< முன் பகுதி




அடுத்த பாடம் >

ஆலயம்

 1 சாமுவேல் 8:1-22

பாடம் 15 – ஆலயம்


Download PDF

வேதவசனம்
பாடம்
கேள்விகள்
வேதவசனம்

1 இராஜாக்கள் 8:1-11

1. அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரிலுள்ள பிதாக்களின் தலைவர் அனைவரையும், எருசலேமில் ராஜாவாகிய சாலொமோன் தன்னிடத்திலே கூடிவரச்செய்தான்.

2. இஸ்ரவேல் மனுஷரெல்லாரும் ஏழாம் மாதமாகிய ஏத்தானீம்மாதத்துப் பண்டிகையிலே, ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கூடிவந்தார்கள்.

3. இஸ்ரவேலின் மூப்பர் அனைவரும் வந்திருக்கையில், ஆசாரியர் கர்த்தருடைய பெட்டியை எடுத்து,

4. பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருந்த பரிசுத்த பணிமுட்டுகள் அனைத்தையும் சுமந்து கொண்டுவந்தார்கள்; ஆசாரியரும், லேவியரும், அவைகளைச் சுமந்தார்கள்.

5. ராஜாவாகிய சாலொமோனும் அவனோடேகூடின இஸ்ரவேல் சபையனைத்தும் பெட்டிக்கு முன்பாக நடந்து, எண்ணிக்கையும் கணக்குமில்லாத திரளான ஆடுகளையும் மாடுகளையும் பலியிட்டார்கள்.

6. அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தானத்திலே கேருபீன்களுடைய செட்டைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள்.

7. கேருபீன்கள் பெட்டியிருக்கும் ஸ்தானத்திலே தங்கள் இரண்டு செட்டைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.

8. தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தானத்திற்கு முன்னான பரிசுத்த ஸ்தலத்திலே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை முன்னுக்கு இழுத்தார்கள்; ஆகிலும் வெளியே அவைகள் காணப்படவில்லை; அவைகள் இந்நாள்வரைக்கும் அங்கே தான் இருக்கிறது.

9. இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபின் கர்த்தர் அவர்களோடே உடன்படிக்கை பண்ணுகிறபோது, மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.

10. அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையில், மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.

11. மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.

பாடம்


வேதாகமத்தின் வரலாறானது, ஆண்களும், பெண்களும் எவ்வாறு தேவனுடைய பிரசன்னத்தில் வாழமுடியும் என்பதைப் பற்றியது. மனிதன் பாவத்தையும், கீழ்ப்படியாமையையும் தெரிந்துகொண்டதன் மூலமாகத் தேவபிரசன்னம் இழக்கப்பட்டுப்போயிற்று. ஆனால், தேவனின் கிருபையினால், அவரது பிரசன்னம் திரும்ப வந்தது. தேவனின் இந்தக் கிருபையில், ஆபிரகாமுக்கும், மோசேக்கும் அவர் தோன்றிய தரிசனங்களும் அடங்கியிருந்தன. அத்துடன், தேவன் தமது நியாயப்பிரமாணத்தைக் கொடுத்த இடமாகிய சீனாய் மலையின்மேலும், அவர் வாக்குத்தத்தம்பண்ணியபடியே பிரதான ஆசாரியனைச் சந்திக்க உடன்படிக்கையின் பெட்டியின் மீதும், இறங்கிவந்த அவரது பிரசன்னமும்கூட தேவனின் கிருபையே.

தமது ஜனங்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்துக்குள் வந்தடையும்போது, அவர்களைத் தாம் சந்திக்கிறதான ஓர் இடத்தை அவர் தெரிந்துகொள்வார் என்று, தேவன் சொல்லியிருந்தார் (உபாகமம் 12:5). எருசலேம்தான் அந்த இடம் என்று தாவீது உணர்ந்து, அவன் உடன்படிக்கையின் பெட்டியைக் கொண்டிருக்கக்கூடியதான ஓர் ஆலயத்தைக் கட்டுவதன் மூலம், தேவனைக் கனம்பண்ண விரும்பினான். ஆனால் தேவன் தாவீதிடம், “[உன் குமாரன்] என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்” (2 சாமுவேல் 7:13), என்று சொன்னார். அவ்வாறாகத் தேவாலயத்தைக் கட்டுகிற சிலாக்கியம், சாலொமோனின்பேரில் விழுந்தது.

ஆலயம் கட்டுவதற்கான காலம்

சாதாரணமாகக் கட்டிடப் பணித்தளங்கள், உளி வெட்டுகிற, சுத்தியல் தட்டுகிற மற்றும் பல இரைச்சல்களுடன் எதிரொலித்துக்கொண்டிருக்கும். ஆனால், இந்த ஆலயமோ, முழு அமைதியில் கட்டமைக்கப்பட்டது. ஒவ்வொரு கல்லும் கல் சுரங்கங்களில் வெட்டப்பட்டு, மெருகூட்டப்பட்டு, அதன்பின்பு கட்டுமானப் பயன்பாட்டுக்குத் தயாராகக் கட்டிடப் பணித்தளத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

எல்லாப் பொருட்களும் ஆயத்தமாக்கப்பட்டு முடிந்ததும், கட்டுவதற்கான உத்தரவு கொடுக்கப்பட்டு, ஆலயம் அமைதியாகக் கட்டியெழுப்பப்பட்டது: “அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை” (1 இராஜாக்கள் 6:7).

தேவஜனங்கள், “ஜீவனுள்ள கற்கள்” என்று புதிய ஏற்பாட்டில் சித்திரிக்கப்படுகிறார்கள் (1 பேதுரு 2:5). தேவன் உங்கள் வாழ்வில் செய்துகொண்டுவருவது ஒவ்வொன்றுமே, உங்களை நித்திய வாழ்வுக்காக உருவாக்கிக்கொண்டிருக்கிறது. நீங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஜீவனுள்ள கற்களென நாட்டப்படும்படி, சுத்தியையும், வாச்சியையும் போல உங்களுடைய வேதனை, துன்பங்கள் எல்லாமே, உங்களை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது, ஆயத்தமாவது பூரணமாகிவிடும், தேவஜனங்களும் அவருடைய பிரசன்னம் வாசம் செய்யும் மகிமையானதொரு ஆலயமாக விளங்குவார்கள்.

தேவனின் கல்வெட்டிக்காரர்கள்

சில ஆண்டுகள் முன்பாக, ரோமேனியப் போதகர், ஜோஸஃப் டான் என்பவர், ஒரு போதகரின் இல்லத்திற்குச் சென்றிருக்கையில், தனது சாட்சியைப் பகிர்ந்துகொண்டார். அவர் கிறிஸ்துவின்மேல் வைத்த விசுவாசத்திற்காகச் சில காலம் சிறையில் இருந்தார்.

அங்குள்ள சிறைக்கைதிகள், சிறைக்காவலர்கள் கொடுமை செய்ததினால் அவர்களை வெறுத்தார்கள். ஆனால், ஜோஸஃப் டான், அந்தக் காவலர்களுக்காகவும், அவர்களது குடும்பங்களுக்காகவும் ஜெபித்தார். ஒரு காவலர் அவரிடம், “ஏன் நீங்கள் பிறரைப்போல் என்னை வெறுக்காமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அவர், “நீங்கள் என்னை வடிவமைப்பவர்கள்,” என்றார்.

உங்கள் வாழ்விலும் அதேபோல் உங்களை வடிவமைப்பவர்கள் இருக்கிறார்களா? அவர்கள் உங்களுக்கு வேதனையைக் கொண்டுவந்திருக்கலாம். ஆனால் தேவன், நீங்கள் கிறிஸ்துவின் ரூபமாகும்படி உங்களை வடிவமைக்க, அந்த வேதனையைப் பயன்படுத்துவார். உங்களது ஆரோக்கியம், குடும்பம், வேலை அல்லது பொருளாதாரம் ஆகியவற்றுடனான சிரமமான சூழ்நிலைகளையும்கூட, உங்களைச் செதுக்கி, வடிவமைக்கும்படியாகத் தேவனால் பயன்படுத்த முடியும். அந்தச் செயல்முறை என்னவோ வேதனையானதுதான். ஆனால், கிறிஸ்து மீண்டும் வரும்போது, நீங்கள் யாராக இருக்கவேண்டுமென்று அவர் அழைத்திருக்கிறாரோ, அந்தப்படியே நீங்கள் இருப்பீர்கள். அத்துடன் நீங்கள், பரலோகத்தில் நித்தியகாலமாய்த் தேவபிரசன்னத்தை அறிந்து, அனுபவிப்பீர்கள்.

பிரதிஷ்டைக்கான ஓர் ஆராதனை

கட்டிடப் பணி முடிவடைந்தபோது, தேவஜனங்களின் சரித்திரத்திலேயே மிகச்சிறப்பான நிகழ்வுகளில் ஒன்றென நிரூபிக்கப்பட்ட, பிரதிஷ்டை ஆராதனைக்காக ஜனங்கள் கூடி வந்தார்கள். ஆலயத்தின் மத்தியில் இருந்த மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள், ஆசாரியர்கள் உடன்படிக்கையின் பெட்டியைக் கொண்டுவந்தபோது, தேவபிரசன்னம் இறங்கிவந்தது: “மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று. மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக் கூடாமற்போயிற்று” (1 இராஜாக்கள் 8:10-11).

இந்த ஜனங்கள், தேவபிரசன்னத்தை இப்படி ஒருபோதும் அனுபவித்ததில்லை. நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, வனாந்தரத்தில்தான் கடவுளின் மகிமை கடைசியாகத் தென்பட்டது. ஆகவே, நிகழ்ந்துகொண்டிருந்தது என்னவென்பதைச் சாலொமோன் ஜனங்களுக்கு விவரிக்க வேண்டியிருந்தது: “காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார்” (8:12).

ஆலயத்தின் மத்தியிலிருந்த மகா பரிசுத்த ஸ்தலமானது, உடன்படிக்கையின் பெட்டியை ஸ்தாபிக்கிறதற்காகக் கட்டப்பட்டதான, ஓர் இருண்ட அறையாகும். பெட்டியின் மூடி மீது, தேவனின் நியாயத்தீர்ப்பைக் குறிக்கும் கேரூபீன்களின் தங்க வடிவங்கள் இருந்தன. ஆகவே, தேவபிரசன்னம் இறங்கிவந்தபோது, இந்த வடிவங்களால் குறிக்கப்பட்ட பிரிவினையை உடைத்துக்கொண்டு, தேவன் தமது ஜனங்களின் மத்தியில் வந்தார்.

ஆராதனையுடனான பிரதியுத்தரம்

தேவபிரசன்னத்திற்குச் சாலொமோனின் முதல் பிரதியுத்தரம், ஆராதனையாகத்தான் இருந்தது! “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதைத் தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்” (8:15).

ஆனால், எந்தக் கட்டிடமும் தேவனை ஒருபோதும் கொண்டிருக்க முடியாதென்றும், தேவபிரசன்னத்தின் மேகமும், அது வந்த வேகத்திலேயே நீங்கிவிடக்கூடுமென்றும் சாலொமோன் அறிந்திருந்தான். ஏதோ அவ்வப்போது நிகழும் தேவபிரசன்னத்தின் அனுபவத்தைவிடவும், மேலான ஒன்றிற்காக அவன் ஏங்கினான். அந்த ஆலயமானது, எப்பொழுதும் தேவபிரசன்னம் காணப்படக்கூடிய ஒரு ஸ்தலமாக இருக்கவேண்டுமென்று அவன் விரும்பினான், ஆகவே, அவன் இந்த வேண்டுதலைச் செய்தான்: “உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்கும்படி என்னுடைய நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின் மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக” (8:29).

எருசலேமிலிருந்து பல மைல்கள் தூரத்தில் வாழ்ந்துவந்த மக்களுடைய ஜெப விண்ணப்பங்களைத் தேவன் கேட்கவேண்டுமென்றும் சாலொமோன் விண்ணப்பம்பண்ணினான்: “உமது அடியானும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பஞ் செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபத்தைக் கேட்டருளும் பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே அதை நீர் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக” (8:30). தேவபிரசன்னத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டதொரு வருங்காலத்தை எதிர்நோக்கியிருந்த சாலொமோனின் இருதயத்தைச் சந்தோஷம் நிரப்பிற்று: “தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலை அருளின கர்த்தருக்கு ஸ்தோத்திரம். . . . நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைக் கைவிடாமலும், நம்மை நெகிழவிடாமலும், அவர் நம்முடைய பிதாக்களோடு இருந்ததுபோல, நம்மோடும் (இருப்பாராக)” (8:56-57).

ஆலயத்தின் துயரக் கதை

ஆனால், அந்தச் சந்தோஷம் நீடிக்கவில்லை. சாலொமோனின் காலத்துக்குப் பிறகு, மனாசே என்னும் வேறொரு ராஜா, வேறே தேவர்களுக்கு ஆராதனையை ஊக்குவித்து, தேவனுடைய ஆலயத்திலே குறிசொல்லுதலை அறிமுகப்படுத்தினான் (2 இராஜாக்கள் 21:5-6). இந்த விக்கிரகாராதனையானது, தேவனுக்கு மிகவும் விரோதமானதாயிருந்தது. அதனால், அவர் தமது ஜனங்களை அவர்களது பகைவர்களின் கைகளில் ஒப்புக்கொடுத்துவிட்டார். பாபிலோனிய சேனை, எருசலேமை முற்றுகையிட்டது, பட்டணம் வீழ்ந்தது, ஆலயமும் அழிக்கப்பட்டுப்போயிற்று.

எருசலேம் பட்டணம், ஒரு கற்குவியலென்கிற அளவுக்குத் தாழ்த்தப்பட்டது. இதன் ஒரு செயல்பாடாக, உடன்படிக்கையின் பெட்டி காணாமல் போனது. மேலும், (பல புதையல் வேட்டை, அகழ்வாராய்ச்சி முயற்சிகளுக்குப் பிறகும்!) அது ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த உண்மை ஒரு மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது. பெட்டி இல்லாமல் அந்த ஆலயம், தேவன் தமது ஜனங்களைச் சந்திக்கும் இடமாக ஒருபோதும் இருக்க முடியாமற்போனது. ஆலயமானது, எஸ்றா மற்றும் நெகேமியா ஆகியோரின் தலைமையின் கீழ், திரும்பவும் கட்டப்பட்டது. ஆனால், அது சாலொமோனால் கட்டப்பட்ட ஆலயம்போல் இல்லை. ஜனங்கள் தேவனை ஆராதிக்கக் கூடி வந்தாலும், தேவபிரசன்னம் இறங்கவில்லை. மேலும், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் காலம் வந்தபோது, ஆலயமானது “ஒரு கள்ளர் குகையாய்” ஆகிவிட்டது. 

நம்மோடிருக்கும் ஆலயம்

இயேசுவின் பிறப்பை விவரிக்கும்போது, யோவான், “அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்” (யோவான் 1:14), என்று சொன்னார். “வாசம்பண்ணினார்” என்பது, “குடிகொண்டார்,” அல்லது “தமது கூடாரத்தை நிறுவினார்,” என்று பொருள்படுகிறது, ஆகவே யோவான், இயேசு பிறந்தபோது தேவனின் பிரசன்னம், தமது ஜனங்களுக்குள்ளே இறங்கிவந்தது என்று நமக்குக் கூறுகிறான்.

தமது ஊழியத்தின் ஆரம்பத்தில், இயேசு ஆலயத்துக்கு வந்து, “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்,” என்று சொன்னார் (யோவான் 2:19). அவர் சொன்னதைக் கேட்டவர்கள், அவர் ஏதோ அந்தக் கட்டிடத்தைக் குறிப்பிடுகிறார் என்று நினைத்தார்கள். ஆனால் இயேசுவோ, அவர்தாமே தேவனை நாம் சந்திக்கிற ஸ்தலம் என்று சுட்டிக்காட்டும் வகையில், தமது சொந்த சரீரத்தையே குறிப்பிட்டார்: “நீங்கள் தேவனைச் சந்திக்க விரும்பினால், என்னிடம் வாருங்கள்,” என்று அவர் சொன்னார்.

ஆண்களும், பெண்களும் தேவனைச் சந்திக்கக்கூடிய ஸ்தலமானது, எருசலேமிலோ, வேறு ஏதாவதோர் இடத்திலோ இருக்கிற ஒரு கட்டிடமல்ல. இயேசு கிறிஸ்துவின் வழியாகவே நீங்கள் தேவனைச் சந்திக்க முடியும். சாலொமோன், ஆலயத்தை நோக்கி ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்களுக்குத் தேவன் செவிசாய்க்கவேண்டும் என்று ஜெபித்தான். ஆனால் இயேசுவோ, தமது நாமத்தில் ஏறெடுக்கப்படும் ஜெபங்களைத் தேவன் கேட்பார் என்று வாக்குத்தத்தம் செய்கிறார்: “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்” (யோவான் 16:23).

நமக்குள் இருக்கும் ஆவியானவர்

சீஷர்கள் இயேசுவோடிருந்தபோது, தேவபிரசன்னம் எப்பொழுதும் அவர்களுடன் இருந்தது. இயேசுவின் உருவில், கடவுள் அவர்களுடன் இருந்தார். எனவே இயேசு அவர்களைவிட்டுச் செல்வதைப் பற்றிப் பேசத் தொடங்கியபோது, சீஷர்கள் கலக்கமடைந்தனர்.

ஆனால் இயேசு, “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். . . . அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்,” என்றார் (யோவான் 14:16-18). சீஷர்கள், இயேசுவின் மூலம் தேவபிரசன்னம் தங்களுடனேகூட இருப்பதை அறிந்திருந்தார்கள். ஆனால் இப்பொழுதோ, தேவபிரசன்னம் பரிசுத்த ஆவியானவர் மூலமாகத் தங்களுக்குள் இருப்பதை அறிவார்கள்.

விசுவாசியின் வாழ்க்கையில், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னமானது மிகவும் பிரமிப்புூட்டக்கூடியது, ஆகவேதான் பவுல், “உங்கள் சரீரமானது . . . . உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் . . . . அறியீர்களா?” (1 கொரிந்தியர் 6:19), என்று கேட்கிறான். இதை உள்வாங்கிக்கொள்ள முயற்சியுங்கள்: உங்களது சரீரம் பரிசுத்த ஆவியானவருடைய ஆலயம். சாலொமோன் கட்டிய தேவாலயத்தில், அது பிரதிஷ்டைபண்ணப்பட்டபோது, தேவனின் மகிமையான பிரசன்னம் இறங்கிவந்ததைப்போலவே, தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவர்களுடைய வாழ்வையும் தேவபிரசன்னம் நிரப்புகிறது. ஆகவேதான் விசுவாசிகளானவர்கள், “அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும்” வேண்டுமென்று, பவுல் வேண்டிக்கொள்ளுகிறான் (எபேசியர் 3:19).

மனிதச் சரித்திரம் முழுவதுமே, இயேசு கிறிஸ்து தமது ஜனங்களைத் தேவனுடைய பிரசன்னத்திற்குள் எடுத்துச் செல்வதற்கான அந்த நாளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அப்போஸ்தலனாகிய யோவானுக்கு, இது எப்படியிருக்கும் என்பதைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் அளிக்கப்பட்டது. அவன் மிகச்சிறந்ததொரு நகரத்தையும், மிகப்பெரியதொரு ஜனக்கூட்டத்தையும் கண்டான். பின்பு அவன், “பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தமானது: ‘இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்’” (வெளிப்படுத்தின விசேஷம் 21:3), என்று சொல்லுகிறதைக் கேட்டான்.

தேவாலயத்தில் தேவபிரசன்னத்தின் மேகமானது, கிறிஸ்துவில் தேவன் செய்யவிருப்பதைச் சுட்டிக்காட்டி முன்னுரைத்தது. இயேசுவில், தேவன் மாம்ச ரூபமெடுத்து நம் மத்தியில் இறங்கி வந்தார். நாம் அவரில் விசுவாசிக்கும்போது, தேவபிரசன்னம் பரிசுத்த ஆவியானவரால் நம் வாழ்விற்குள் பிரவேசித்து, நாம் அவரோடு வாழப்போகிற நித்தியத்தில், நமக்கென்று வைக்கப்பட்டிருக்கிற ஆனந்த சந்தோஷங்களின் முன்ருசியை நமக்கு வழங்குகிறது.

 

கேள்விகள்

1. தேவனுடைய பிரசன்னத்தில் நீங்கள் வாழ விரும்புவீர்கள் என நினைக்கிறீர்களா? ஏன் அல்லது ஏன் இல்லை?

2. தற்சமயம் உங்கள் வாழ்வில் தேவனுடைய கல்வெட்டிக்காரர்கள் யார்? அந்த வேதனையைப் பற்றிப் பேசுங்கள். உங்களை அதிகமதிகமாய்க் கிறிஸ்துவைப்போல் உருவாக்கத் தேவன் இதை எவ்வாறு பயன்படுத்த விரும்புவார் என்று நினைக்கிறீர்கள்?

3. மனித வரலாற்றில், தேவன் தம் ஜனங்களிடையே எப்போது இறங்கி வந்தார்? இன்று நாம் தேவனைச் சந்திக்க விரும்பினால், நாம் செல்லவேண்டியது எங்கே?

4. அப்போஸ்தலனாகிய பவுல், “உங்கள் சரீரமானது பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறது” (1 கொரிந்தியர் 6:19), என்று விசுவாசிகளுக்குச் சொன்னதன் அர்த்தம் என்ன?

5. பரலோகத்தில் வாழ்வு எப்படியிருக்கும் என்பதைப்போன்ற ருசியை, தற்போதுள்ள வாழ்வில் நாம் எவ்வாறு பெற முடியும்?