கிறது.அவர் மூலமாக, நீங்கள் தேவனுடைய குடும்பத்திற்குள் சுவீகாரப் புத்திரராக்கப்படுகிறீர்கள். இப்பொழுது உங்கள் சரீரம், உங்களுக்குள் வாசமாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரின் ஓர் ஆலயமாக இருக்கிறது. நீங்கள் தேவனுடைய மகனாக அல்லது மகளாக இருக்கிறீர்கள். உங்கள் வாழ்வின் இறுதி இலக்கு, நித்தியகாலத்துக்கும் அவரை மகிழ்வுடன் அனுபவிப்பதேயாகும். இந்தச் சத்தியத்தை, உங்களது மிகச்சாதாரண நாளிலோ, மிகவும் இருள் சூழ்ந்த நேரத்திலோ, நினைவுகூருங்கள். தேவன் உங்கள்மேல் பொழிந்தருளியிருக்கும் கனத்தைப் பாருங்கள். இது உங்களை உயர்த்தட்டும்.
தேவஜனங்கள் எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையோடிருக்க முடியும். காரணம், இயேசு கிறிஸ்து சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். அவர் மூலமாக நாம் பிதாவோடு ஒப்புரவாக்கப்பட்டு, அவருடைய குடும்பத்தில் அங்கத்தினர்கள் ஆகிறோம். கிறிஸ்துவுக்கு அநேக சத்துருக்கள் உண்டு. ஆனால், அவர்கள் எல்லாருமே அவரது பாதபடியாக்கப்படுவார்கள் (சங்கீதம் 110:1). அத்துடன், தேவஜனங்களுடைய வாழ்வின் இறுதி இலக்கு, அவருடைய ஆளுகையின் ஆசீர்வாதத்தை அனுபவிப்பதும், என்றென்றும் அவருடன் ஆட்சி செய்வதுமேயாகும்.
குறிப்பு: 1சி. எஸ். லூயிஸ், த ஸ்க்ரூடேப் லெட்டர்ஸ் (நியூ யார்க்: மேக்மில்லன், 1942), 73.
கேள்விகள்
1. தேவனுக்கென்று ஏதாவதொரு நற்கிரியையைச் செய்ய வாஞ்சித்து, அதன்பின்பு அவர் அந்த வாசலை அடைத்ததுபோல் தோன்றியதான சூழ்நிலையில் எப்போதாவது நீங்கள் இருந்ததுண்டா?என்ன நடந்தது?
2. உங்களது நல்ல திட்டங்களுக்கான வாசலைத் தேவன் அடைத்துவிட்டபோது, அது உங்களைப் பற்றிக் காண்பித்தது என்ன (குறிப்பாக உங்கள் தாழ்மையைப் பற்றி)?
3. தாவீதுக்குத் தேவன் தந்த வாக்குத்தத்தம் எப்படி நிறைவேற்றப்பட்டது? இதிலிருந்து, தேவன் தமது வாக்குத்தத்தங்களை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதைப் பற்றி, நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
4. தாவீதுக்குத் தேவனின் வாக்குத்தத்தமானது, ஒரு வீடுஃஆலயம், ஒரு சிங்காசனம், மற்றும் ஒரு குமாரன் ஆகியவற்றைப் பற்றியதாயிருந்தது. தேவன் இந்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றிய மூன்று வழிகளில், உங்களுக்கு மிகவும் ஆச்சரியமானதாயிருந்தது எது? ஏன்?
5. நீங்கள் ஒரு தேவபிள்ளை என்கிற நிச்சயமான நம்பிக்கைகொண்டிருப்பது, உங்களுக்கு எந்தவிதத்தில் அர்த்தமுள்ளதாயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?