< முன் பகுதி




அடுத்த பாடம் >

பாவம்

2 இராஜாக்கள் 17:6-28

பாடம் 20 – பரிசுத்தம்



Download PDF

வேதவசனம்
பாடம்
கேள்விகள்
வேதவசனம்

ஏசாயா 1:1-8

1. உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.

2. சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து;

3. ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.

4. கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.

5. அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.

6. அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து,

7. அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.

8. பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.

பாடம்

தேவஜனங்கள், எவ்வாறு அவருக்கெதிராய்க் கலகம் செய்தார்கள், சிறைபிடித்துக் கொண்டுசெல்லப்பட்டார்கள், பின்பு மீண்டும் வாக்குத்தத்த பூமிக்கு அழைத்துவரப்பட்டார்கள் என்கிற கதையை நாம் தொடர்ந்து கவனித்துவருகிறோம். இந்தத் தருணங்களில் தேவன், தீர்க்கதரிசிகள் வாயிலாகத் தம் ஜனங்களிடம் பேசினார். பழைய ஏற்பாட்டின் கடைசிப் பதினேழு புத்தகங்கள், இந்தத் தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் முதலாவதாய் இருப்பது, ஏசாயாவின் புத்தகம்.

செப்டெம்பர் 11, 2001, அமெரிக்க வரலாற்றில் நிரந்தரமாகக் குறிக்கப்பட்டுவிட்ட ஒரு நாளாகும். அன்றைக்குக் காலையில், நியூ யார்க் நகரத்தில், கடத்தப்பட்ட இரு விமானங்கள், உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்களைக் குறுக்காகப் பிளந்து சென்றன. அந்தத் துயரச் சம்பவத்தின் சில மணி நேரங்களுக்குள்ளாகவே, ஊடகங்கள் எல்லாம் கிறிஸ்தவத் தலைவர்களிடம், “இச்சம்பவத்தில் கடவுள் எங்கே இருக்கிறார்? இது அமெரிக்காவின் மீதான ஒரு நியாயத்தீர்ப்பா? இது உலகத்தின் முடிவா, என்ன?” என்று கேட்டுக்கொண்டிருந்தன.

தேவன், இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நமக்குப் பதிலைத் தந்திருக்கவில்லை. எனவே, தேசம் முழுவதும் இருந்த போதகர்களெல்லாம், இந்த அசாதாரணமான நிகழ்வுடன், தேவனுடைய வார்த்தையைச் சிறப்பான விதத்தில் எவ்வாறு பொருத்திப்பாரப்பதென்று அறியும்படியாக, வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்தார்கள். ஆனால் தீர்க்கதரிசிகளுக்கோ, அது வேறு மாதிரியாய் இருந்தது. அவர்கள் தேவனுடைய ஆலோசனையில் தரித்து நின்று, அவரிடத்திலிருந்து நேரடியாக வார்த்தையைப் பெற்றுக்கொண்டார்கள். தேவன் என்ன செய்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே அவர்களால், “கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் . . .,” என்று சொல்ல முடிந்தது.

தேவனிடத்தில் அலட்சிய மனோபாவம்

தீர்க்கதரிசிகளுள் மிகச்சிறப்பாக அறியப்பட்ட ஏசாயா, ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தேவனுடைய வார்த்தையைப் பேசினார். அவரது ஊழியமானது, உசியா, யோதாம், ஆகாஸ் மற்றும் எசேக்கியா ஆகிய நான்கு ராஜாக்களின் ராஜ்யபாரத்தின்போது பரவியது (ஏசாயா 1:1).

உசியா ராஜா மரித்துப்போன ஆண்டில், ஏசாயாவுக்குத் தேவதரிசனம் அருளப்பட்டது. அதன்படி அவர் தனது வாழ்க்கையையும் ஊழியத்தையும் வடிவமைத்தார். உசியா, எருசலேமில் ஐம்பத்திரண்டு ஆண்டுகள் அரசாண்டார். அந்தக் காலக்கட்டத்தில் தேசம், செழிப்பான காலத்தை அனுபவித்தது. இது, தேவஜனங்களின் மத்தியில் ஒரு நம்பிக்கையின் உணர்வைத் தோற்றுவித்தது. அப்படி அவர்களது நம்பிக்கை வளர்ந்துவந்தபோது, அவர்கள் தேவனிடத்தில் மிகுந்த அலட்சிய மனோபாவம் உடையவர்களாக மாறினார்கள்.

தங்களது பலிகளைச் செலுத்துகிறதும், பண்டிகைகளையும், கொண்டாட்டங்களையும் அனுசரிக்கிறதுமான, பெருங்கூட்ட ஜனங்கள் ஆலயத்திற்குள் அலைமோதினர். ஆனால், அவர்களது சமயச் சடங்குகள், அவர்களுடைய வாழ்வில் பெரிய வித்தியாசம் எதையும் ஏற்படுத்தவில்லை. ஒரு காலத்தில், தேவனுடைய மகிமையால் நிரம்பியிருந்த அந்தத் தேவாலயம், இப்பொழுது வெறும் பாரம்பரியப் பெருமைகளின் அடையாளச் சின்னமாக மாறிவிட்டது. தேவன், இந்தச் சமயச் சடங்குகளால் மனம் மகிழ்வதற்குப் பதிலாகத் “தமது ஆலயப் பிராகாரங்களை மக்கள் மிதிப்பதை” அருவருப்பானதாகக் கண்டார் (1:12). ஏசாயாவின் காலத்தில் மிகப்பெரிய பிரச்சினை என்னவெனில், மக்கள் தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றிய தெளிவான பார்வையை இழந்துவிட்டனர்.

கர்த்தருடைய ஒரு தரிசனம்

தேவன், ஒரு தரிசனத்தில் ஏசாயாவிடம் பேசியபோது, ஏசாயா ஏற்கெனவே சில வருடங்களாகப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்: “உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் . . . வீற்றிருக்கக்கண்டேன்” (ஏசாயா 6:1).

தேவன் எப்படித் தோற்றமளிக்கிறார்? ஏசாயா நமக்குச் சொல்கிறார்: “[ஆண்டவர்] உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது” (6:1). அவர் சொல்வதைப் பார்த்தால், “தேவன் எனக்குத் தம்மை வெளிப்படுத்தினார். ஆனால், என்னால் அவரது முகத்தைக் காணக்கூடவில்லை. நான் உங்களுக்குச் சொல்லக்கூடியதெல்லாம், அவர் உயரமும், உன்னதமுமாய் வீற்றிருந்தார் என்பதுதான். என்னால் காண முடிந்ததெல்லாம், அவரது வஸ்திரத்தின் நுனித் தொங்கலைத்தான்,” என்று கூறுவதுபோலிருக்கிறது.

தேவனுடைய மகிமைப் பிரகாசம், பிரமிக்கவைக்கக்கூடியது. மோசே, அவரது மகிமையின் வெளிச்சத்தை நேரடியாகப் பார்க்கக்கூடாதிருந்தார். தேவனின் பாதங்களுக்குக் கீழாக இருந்தது என்ன என்பதை மட்டுமே அவரால் விவரிக்க முடிந்தது: “அவருடைய பாதத்தின்கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது” (யாத்திராகமம் 24:10).

பின்பு ஏசாயா, சேராபீன்கள் ஒருவரையொருவர் நோக்கி: “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” (ஏசாயா 6:3), என்று கூப்பிட்டுச் சொல்லுகிறதைக் கேட்டார். நீங்கள் ஒரு விஷயத்தை வலியுறுத்திச் சொல்ல விரும்பினால், அதை அடிக்கோடிடலாம்; சாய்வெழுத்துக்களில் எழுதலாம்; அல்லது தடிமனான எழுத்துருவைப் பயன்படுத்தலாம். இயேசு சொல்லும்போது செய்ததைப்போல, “மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் . . .” (யோவான் 3:3), என்று இரு முறைகள் சொல்வதன் மூலமும்கூட, நீங்கள் ஒரு விஷயத்தை வலியுறுத்தலாம்.

வேதாகமத்தில், மூன்று முறைகள் வலியுறுத்திச் சொல்லப்படும் சத்தியம் ஒன்றே ஒன்றுதான். அது தேவனுடைய பரிசுத்தமே. வேதம் ஒருபோதும் தேவனை, “கோபக்காரர், கோபக்காரர், கோபக்காரர்,” என்று சொல்வதில்லை. அல்லது தேவன், “அன்பானவர், அன்பானவர், அன்பானவர்,” என்றுகூடச் சொல்வதில்லை. ஆனால் அது தேவனை, “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்,” என்று சொல்கிறது. தேவன் யார் என்பதைக்குறித்த அடிப்படையான அம்சமே, பரிசுத்தம்தான். அவரது பரிசுத்தத்தை நாம் உணர்ந்துகொள்ளாவிடில், அவர் இருக்கிறவிதமாக அவரை நாம் அறிந்துகொள்ளவில்லை என்று ஆகும்.

பார்க்கத் தாங்க முடியாத தேவதூதர்கள்

“பரிசுத்தம் என்பது என்ன?” என்று நாம் கேட்போமாகில், அது “நெருப்பு என்பது யாது?” என்று கேட்பதைப் போன்றது. நெருப்பைப் புரிந்துகொள்ளச் சிறந்த வழி, அதன் விளைவுகளைக் கவனிப்பதுதான். அதைப்போலவே, தேவன் அருகில் வரும்போது என்ன நிகழ்கிறது என்பதைக் கவனிப்பதுதான், அவரது பரிசுத்தத்தைப் புரிந்துகொள்ளச் சிறந்த வழியாகும்.

பரலோகவாசிகளான தேவதூதர்கள், எப்பொழுதும் தேவனுடைய பிரசன்னத்தில் மிகவும் சௌகரியமாக இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தேவன் அருகில் வரும்போது, தேவதூதர்கள்கூடத் தங்கள் முகங்களை மூடிக்கொண்டதை, ஏசாயா கண்டார்.

அவர்கள் ஏன் அப்படிச் செய்யவேண்டும்? இந்தத் தேவதூதர்கள், நம்மைப்போல் பாவம் செய்யவில்லை. அவர்கள் வெட்கமடைவதற்கும் ஒன்றுமில்லை. அவர்களது முழு ஜீவியமும், தேவனுக்கு ஊழியம் செய்வதிலேயே செலவிடப்படுகிறது. தேவதூதர்களான இந்தச் சிருஷ்டிகள், தங்களது சிருஷ்டிகரின் பிரசன்னத்தில் மிகுந்த அச்சநடுக்கம்கொண்ட காரணத்தினால், தங்கள் முகங்களை மூடிக்கொள்கின்றனர். நீங்கள் பரிபூரணமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து, அதன் பின்னர் தேவனுடைய சமூகத்திற்குள் பிரவேசித்தாலும்கூட, நீங்கள் உங்கள் சிருஷ்டிகரின் மகிமையின் முன்னிலையில் ஒரு சிருஷ்டியாக, அச்சத்துடனும், திகைப்புடனும், பிரமித்துக் காணப்படுவீர்கள்.

நிர்மூலமாகுதல்

தேவன் அருகில் வந்தபோது, வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது (ஏசாயா 6:4). ஏசாயா, “ஐயோ! அதமானேன் . . .,” என்றார் (6:5). ‘அதமானேன்’ என்னும் சொல்லுக்கு, ‘நிர்மூலமானேன்’ என்பது பொருள். ஒருவர், தாம் செய்யும் காரியங்களில் திறமையானவராகவோ, வெற்றிகரமானவராகவோ திகழும்போது, அவர் எல்லாவற்றையும் கற்றுத் தேறினவரென்று, சிலவேளைகளில் நாம் சொல்வோம். ஏசாயா அதற்கு எதிர்மறையானதை அனுபவித்தார். தேவனைக் கண்டபோது, ஏசாயா நிர்மூலமானவராகக் காணப்பட்டார்.

ஏசாயா, அவரது காலத்தின் மிக மதிப்பிற்குரிய மக்களுள் ஒருவராயிருந்தார். அவர், தனது அற்புதமான ஊழியத்தினிமித்தம், நன்கு அறியப்பட்டும் கொண்டாடப்பட்டும்வந்தார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அவர் இன்றைய காலக்கட்டத்தைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், மாநாடுகளில் அவர் பேசுவதைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டமாய்த் திரண்டிருப்பர். டுவிட்டரில் அவரைத் தொடர்வோர் இலட்சக்கணக்கில் இருப்பார்கள். ஆனால், தேவனுடைய பிரசன்னத்தில் அவரால் சொல்ல முடிந்ததெல்லாம், “ஐயோ!” என்பதுதான். தேவனுடைய பரிசுத்தமானது, மிகச்சிறந்த நபர்களைக்கூட அதமானதாக உணரச் செய்கிறது.

ஒரு தீர்க்கதரிசியாக, ஏசாயாவினுடைய உதடுகளே அவரது ஊழியத்தின் கருவிகளாயிருந்தன. பேச்சுத் திறன், அவரது ஆவிக்குரிய வரமாகும். ஆனால், தேவனுடைய பிரசன்னத்தில், அவரது மிகச்சிறந்த வரத்தைக்கூடச் சுத்திகரிக்கப்படவேண்டிய ஒன்றாக அவர் உணர்ந்தார்: “நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்,” என்றார் (6:5). நீங்கள் தேவனுடைய பரிசுத்தத்தை உணரும்போது, சுத்திகரிக்கப்படவேண்டியவை உங்களிடத்திலுள்ள மிக மோசமானவை மட்டுமல்ல, மாறாக, உங்களிடத்திலுள்ள மிகச்சிறந்தவைகளுங்கூடத்தான் என்பதை உணர்வீர்கள்.

தேவனுடைய இரக்கத்தினால் தொடப்படுதல்

தேவமகிமையை ஒரு கணப்பொழுது தரிசித்தபின்பு, ஆலயம் புகையினால் நிறைந்தபடியினால், ஏசாயா இருளுக்குள் மூழ்கிப்போனார். அவர், தேவபிரசன்னத்தைக்குறித்த உணர்வுடன்தான் இருந்தார். ஆனால், தேவன் அவரது பார்வையிலிருந்து மறைக்கப்பட்டிருந்தார். அதன்பின்பு, ஆலயத்தின் அஸ்திபாரங்கள் அசையத் தொடங்கின. அது நிச்சயமாய்ப் பயங்கரமானதாக இருந்திருக்கவேண்டும்.

பின்பு, ஏசாயா புகையினூடே உற்று நோக்கியபோது, தேவதூதர்களில் ஒருவர், அவர் கையில் பலிபீடத்திலிருந்து எடுக்கப்பட்ட நெருப்புத்தழலை ஏந்திக்கொண்டு, தன்னை நோக்கிப் பறந்து வருகிறதைக் கண்டார். அந்தத் தூதன், எரிகின்ற அந்த நெருப்புத் தழலினால் ஏசாயாவின் உதடுகளைத் தொட்டு: “இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது,” என்றான் (ஏசாயா 6:7).

பலிபீடமானது, பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டுவந்த இடமாகும். ஆகவே, பலிபீடத்திலிருந்து நெருப்புத்தழல் ஏசாயாவினிடத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது, பாவநிவிர்த்திக்கான தேவனுடைய ஒரு ஏற்பாடு, அவர் மீது தனிப்பட்டவிதத்தில் பயன்படுத்தப்பட்டது. அதிலும், ஏசாயா எப்பகுதியில், தனது சொந்தத் தேவையை மிக ஆழமானவிதத்தில் அறிந்திருந்தாரோ, அங்கேயே அது பயன்படுத்தப்பட்டதைக் கவனியுங்கள். ஏசாயா, “நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்,” என்று அறிக்கையிட்டார். இப்பொழுதோ, தேவனின் தூதனானவர், “இதோ, இது உன் உதடுகளைத் தொட்டது் உன் அக்கிரமம் அகற்றப்பட்டது,” என்று சொன்னார்.

இப்படி, ஆழமானதும், தனிப்பட்டதுமானவிதத்தில், தேவனுடைய கிருபையைக் கண்டடைந்ததால் ஏசாயா, ஆண்டவருக்கு ஊழியம் செய்யப் புதியதொரு விதத்தில் ஆயத்தத்தோடிருந்தார். தேவன், “யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்?” (6:8), என்று கேட்டபோது, ஏசாயா, “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்,” (6:8) என்று பதிலுரைத்தார். எனவே தேவன், ஏசாயாவை அனுப்பினார்.

அது, “நீ போ, ஏசாயா, ஏனெனில் நான் யாரென்று நீ புரிந்துகொண்டாய். மேலும், பாவம் என்பது என்னவென்றும் நீ அறிந்திருக்கிறாய். அத்துடன், நீ எனது கிருபையையும் அனுபவித்திருக்கிறாய்,” என்று தேவன் சொன்னதைப் போன்றிருந்தது. தேவனுக்கு ஊழியம் செய்வதன் சிலாக்கியத்தைக்குறித்த புதிய உணர்வினால் நிறைந்தவராய் ஏசாயா, அவரைப் பற்றி அறிவிப்பதற்குப் புறப்பட்டுப் போனார்.

தேவனுடனான ஏசாயாவின் இந்தச் சந்திப்பு, நமக்கு இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையைச் சுட்டிக்காட்டுகிறது. யோவான், “ஏசாயா அவருடைய (இயேசுவின்) மகிமையைக் கண்டு, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்” (யோவான் 12:41), என்று நமக்குக் கூறுகிறார். பிதாவும், குமாரனும் ஒரே மகிமையில் பங்குள்ளவர்களாயிருக்கிறார்கள் (யோவான் 17:5). ஏசாயா யாருடைய மகிமையைக் கண்டாரோ, அந்தப் பரிசுத்தரானவர், சிலுவையின் பலிபீடத்தில் வைக்கப்பட்டு, நமது பாவங்களுக்காகப் பலியானார்.

ஏசாயா, ஆலயத்தில் இருளால் சூழப்பட்டதுபோல, இயேசுவும் சிலுவையின்மேல் அந்தகாரத்துக்குள் மூழ்கடிக்கப்பட்டார் (மத்தேயு 27:45). தேவனின் பிரசன்னம் இறங்கிவந்தபோது ஆலயத்தின் அஸ்திபாரங்கள் அசைந்ததைப்போலவே, இயேசு தமது ஜீவனை ஒப்புக்கொடுத்தபோதும், பூமி அசைந்து, கன்மலைகள் பிளந்தன (மத்தேயு 27:51). கிறிஸ்து உலகத்தின் பாவங்களைச் சுமந்து, பிதாவானவர் தமது நியாயத்தீர்ப்பைக் குமாரனின் மீது ஊற்றியபோது, பூமி அதிர்ந்தது.

நம்மைப்போல் தேவனின் பரிசுத்தத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள், அவரது கிருபையால் தொடப்பட்டுக் குணமாக்கப்படவே இயேசு மரித்தார். கிறிஸ்து இயேசுவின் மூலம், தேவன் நம் அருகில் வந்து, “உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது,” என்று சொல்கிறார்.

தேவன், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர். அவரது குணாதிசயத்திற்கு அவருடைய பரிசுத்தமே அடிப்படையாயிருக்கிறது. ஏசாயாவின் நாட்களில், ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயத்திற்குள் திரண்டுவந்தார்கள். ஆனால், தேவனைக்குறித்த அனுபவம் ஏதும் அவர்களுக்கில்லை. காலப்போக்கில் இத்தகைய ஆராதனையானது, சலிப்பூட்டுவதாகிவிடுகிறது. அதுபோல், தேவனைச் சலிப்பூட்டுகிற ஒருவராக நீங்கள் நினைத்தால், வேதாகமத்தின் தேவனை நீங்கள் ஒருபோதும் சந்தித்ததே இல்லை என்று அர்த்தம்.
பாவமானது, பரிசுத்தராயிருக்கிற ஒரு தேவனுக்கு எதிரான குற்றமாயிருக்கிறது. அதற்கு ஒரு பரிகாரம் தேவைப்படுகிறது. இல்லாவிட்டால், தேவனுடைய பிரசன்னத்தில் பாவிகள் நிர்மூலமாக்கப்படுவார்கள். சுவிசேஷத்தின் நல்ல செய்தி என்னவெனில், தேவகுமாரனாகிய இயேசு, நம் அனைத்துப் பாவங்களையும் பரிகரித்த பலியாக ஆனதனால், பரிசுத்தரான ஒரு தேவனின் நியாயத்தீர்ப்பைத் திருப்திசெய்தார் என்பதேயாகும்.
தேவனின் பிரமிக்கத்தக்க பரிசுத்தத்தை நீங்கள் கண்டுகொள்ளும்போது, ஏசாயாவைப்போல, நீங்களும், இயேசு கிறிஸ்துவில் தேவன் உங்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்கிற அற்புதத்தைப் பாராட்டிக் கொண்டாடத் தொடங்குவீர்கள். அப்பொழுது நீங்கள், உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமே, இந்தப் பிரமிக்கத்தக்க, மகிமையான, பரிசுத்தத் தேவனுக்கு ஊழியம் செய்வதுதான் என்பதை உணர்வீர்கள்.

கேள்விகள்

1. தேவனிடத்தில் “அலட்சிய மனோபாவம்” கொண்டிருப்பது என்பதற்கு என்ன பொருள்? இப்படிப்பட்ட ஏதாவதொன்றை உங்களது சொந்த வாழ்வில் நீங்கள் கண்டிருக்கிறீர்களா?

2. பரிசுத்தம் என்பது என்ன? தேவனுடைய பரிசுத்தத்தை, வேறொருவருக்கு நீங்கள் எப்படி விவரித்துச் சொல்வீர்கள்?

3. தேவனுடைய பரிசுத்தத்தை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் அல்லது இல்லை என்பதை நீங்கள் எப்படி அறிந்துகொள்வீர்கள்? நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்களா? ஏன் அல்லது ஏன் இல்லை?

4. தேவனுடனான, ஏசாயாவின் சந்திப்பைப் பற்றி மிகவும் குறிப்பிடத்தக்கதாக உங்களுக்குத் தோன்றுவது எது?

5. உங்களுடைய வாழ்க்கையில் மிக முக்கியமாகச் சுத்திகரிக்கப்படத் தேவையான ஒரு பகுதியைக்குறித்து நீங்கள் சிந்திப்பீர்களா? தேவனுடைய ஆவியானவர் இயேசுவின் பலியிலிருந்து பாயும் கிருபையை, நீங்கள் இருக்கும் இடத்துக்கே கொண்டுவந்து, உங்களது பாவம் நிவிர்த்தி செய்யப்பட்டு, உங்களது குற்றம் அகற்றப்படும்பொருட்டு, உங்களைத் தொடுகிறார்.