< முன் பகுதி




அடுத்த பாடம் >

தீர்க்கதரிசி

 1 சாமுவேல் 8:1-22

பாடம் 14 – தீர்க்கதரிசி


Download PDF

வேதவசனம்
பாடம்
கேள்விகள்
வேதவசனம்

2 சாமுவேல் 12:1-10

1. கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள், ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.

2. ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது.

3. தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது; அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது.

4. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல்பண்ணுவித்தான் என்றான்.

5. அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

6. அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்.

7. அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,

8. உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.

9. கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.

10. இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.

பாடம்

சீனாய் மலையில் தேவன் பத்துக் கற்பனைகளைக் கொடுத்தபோது, மோசேயும்கூடப் பயத்தில் நடுங்கிக்கொண்டுதானிருந்தான். ஜனங்கள் மோசேயை நோக்கி: "நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம்" (யாத்திராகமம் 20:19), என்றார்கள். ஆகவே, தேவன் மோசேயிடம் பேசினார். தேவனின் அந்த வார்த்தைகளை, மோசே ஜனங்களிடம் பேசினான். இதுதான் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளின் ஊழியமாயிருந்தது.

அதிகாரத்தில் உள்ளவர்கள், சட்டதிட்டங்கள் மற்றவர்களுக்குத்தான் பொருந்தும், தாங்கள் அதற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். தாவீதின் விஷயத்திலும் அப்படித்தான் இருந்தது. ஒருநாள் ராஜா, பத்சேபாள் என்னும் பெயருடைய, திருமணமான ஒரு ஸ்திரீயைப் பார்த்தான். தான் விரும்பியதை அடையும் அதிகாரம் தாவீதுக்கு இருந்ததால், அவன் தேவனுடைய பிரமாணத்தை அலட்சியம் செய்து, அந்த ஸ்திரீயை அடைந்தான்.

தாவீது, கர்த்தரை நேசித்தான். ஆனால், தேவனை நேசிக்கிற ஓர் இருதயம்கூட, விநோதமான சில ஆசைகளைத் தனக்குள் தேக்கிவைத்துக்கொள்ளக்கூடும். பத்சேபாளைக் குறித்ததான தாவீதின் உணர்ச்சிகள், தேவனுக்கு முற்றிலும் விரோதமானவையாக இருந்தன. எனினும், அவை மிகவும் வலிமையானவையாய்த் தன் மீது ஆதிக்கம் செலுத்துகிறவையாயிருந்தபடியால், தாவீது அவற்றிற்கு இடம் கொடுத்தான்.

பத்சேபாள் கர்ப்பந்தரித்ததைத் தாவீது அறிந்தபோது, அவன் தன் தவறுகளின் தடயங்களை மறைக்கத் துடித்தான். அவளின் கணவனான உரியா, இராணுவத்திலிருந்து செய்தி கொண்டுசெல்லுமாறு செய்து, யுத்தக்களத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பப்படவேண்டுமென்று, தாவீது ஆணையிட்டான். உரியா, சில இரவுகளைத் தன் மனைவியுடன் வீட்டில் கழித்தால், அந்தக் குழந்தைக்கு அவனே தகப்பனாக அடையாளப்படுத்தப்படுவான்.

ஆனால், அது பலனளிக்கவில்லை. உரியா, மனச்சாட்சியுள்ள ஒரு யுத்தவீரனாய் இருந்தான். ஆகவே, மற்றவர்களெல்லாரும் தங்கள் உயிரைப் பணயம்வைத்துப் போர்முனையில் நின்றுகொண்டிருந்தபோது, தான் மட்டும் தன் மனைவியோடு வீட்டில் தங்க அவன் விரும்பவில்லை. எனவே தாவீது, மிகவும் மோசமான நடவடிக்கைகளில் இறங்கவேண்டியதாயிற்று. அவன், போர்முகத்தின் மும்முரமான முன்னணியில் உரியா நிறுத்தப்பட உத்தரவிட்டு, அவனது மரணத்தைத் தவிர்க்க முடியாததாகும்படிச் செய்தான் (2 சாமுவேல் 11:5-17).

சில நாட்கள் சென்றபின், சமீபத்தில் விதவையாக்கப்பட்டிருந்த பத்சேபாளைத் தாவீது, தன் மனைவியாகும்படிச் சேர்த்துக்கொண்டான். இவ்வனைத்து நிகழ்வுகளுமே, ஒரு சிறு தடயமும் பொதுமக்களால் அறியப்படாமல் நிகழ்ந்தன. ஆனால், அந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குத் தப்பவில்லை. “தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது” (11:27). தேவன், நிகழ்ந்தவற்றைப் பார்த்தார். அதைப் பார்த்துவிட்டு அவர் மௌனமாயிருக்கவில்லை.

தேவனின் வார்த்தையைப் பேசுதல்

தன் அரண்மனைக்குத் தீர்க்கதரிசியான நாத்தான் வரும்வரை தாவீது, தனது முறைகேடான நடத்தையை மூடி மறைத்த செயல்கள், வெற்றிகரமாக நடந்துவிட்டது என்றே நினைத்திருந்தான். ஆனால் நாத்தானோ, ஓர் ஏழை மனிதனின் ஆட்டுக்குட்டியைத் திருடிய ஐசுவரியவான் ஒருவனைப் பற்றிய உவமையைத் தாவீதிடம் கூறினான். அக்கதையைத் தாவீது கேட்டபோது, அந்த மனிதன்மேல் கோபம்கொண்டான். அந்த மனிதனைத் தண்டிக்கவேண்டுமென்று தாவீது விரும்பினான். எது தாவீதைக் கோபப்படுத்தியதோ, அது அவனது சொந்தப் பாவத்தின் பிரதிபலிப்பாகவே இருந்தது என்பதைக் கவனியுங்கள். அந்த ஐசுவரியவான், மற்றொருவனுக்குச் சொந்தமானதும், அவனால் உயிரைப்போல் நேசிக்கப்பட்டதுமான ஒன்றை எடுத்துக்கொண்டதைப்போல, தாவீதும் செய்தான். ஆனால், தன் பாவத்தை மற்றொருவனிடத்தில் கண்டபோது, அவன் அதை வெறுத்துக் கண்டனம் செய்தான்.

யாரோ ஒருவரின் பாவம் உங்களைக் கோபமூட்டும்போது, நீங்கள் இதைச் செய்யுங்கள்: தனிமனிதனை அடையாளப்படுத்துவதை விடுத்து, அது என்னவென்பதை எழுதுங்கள். இது பேராசை. இது பெருமை. இது இச்சை. இது வஞ்சகம். இது விக்கிரகாராதனை. பின்பு தேவனிடம், அந்தக் காரியத்தைக் குறித்து உங்கள் வாழ்வின் எப்பகுதியில் நீங்கள் குற்றவாளியாக இருக்கிறீர்கள் என்பதைக் காண்பிக்கும்படிக் கேளுங்கள். மற்றவர்களிடத்தில் உங்களை மிகவும் கோபமூட்டுவது எதுவோ, அது ஒருவேளை உங்களது சொந்த இருதயத்திலேயே ஒளிந்திருக்கலாம்.

“நீயே அந்த மனுஷன்!” (12:7), என்று நாத்தான் சொன்னபோது, தாவீதின் இருதயத்தில் மறைந்திருந்த பாவத்தைக் காணும்படியாகத் தேவன் அவன் கண்களைத் திறந்தார். தாவீதின் தற்காப்புத் திரைகள் கிழித்தெறியப்பட்டன. ஆனால், இது தேவனின் கிருபையின் செயல்பாடாயிருந்தது. தாவீது, இருளுக்குள் வழுவிப் போயிருந்தான். அவனைத் திரும்பக் கூட்டிவருவதற்கு, ஒரு தீர்க்கதரிசியைத் தேவன் அனுப்பினார்.

பூர்வகாலத்தில், தேவன் தமது வார்த்தையைத் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பேசினார். ஆனால், காலம் நிறைவேறினபோது, தேவன் தமது குமாரனை அனுப்பினார் (காண்க எபிரெயர் 1:1-2): “அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்” (யோவான் 1:14).

தீர்க்கதரிசிகள் தேவனுடைய வார்த்தையைக் கேட்டார்கள், ஆனால் இயேசு, தேவ வார்த்தையாகவே இருக்கிறார். அவர் பேசிய வார்த்தைகள், பிதாவினால் அவருக்குக் கொடுக்கப்பட்டன: “நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்…. ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன்” (யோவான் 12:49-50).

ஆனால் இயேசு, ஒரு தீர்க்கதரிசியிலும் மேலானவர். வேறு எந்தவொரு தீர்க்கதரிசியும் சொல்லத் துணியாததை, இயேசு உரிமையோடு பிரகடனம் செய்தார்: “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” மற்றும் “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” (யோவான் 10:30; 14:9).

தேவன் உங்களிடத்தில் சொல்லவேண்டிய ஒவ்வொன்றுமே, இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால்தான், இன்று நமக்கு வேறு ஒரு தீர்க்கதரிசி தேவைப்படவில்லை. கடந்த காலங்களில் தீர்க்கதரிசிகள் வாயிலாய்த் தேவன் பேசினார். ஆனால், அவர்கள் எல்லாருமே, தேவ வார்த்தையானவராயிருக்கிற இயேசுவையே முன்னுரைத்துச் சுட்டிக்காட்டினார்கள்.

ஒரு தீர்க்கதரிசியின் நிலையைப் புரிந்துணர்தல்

தேவனின் வார்த்தையைப் பெற்றுக்கொள்வதென்பது, ஒரு தீர்க்கதரிசிக்கு எப்படிப்பட்டதாயிருந்தது? இதைப்பற்றி அப்போஸ்தலனாகிய பேதுரு, புதிய ஏற்பாட்டில் நமக்குக் கூறுகிறார்: “வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை் தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்” (2 பேதுரு 1:20-21).

இங்கே பேதுரு சொல்வது என்னவென்பதை, அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்திலுள்ள ஒரு கதையின் மூலமாகத்தான் சிறப்பான வழியில் புரிந்துகொள்ள முடியும். பவுல் கைது செய்யப்பட்டுக் கைதியாகக் கப்பல் மூலமாக ரோமைப் பட்டணத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டார். லூக்கா பதிவு செய்கிறார்: “கொஞ்சநேரத்துக்குள்ளே யூரோக்கிலிதோன் என்னுங் கடுங்காற்று அதில் மோதிற்று. கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம்” (அப்போஸ்தலர் 27:14-15).

கப்பலானது, காற்றினால் அதன் “போக்கிலே கொண்டுபோகப்பட்டது” என்பதற்கு லூக்கா பயன்படுத்திய அதே வார்த்தையைத்தான், தீர்க்கதரிசிகள் பரிசுத்த ஆவியினாலே “ஏவப்பட்டுப் பேசினார்கள்” என்பதற்குப் பேதுருவும் பயன்படுத்தினார். கடும்புயல்காற்றினூடே அடித்துக்கொண்டுபோகப்படும் கப்பலில் நீங்கள் இருக்கும்போது, உங்களுக்கு எந்த அளவுக்குக் கட்டுப்பாடு இருக்கும்? அதிகம் இருக்காது. படகின் திசையானது, காற்றினால் கட்டுப்படுத்தப்படுகிறது. தீர்க்கதரிசிகளின் செய்தியானது, ஆவியானவரால் கட்டுப்படுத்தப்பட்டது.

தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் தேவனிடமிருந்து வந்தன. இந்தப் பரிசுத்த மனுஷர்கள் “பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்” (2 பேதுரு 1:21). அவர்கள் செய்தியைக் கட்டுப்படுத்தவில்லை; செய்திதான் அவர்களைக் கட்டுப்படுத்தியது. அது, தேவனிடத்திலிருந்து வல்லமையான காற்றைப்போல் அவர்களிடம் வந்தது. அவர்களும் அதனால் ஏவப்பட்டுக் கொண்டுசெல்லப்பட்டார்கள். அதனால், அவர்கள் எழுதிய செய்தியும், அவர்கள் என்ன சொல்லவேண்டுமென்று தேவன் விரும்பினாரோ, அப்படியே மிகச்சரியாக இருந்தது.

தேவன் யாரென்று நாம் எவ்வாறு அறிகிறோம்? சத்தியம் எதுவென்று நாம் எவ்வாறு அறிகிறோம்? ‘தேவன் பேசுவதனால்’ என்பதே அதற்குப் பதிலாகும். தேவனுடைய வார்த்தையை ஜனங்களிடத்தில் சேர்ப்பவர்கள் தீர்க்கதரிசிகள். தேவனிடத்தில் நிற்கவும், அவருடைய வார்த்தையைக் கேட்கவும், பிரத்யேகமான சிலாக்கியம் அவர்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. தேவன் தம்மையே நமக்கு அறியப்பண்ணியிருக்காவிட்டால், நாம் ஒரு குறிப்பிட்ட அளவு மனித அனுபவம் மட்டும்தான் பெற்றிருப்போம். அதிலும் பெரும்பகுதி மிகுந்த வேதனையே. அபிப்ராயங்களால் ஆன இவ்வுலகில், தேவன் நமக்குத் தம்மையே வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படியாகவே, வேறு எவ்விதத்திலும் அறிந்திருக்கப்பட முடியாத காரியங்களைப் பற்றித் தீர்க்கதரிசிகளால் பேச முடிந்தது. ஏசாயா, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதைப்பற்றிப் பேசினான் (ஏசாயா 7:14). கழுதையின்மேல் ஏறிக்கொண்டு, எருசலேமுக்கு வரப்போகிற ஒரு ராஜாவைப் பற்றிச் சகரியா பேசினான் (சகரியா 9:9). தீர்க்கதரிசிகள் இவற்றையெல்லாம் அறிந்திருக்கக்கூடிய ஒரே வழி எதுவெனில், தேவன் அவற்றை அவர்களுக்குக் கூறினார் என்பதே.

தாவீதின் பாவச்செயலை நாத்தான் எப்படி அறிந்தான்? தேவன் அவனுக்குச் சொன்னார்! தேவன் நாத்தானிடம் பேசி, தாவீதை மூடியிருந்த மறைப்பை ஊதி, விலக்கிப்போட்டார்.

தேவனின் வார்த்தைக்குப் பிரதியுத்தரமளித்தல்

தேவன், நாத்தான் மூலமாகத் தாவீதை நேரடியாக எதிர்கொண்டபோது, ராஜாவானவன், “நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்” (2 சாமுவேல் 12:13), என்றான். தாவீது, “நாத்தானே, உமக்குப் புரியவில்லை. என் திருமண வாழ்க்கை பல்லாண்டுகளாக மரித்துக் கிடக்கிறது,” என்று சொல்லியிருக்க முடியும். அது உண்மையாகவும் இருந்திருக்கலாம். அல்லது தாவீது, “நாத்தானே, நான் தவறு செய்திருக்கிறேன் என்று நான் அறிவேன், ஆனால் மற்றத் தலைவர்கள் இதே காரியத்தை அல்லது இதனினும் மோசமானவற்றைச் செய்திருக்கிறார்கள்,” என்று சொல்லியிருக்க முடியும். அதுவும்கூட உண்மையாகவே இருந்திருக்கலாம். ஆனால் தாவீது, எந்தச் சாக்குப்போக்கும் சொல்லவில்லை. அவன், “நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்,” என்று சொன்னான். நீங்களாக இருந்தால், அப்படிச் சொல்லியிருப்பீர்களா? உங்கள் பாவம் வெளிப்படுத்தப்படும்போது, தேவனுடைய வார்த்தைக்கு நீங்கள் எப்படிப் பிரதியுத்தரமளிக்கிறீர்கள் என்பது, உங்களைப் பற்றிப் பெரிய காரியங்களை எடுத்துரைக்கும்.

தாவீதின் அந்த நேர்மையான பாவ அறிக்கையானது, தேவனிடமிருந்து மன்னிப்பைப் பெறும்படி அவனை நடத்தியது. அவனது மனதிலிருந்த பாரம் விடுவிக்கப்பட்டு, அவனுடைய இரட்சிப்பின் சந்தோஷமானது மீட்டெடுக்கப்பட்டது.

ஓராயிரம் ஆண்டுகளின் பின்பாக, ஏரோது எனப்பட்ட வேறொரு ராஜாவை, யோவான்ஸ்நானன் என்ற பெயருடையவனாயிருந்த ஒரு தீர்க்கதரிசியின் மூலமாகத் தேவன் எதிர்கொண்டார். ஏரோது, ஆன்மீகக் காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தான். ஆகவே, அவன் யோவானின் பிரசங்கத்தைக் கவனிக்க விரும்பினான்.

ஒரு நாள், ஏரோதிடம் அவனுடைய சகோதரனின் மனைவியுடனான அவனது தகாத உறவுபற்றிப் பேசும்படியாகத் தேவன், யோவானுக்கு வார்த்தைகளைக் கொடுத்தார். ராஜாவானவன், அதைக் கேட்க விரும்பவில்லை. அதன் முடிவிலோ, யோவான்ஸ்நானனின் தலையை ஒரு தட்டில் தன்னிடம் கொண்டுவரும்படி, அவன் உத்தரவிட்டான்.

இந்தக் கொடுமையெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஏரோது இயேசுவைச் சந்திக்கவும் ஆர்வம் காட்டினான். பின்பு அவனுக்கு வாய்ப்புக் கிட்டியபோது, அவன் அவரைப் பல கேள்விகளால் துளைத்தெடுத்தான். ஆனால், இயேசுவோ, மறுமொழி சொல்ல மறுத்துவிட்டார் (லூக்கா 23:9). யோவான்ஸ்நானன் மூலமாக வந்த தேவனுடைய வார்த்தையை, ஏரோது ஏற்க மறுத்துவிட்டான். அவன் தன் இருதயத்தைக் கடினப்படுத்திவிட்டான். இப்பொழுதோ, அவனுக்குச் சொல்வதற்கு இரட்சகரிடம் மௌனம் தவிர வேறெதுவுமில்லை.

நாம் அறிந்தவரையில், ஏரோதிடம் தேவன் அடுத்தமுறை பேசியபோது, அங்குத் தீர்க்கதரிசியோ, இரட்சகரோ இல்லை. அவன் மறுமுறை தேவனுடைய வார்த்தையைக் கேட்டபோது, அவன் தேவனுடைய சமூகத்தில் இருந்தான். ஏரோதைக் காட்டிலும், தாவீது மேலான தீர்மானத்தைச் செய்தான். தேவனுடைய வார்த்தை, அவனைத் தோலுரித்துக் காட்டியபோதும், அவன் அதற்குச் செவிகொடுத்தான். அதற்கு விசுவாசத்தோடும், மனந்திரும்புதலோடும் பிரதியுத்தரம் கொடுத்தான். தாவீதைத் தேவன் மீட்டெடுத்தார், அதைத் தமது வார்த்தை வழியாகவே செய்தார்.

தேவன் உங்களிடத்தில் பேசவேண்டுமென்று நீங்கள் எப்பொழுதாவது விரும்பியிருப்பீர்களென்றால், அவர் எப்படிப் பேசுகிறார் என்பதை நீங்கள் முதலாவது அறியவேண்டும். தேவன், தமது வார்த்தையின் வழியாகவும், தமது ஆவியின் மூலமாகவும் பேசுகிறார். அவருடைய வார்த்தை வெளிப்படும்போது, அவரது சத்தம் கேட்கப்படுகிறது.

நீங்கள் வேதாகமத்தைக் கற்கும்போதும், அது அறிவிக்கப்படுவதைக் கேட்கும்போதும், ஏற்றுக்கொள்வதற்குக் கடினமாயிருக்கக்கூடிய சில காரியங்களைத் தேவன் சொல்கிறார் என்பதைக் காண்பீர்கள். உங்களது பாவங்களைக்குறித்த சத்தியங்களைக் கேட்பது, உங்களைச் சங்கடப்படுத்தும். ஆனால், தேவன் பேசும்போதெல்லாம், அது அவருடைய கிருபையின் ஓர் அடையாளமாயிருக்கிறது. அவருடைய நோக்கம் எப்பொழுதுமே, மீட்டெடுப்பதும், ஆசீர்வதிப்பதுமாயிருக்கிறது. நீங்கள் வேதாகமத்தைத் திறக்கும்போது, நீங்கள் தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறீர்கள். அதில், தேவன் சொல்கிற அனைத்தையுமே நீங்கள் விசுவாசிக்கலாம்.

கேள்விகள்

1. நீங்கள் செய்த ஏதோவொன்றை, எப்பொழுதாவது மூடி மறைக்க முயற்சித்து, அதன்பின்பு சில காலம் சென்ற பிறகு, தேவன் அதை அறியப்பண்ணியதுண்டா? என்ன நிகழ்ந்தது?

2. உங்கள் சொந்த வார்த்தைகளில், ஒரு தீர்க்கதரிசியானவன் தேவனிடத்திலிருந்து ஒரு வார்த்தையைப் பெறுவதென்பது எப்படிப்பட்டது என்று விவரிப்பீர்கள்?

3. இன்று ஏன் நமக்குத் தீர்க்கதரிசிகள் இனிமேல் தேவைப்படுவதில்லை?

4. தேவன் உங்களிடம் பேசவேண்டுமென்று நீங்கள் எப்பொழுதாவது விரும்பியதுண்டா?

5. இதுவரை நீங்கள் வேதாகமத்தில் வாசித்ததில், மிகவும் அசௌகரியமானது எது? தேவனின் வார்த்தைக்கு நீங்கள் எவ்வாறு பிரதியுத்தரம் கொடுக்கிறீர்கள்? அது உங்கள் வாழ்வில் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கிறது?