< முன் பகுதி




அடுத்த பாடம் >

ஆராதனை

 1 சாமுவேல் 8:1-22

பாடம் 16 – ஆராதனை


Download PDF

வேதவசனம்
பாடம்
கேள்விகள்
வேதவசனம்

1 இராஜாக்கள் 18:20-46

20. அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான்.

21. அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.

22. அப்பொழுது எலியா ஜனங்களை நோக்கி: கர்த்தரின் தீர்க்கதரிசிகளில் மீந்திருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ நானூற்றைம்பதுபேர்.

23. இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடத்தில் கொண்டுவரட்டும்; ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு, அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைக்கக்கடவர்கள்; நான் மற்றக் காளையை அப்படியே செய்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைப்பேன்.

24. நீங்கள் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன்; அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள்.

25. அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகரானதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம்பண்ணி, நெருப்புப்போடாமல் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான்.

26. தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்.

27. மத்தியான வேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்.

28. அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.

29. மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.

30. அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு:

31. உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து,

32. அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி,

33. விறகுகளை அடுக்கி, ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின்மேல் வைத்தான்.

34. பிற்பாடு அவன்: நீங்கள் நாலுகுடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாந்தரமும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாந்தரமும் ஊற்றினார்கள்.

35. அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான்.

36. அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும்.

37. கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்.

38. அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.

39. ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்.

40. அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்.

41. பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும், பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்.

42. ஆகாப் போஜனபானம் பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து,

43. தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான்.

44. ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றான்.

45. அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்.

46. கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்குமுன் ஓடினான்.

பாடம்

ராஜாவாகிய சாலொமோன், ஆலயத்தைக் கட்டுவதிலே மிகச்சிறந்ததொரு பங்களிப்பைச் செய்திருந்தாலும், அவனது முடிவு மோசமானதாயிருந்தது. தொடர்ந்து வந்த ஆண்டுகளிலே, அவனை அடுத்து வந்த பெரும்பாலான ராஜாக்கள் கர்த்தரிடத்திலிருந்து வழி விலகிப் போய்விட்டார்கள். விக்கிரகங்களின் ஆராதனையை ஊக்குவித்த ராஜாவாகிய ஆகாப், அப்படிப்பட்ட மிக மோசமானவர்களுள் ஒருவனாயிருந்தான். ஆனால் தேவனோ, தமது ஜனங்களைத் தம்மிடம் திரும்ப அழைக்கும்படியாகத் தீர்க்கதரிசியான எலியாவை எழுப்பினார். 

வெற்றிக்கும், வீழ்ச்சிக்குமிடையே பெரும்பாலும் மிகக் குறுகிய தூரமே இருக்கிறது. சாலொமோன் சிங்காசனம் ஏறியபோது, தேவஜனங்களுக்கு அனைத்துமே சரியாகச் சென்றுகொண்டிருந்தது. ஞானமுள்ள தலைமைத்துவம், ஒற்றுமை மற்றும் அவர்களது தேசத்தின் சமாதானம், என அனைத்துமே நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. ஆலயத்தின் பிரதிஷ்டையின்போது, தேவபிரசன்னம் அவர்கள் மத்தியில் வந்தது. ஆனால் காலப்போக்கில், சாலொமோனின் வெற்றியானது, நிர்விசாரமான நிலையை வளர்த்துவிட்டது. அதனால், அவனது ஆட்சியின் பிந்தின வருஷங்களில், எதிர்காலப் பேரழிவிற்கான விதைகள் விதைக்கப்பட்டன.

பேரழிவிற்கான ஒரு வழி

லொமோன், மூன்று தவறுகள் செய்தான். முதலாவது, துயரப்பட்ட மக்களோடு தொடர்பை இழந்துவிட்டான். ராஜாவின் கவனமெல்லாம் எருசலேமின் மீதே குவிந்திருக்க, தென்னாட்டு மக்கள் செழித்திருந்தார்கள். ஆனால் வடநாட்டிலிருந்த அவர்களது சகோதரர்களோ, கொத்தடிமைகளாக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார்கள்.

ஒருவேளை, வடநாட்டிலிருந்த ஜனங்கள் குறைந்த முக்கியத்துவமே வாய்ந்தவர்கள் என்று சாலொமோன் நினைத்திருக்கக்கூடும். ஆனால், குறுகிய கண்ணோட்டத்துடனான அவனது தலைமைத்துவம், நீண்டகாலப் பின்விளைவுகளை உண்டாக்கிற்று. அவன் தன் குமாரனான ரெகொபெயாமிடம் தேசத்தை ஒப்படைத்தபோது, பிரிவினைக்கான விதைகள் ஏற்கெனவே நடப்பட்டுவிட்டிருந்தன.

இரண்டாவது, சாலொமோன் சுகபோகத்தை அனுபவிப்பதிலேயே வழுவிப் போய்விட்டான். அவன் சகல அதிகாரங்களும், சகல வளங்களும் உடையவனாயிருந்தான், ஆதலால் தான் விரும்பிய எதையும் செய்யக்கூடியவனாயிருந்தான். அவனது ஆரம்ப நாட்களில், அவன் தனது நேரம், ஆற்றல் மற்றும் செல்வம் ஆகிய அனைத்தையுமே, தேவனின் மகிமைக்காக ஏதேனும் சாதிக்கிறதிலே செலவிட்டுக்கொண்டிருந்தான். ஆனால் தனது பிற்கால வாழ்விலோ, அவன் சுகபோகத்தை அனுபவிப்பதற்கே தன் அதிகார ஸ்தானத்தைப் பயன்படுத்தினான்.

சாலொமோனுக்கு எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள் (1 இராஜாக்கள் 11:3). இந்தச் சுகபோகமே அவனது வீழ்ச்சிக்கு வேராயிருந்தது: “சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை” (11:4).

மூன்றாவது, சாலொமோன் சரியானதைச் செய்வதற்குப் பதிலாக, பிரசித்தமானதைச் செய்வதையே தெரிந்துகொண்டான். அநேக அந்நியஜாதியாரான மனைவிகளை மணந்துகொண்டதால், அவர்கள் வணங்கிய கடவுள்களுக்கெல்லாம் பலிபீடங்கள் கட்டவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவன் அடிபணிந்தான்: “அப்பொழுது சாலொமோன் எருசலேமுக்கு எதிரான மலையிலே மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான். இப்படியே தங்கள் தேவர்களுக்குத் தூபங்காட்டிப் பலியிடுகிற அந்நியஜாதியாரான தன் ஸ்திரீகள் எல்லாருக்காகவும் செய்தான்” (11:7-8).

இது, தேவஜனங்கள் மத்தியில் விக்கிரகாராதனையின் அப்பட்டமான தொடக்கமாக இருந்தது. சாலொமோனின் ராஜ்யபாரத்தின் தொடக்கத்தில் எருசலேமானது, ஜீவனுள்ள தேவன் தமது நாமத்தைத் தரிப்பித்திருந்த ஸ்தலமாக இருந்தது. ஆனால் முடிவிலோ, பிற தெய்வங்களின் கோயில்களால் எருசலேம் நிரப்பப்பட்டுவிட்டது. எருசலேமுக்கு வரும் எந்தப் பயணியும், பல்வேறு தெய்வங்களுள் இஸ்ரவேலின் தேவனும் ஒருவர் என்ற முடிவுக்கு வரக்கூடும்.

தனது வாழ்வின் முதல் பாதியில், சாலொமோன் தேவனுக்காகப் பெரியகாரியங்களைச் செய்தான். ஆனால் அதன்பின் அவனது பிந்திய ஆண்டுகளிலோ, தான் செய்த நன்மைகளில் பெரும்பாலானவைகளைத் தனது சுகபோகங்களின் மூலமாக வீணாக்கிவிட்டான். அவன் தன் தகப்பனான தாவீதிடமிருந்து, ஒற்றுமையான மற்றும் அமைதியான ஒரு இராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டான். ஆனால் தன் குமாரனிடமோ, சீக்கிரத்தில் பிளவுபடப்போவதும், யுத்தத்துக்கேதுவானதுமான ஒரு இராஜ்யத்தை ஒப்படைத்தான்.

ரெகொபெயாம் பொறுப்பேற்றபோது, வடதேசத்து மக்களிடையே உறுமிக்கொண்டிருந்த ஓர் அதிருப்தியை அவன் எதிர்கொண்டான். அவர்கள் யெரொபெயாமிடத்தில் ஒரு தலைவனை அடையாளம் கண்டு, அவனைச் சுற்றி அணிதிரண்டு, அவனைத் தங்களது ராஜாவாக முடிசூட்டினார்கள். ஆகவே, வடக்கிலிருந்த பத்துக் கோத்திரத்தாரும், தேவன் ஆசீர்வதிப்பதாக வாக்குப்பண்ணியிருந்த தாவீதின் வழிமரபிலிருந்து பிரிந்துவிட்டார்கள்.

வடநாட்டின் கதை

யெரொபெயாம், வடநாட்டின் பத்துக் கோத்திரங்களுடைய புத்திசாதுர்யமுள்ள ஒரு தலைவனாயிருந்தான். அவன், மக்களை மதத்தின் மூலம் ஒருங்கிணைக்கிற சக்தியை அறிந்தான். விசுவாசமுள்ள ஜனங்கள், வடநாட்டிலிருந்து எருசலேம் தேவாலயத்துக்கு, ஆராதிப்பதற்காகத் தொடர்ந்து சென்றால், அவர்கள் தென்னாட்டிலுள்ள தங்களது சகோதர, சகோதரிகளுடன் தாங்கள் பகிர்ந்துவந்திருந்த ஒருமைப்பாட்டுணர்வைப் பற்றி நினைவுூட்டப்படுவார்கள் என்பதை அவன் கண்டான்.

ஆதலால் யெரொபெயாம், தனக்கேயுரிய ஆராதனை மையங்களை ஸ்தாபிக்கத் தீர்மானித்தான். அவன் இரண்டு பொன் கன்றுக்குட்டிகளை வார்ப்பித்துவைத்து, ஜனங்களிடம்: “நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை
எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள்,” என்று கூறினான் (1 இராஜாக்கள் 12:28). வனாந்தரத்தில், ஆரோன் பொன் கன்றுக்குட்டியைச் செய்தபோது, அவன் பயன்படுத்திய அதே வார்த்தைகள்தாம் இவை (யாத்திராகமம் 32:8).

அதைத் தொடர்ந்து வந்தது இன்னும் மோசமானது. யெரொபெயாம் தன் குமாரனான நாதாப்பிடம் ராஜ்யபாரத்தை ஒப்படைத்தான். அவன், பாஷாவினால் கொல்லப்பட்டு மரிக்குமளவும் தன் தகப்பனின் வழிகளிலேயே தொடர்ந்து நடந்தான். அவனைத் தொடர்ந்து குடிகாரனும், கொலைபாதகனுமாகிய ஏலா வந்தான். அதன்பின்பு, ராஜதுரோகக் குற்றவாளியான சிம்ரி, ஏழு நாட்களே நீடித்தான். பின்பு, “தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கேடாய் நடந்த” உம்ரி (1 இராஜாக்கள் 16:25) வந்தான். கடைசியாய், “தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச்” செய்ததன் மூலம் உம்ரியையும் மிஞ்சிவிட்ட ஆகாப் வந்தான் (16:30). தேவனுடைய தீர்க்கதரிசிகள் வேட்டையாடப்பட்டுக் கொல்லப்பட்டதான, துன்புறுத்தலின் சூழ்ச்சிகரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, அரண்மனையின் அதிகாரங்களைப் பயன்படுத்திய, மோசமான பெயரெடுத்த யேசபேலை ஆகாப் மணந்துகொண்டான்.

சாலொமோனின் மரணத்தை அடுத்து வந்த ஆண்டுகளில், இஸ்ரவேல் அடையாளங்காணமுடியாதபடி மாறிப்போயிற்று. சாலொமோனின் ஆளுகையின் தொடக்கத்தில், ராஜாவானவன், “தேவன் ஒருவரே,” என்று சொன்னான். யெரொபெயாமின் காலத்தில், “அநேகக் கடவுள்கள் இருக்கிறார்கள்,” என்பது அதிகாரப்பூர்வ நிலையாயிருந்தது. ஆனால் ஆகாபின் காலத்திலோ, ஒரே தேவனே இருக்கிறார் என்று சொல்வதே ஏற்றுக்கொள்ளப்படாததாகி, அப்படிச் சொன்னவர்கள் உபத்திரவத்துக்குட்படுத்தப்பட்டார்கள். ஆகவே தேவன், தமது ஜனங்களிடையே மெய்யான ஆராதனையை மீட்டெடுக்கத் தீர்க்கதரிசியான எலியாவை அனுப்பினார்.

மெய்யான ஆராதனை என்பது வெளிப்படுத்தப்பட்ட

சத்தியத்திற்கான ஒரு பிரதியுத்தரம்
கர்மேல் பர்வதம், மிகப்பெரியதொரு பதிலடியின் காட்சியாய் இருந்தது. ஆகாப், இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி, பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பது பேரையும், தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறு பேரையும், தேசம் முழுவதிலுமிருந்து ஜனங்களோடே கூடிவரும்படி செய்தான் (1 இராஜாக்கள் 18:19). எல்லாரும் கூடிவந்தபோது, எலியா ஜனங்களை ஒரு கேள்வியுடன் எதிர்கொண்டு சவால் விடுத்தான்: “நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள்” (18:21). எலியா, பாரம்பரியத்துக்காக முறையீடு செய்யவில்லை் சத்தியத்துக்காக அறைகூவல் விடுத்தான். கர்த்தரை ஆராதிப்பதற்கான ஒரே காரணம், அவரே தேவன் என்பதே.

உங்கள் பெற்றோர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள் என்கிற காரணத்துக்காகவோ, உங்களது கலாசாரத்தில் கிறிஸ்தவமே பெரும்பான்மை பலம்வாய்ந்த மதம் என்பதற்காகவோ, நீங்களும் கிறிஸ்தவராக இருக்கவேண்டும் என்று கூற யாருக்கும் உரிமை இல்லை. கிறிஸ்தவமானது, சத்தியமாயிருக்கிற, “கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்,” என்கிற உரிமைபாராட்டலில் நிற்கிறது அல்லது வீழ்கிறது:

எலியாவின் கேள்வி, சத்தியம் மற்றும் பொய் ஆகிய இருவகைக் கருத்துக்களை முன்வைத்தது. ஆனால் ஜனங்களோ, இவ்விரு கோட்பாடுகளின் அடிப்படையில் சிந்திப்பதையே சிரமமானதாகக் கண்டார்கள். அவர்கள் ஆராதிக்கும் தேவன் அவர்களது தனிப்பட்ட தேர்வு, விசுவாசம் என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம், மற்றும் ஒவ்வொரு தனிநபரும் அவனது அல்லது அவளது சொந்த விருப்பு, வெறுப்புக்கேற்றபடியான ஆராதனை முறையைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதுமான எண்ணங்களுடனேயே அவர்கள் வளர்த்துக்கொண்டுவரப்பட்டிருந்தார்கள்.

ஆனால், நீங்கள் ஆராதிப்பதற்கும் முன்பதாக, தேவன் யாரென்று நீங்கள் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். மெய்யான ஆராதனை என்பது வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்திற்கான ஒரு பிரதியுத்தரம். பொதுவான ஆராதனை என்பது சத்தியத்தை மையமாகக்கொண்டு கட்டியெழுப்பப்படவேண்டும். நாம் சத்தியத்தைப் பாடவேண்டும், சத்தியத்தை வாசிக்கவேண்டும், சத்தியத்தை ஜெபிக்கவேண்டும், மற்றும் சத்தியத்தையே பிரசங்கிக்கவேண்டும்.

மெய்யான ஆராதனை ஜீவனுள்ள தேவன்மீதே கவனம் செலுத்துகிறது

எலியா, ஜீவனுள்ள தேவன் ஒருவரே இருக்கிறார் என்பதை ஜனங்கள் அறிந்துகொள்ளவேண்டுமென்று விரும்பினான். ஆகையால் அவன், பாகாலின் தீர்க்கதரிசிகள் ஒரு பலியை ஆயத்தம் செய்யவும், அதன்பின் அக்கினியை அனுப்புவதன் மூலம் பதிலளிக்குமாறு, பாகாலை நோக்கிக் கூப்பிடும்படியாகவும், அவர்களை அழைத்தான். பாகாலின் தீர்க்கதரிசிகள், சவாலுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்துத் தங்கள் கடவுளை நோக்கிக் கூப்பிட்டார்கள்: “பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும்!” (18:26). அவர்கள் பலிபீடத்தைச் சுற்றிக் குதித்து, நடனமாடி, தங்களையே பித்துக்கொண்டவர்கள்போல் காண்பித்துக்கொண்டார்கள்.

மிகவும் பிரகாசமாகவும், வண்ணமயமாகவும் மற்றும் கலகலப்பாகவும் தொடங்கிய ஒன்று, விரைவாகவே அந்தகாரமானதாக மாறிப்போனதுடன், அதிகத் தீமையான ஓர் அம்சமும் வெளிப்படத் தொடங்கியது. பாகாலின் தீர்க்கதரிசிகள், தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயாராகுமுன், தங்களைத் தாங்களே வேதனைப்படுத்திக்கொள்வதில் ஈடுபட்டுத், “தங்களைக் கீறிக்கொள்ளத்” தொடங்கினார்கள் (18:28).

ஆனால், இத்தனை தீவிரமான நடவடிக்கைகளுக்குப் பின்னரும், “மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை” (18:29). பாகாலின் வழிபாடு, சுய வெளிப்பாட்டிற்கான ஒரு செயல் என்பதற்கு மேலாக ஒன்றுமில்லாதிருந்தது. வேறு யாரும் கவனிக்காததால் அந்தத் தீர்க்கதரிசிகள், தங்களுக்குத் தாங்களே பேசிக்கொண்டிருந்தார்கள்.

பாகால் வழிபாடானது, வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், மக்கள் பாகால் எனப்பட்ட ஒரு கடவுளைப் பற்றிய புராணக் கதைகளைப் புனைந்துகொண்டு, அவற்றை எழுதிவைத்துக்கொண்டதன் காரணமாக உருவானது. பின்பு மற்ற ஜனங்கள், பாகாலின் உருவங்களை ஏற்படுத்தி, அவற்றை மரத்திலிருந்து செதுக்கி வடித்தனர். ஆனால், மனித மனங்கள் கற்பனை செய்தவற்றுக்கும், மனிதக் கரங்கள் உருவாக்கியவற்றுக்கும் அப்பால், பாகாலின் வழிபாட்டில் வேறொன்றும் இருக்கவில்லை. அது, ஒரு கலையம்சப் படைப்பாய் இருந்தது. அந்தக் காரணத்தினாலேயே, அதற்கு வல்லமை ஏதுமில்லை.

இன்றைக்கு அநேக ஜனங்கள், பாகால் வழிபாடு உருவான அதே வழியிலேயே கிறிஸ்தவமும் உருவாகிவிட்டது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள், பரிசுத்த வேதாகமமும் ஒரு பண்டைய புராணப் புத்தகம் என்று கருதிக்கொள்கிறார்கள். அத்துடன் அவர்கள் அதை, மனிதக் கலாசாரத்தின் ஒரு படைப்பு என்று யுூகித்துக்கொள்வதால், அதற்கு அதிகாரம் ஏதுமில்லை என்று வலியுறுத்துகிறார்கள். அவர்கள் யுூகித்ததில் சரியாக இருந்திருந்தால், அவர்கள் தீர்மானித்ததிலும் சரியாகவே இருந்திருப்பார்கள். ஒரு கலாசாரத்தினால் உண்டாக்கப்பட்ட மதமானது, மற்றொன்றின் மீது திணிக்கப்படக்கூடாது. ஒரு தலைமுறையினரால் மட்டுமே விருப்பமாய்த் தெரிந்துகொள்ளப்பட்ட மதம், மற்றொரு தலைமுறையின் மீது திணிக்கப்படக்கூடாது. அனைத்து மதங்களுமே மனிதப் படைப்புக்களாக இருந்தால், பின்பு அவற்றுள் எதுவுமே மெய்யானது என்று சொல்லிக்கொள்ள முடியாது.

மெய்யான ஆராதனை ஏற்புடைய ஒரு பலியின்மீதே கவனம் செலுத்துகிறது

ஆனால் ஜீவனுள்ள தேவன், ஒரு கலையம்சப் படைப்பல்ல என்று எலியா அறிந்திருந்தான். ஜீவனுள்ள தேவனை அறிகிற அறிவு, தேசத்திலே மீட்டெடுக்கப்படவேண்டுமென்று அவன் ஏங்கினான். ஆகவே, அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிப்பொருளை முற்றிலும் நனைக்கும்படியாக, அதன்மேல் தண்ணீரை ஊற்றினான்.

பின்பு எலியா: “ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, நீர் தேவன் என்று . . . . இன்றைக்கு விளங்கப்பண்ணும் . . . . கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும் . . . . இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும்,” என்று ஜெபித்தான் (1 இராஜாக்கள் 18:36-37).

“அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது” (18:38). விறகுகளை மட்டுமல்லாது, கற்களையும், மண்ணையும்கூட பட்சித்ததான, அக்கினியின் தீவிர வல்லமையைக் கற்பனைசெய்துபாருங்கள்! ஜனங்களெல்லாரும் அந்த அக்கினியைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து கதறி, “கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம்,” என்றார்கள் (18:39).

அந்தக் கூட்டத்தில் ஒருவராக உங்களையே கற்பனை செய்துகொள்ள முயற்சியுங்கள். எந்தவொரு மதமும், அடிப்படையில் மற்ற மதத்தைப் போன்றதுதான் என்று, உங்கள் கலாசாரத்தில் வியாபித்திருக்கும் பொதுவான நம்பிக்கையில்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். ஆனால், எலியா ஜெபிப்பதை நீங்கள் காணும்போது, வானம் அக்கினியால் நிரம்புகிறது. எலியா, சத்தியத்தைப் பேசிக்கொண்டிருக்கிறான் என்பது சட்டென்று உங்களுக்குத் தெளிவாகிவிடுகிறது. கர்த்தரே தேவன், அத்துடன், இப்பொழுது அவரது நியாயத்தீர்ப்பின் அக்கினி விழப்போகிறது!

இந்த அற்புதமான சத்தியத்தைப் பற்றிச் சிந்தியுங்கள்: தேவனுடைய அக்கினி, பலியின் மீதுதான் விழுந்தது, ஜனங்களின் மீது அல்ல. இது, தேவனுடைய நியாயத்தீர்ப்பு இயேசுவைச் சிலுவையிலறைந்த போர்ச்சேவகர்களின் மீதோ, அவரைப் பரியாசம்பண்ணிய மக்கட்கூட்டத்தாரின் மீதோ விழாமல், நமக்காகச் சிலுவையில் பலியாக்கப்பட்ட இயேசுவின் மீதே விழுந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. பாவிகளின் மீது வரவேண்டியதான நியாயத்தீர்ப்பை, இயேசு தம் மீது இழுத்துக்கொண்டார். அது நம்மேல் விழாதபடிக்கு, அவர்மேல் விழுந்தது. தேவன், அந்த நியாயத்தீர்ப்பை நம்மிடமிருந்து இயேசுவின் பக்கமாய்த் திசைதிருப்பிவிட்டு, இவ்விதமாக நம்மைத் தம்முடன் ஒப்புரவாக்கிக்கொண்டார்.

மெய்யான ஆராதனை என்பது எப்பொழுதுமே வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்திற்கான ஒரு பிரதியுத்தரம். அது ஜீவனுள்ள தேவனை நோக்கியே வழிநடத்தப்பட்டு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைச் சுற்றியே கவனம் செலுத்தி, பரிசுத்த ஆவியானவரால் உணர்த்துவிக்கப்படுகிறது. தேவனின் சத்தியம் பறைசாற்றப்படுகிற இடத்தில், இயேசு கிறிஸ்து உயர்த்தப்படுகிற இடத்தில் மற்றும் பரிசுத்த ஆவியானவருடைய கிரியைக்குத் தேவஜனங்கள் தங்கள் வாழ்க்கையில் கீழ்ப்படிந்து நடக்கிற இடத்தில், மெய்யான ஆராதனை வளர்த்தெடுக்கப்படும்.

உங்கள் ஆராதனையில் நீங்கள் வளர விரும்பினால், உங்கள் வேதாகமத்தைத் திறந்து, தேவன் தம்மைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதில், உங்கள் மனதைச் சாரமேறவிடுங்கள். பரிசுத்த ஆவியானவர், உங்கள் இருதயத்தில் ஆராதனையைத் தூண்டி வளர்க்க, அந்தச் சத்தியத்தைப் பயன்படுத்துவார்.

கேள்விகள்

1. எதிர்காலப் பேரழிவிற்கு வழிநடத்துகிற விதைகளைத் தூவுகிற பேராபத்தில் எங்கே நீங்கள் இருக்கிறீர்கள்? துன்புறுகிற மக்களுடன் நீங்கள் தொடர்பை இழந்து வருகிறீர்களா? சொந்த சுகபோகங்களில் வழுவிப் போய்க்கொண்டிருக்கிறீர்களா? சரியானதைத் தெரிந்துகொள்வதற்குப் பதிலாகப் பிரசித்தமானதைத் தெரிந்துகொள்கிறீர்களா?

2. நீங்கள் உங்கள் போக்கை மாற்றிக்கொள்ளவில்லையென்றால், நீங்கள் செய்திருக்கும்ஃசெய்து முடிக்க விரும்பும் நன்மைகளே, உங்கள் பிற்காலத்தில் எதிர்மறையாகத் திரும்புவதைக் காணக்கூடாது என நீங்கள் வெறுக்கும், சிலவற்றைக் கூற முடியுமா?

3. கிறிஸ்தவம் எதன்மேல் நிற்கிறது அல்லது விழுகிறது?

4. பாகால் வழிபாடு உருவான விதமாகவே கிறிஸ்தவமும் உருவாக்கப்பட்டது என்று சொல்வீர்களா? ஏன் அல்லது ஏன் இல்லை?

5. எலியா ஆயத்தம் செய்த பலியின் மீது (ஜனங்களின் மீது அல்ல) தேவனின் அக்கினி இறங்கியபோது, அது இயேசுவின் சிலுவையிலே என்ன சம்பவித்தது என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது?