< முன் பகுதி




அடுத்த பாடம் >

பாவம்

2 இராஜாக்கள் 17:6-28

பாடம் 21 – ஊழியன்



Download PDF

வேதவசனம்
பாடம்
கேள்விகள்
வேதவசனம்

ஏசாயா 53:1-12

1. எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?

2. இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.

3. அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.

4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

7. அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

8. இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.

9. துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.

10. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

11. அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.

12. அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

பாடம்

தேவன், தமது ஆசீர்வாதம் தேசங்களின் மீது வரும் என்று வாக்குத்தத்தம்பண்ணியிருந்தார். ஆனால், ஆபிரகாமின் காலத்திலிருந்து ஆயிரத்து முந்நூறு ஆண்டுகள் சென்றபின்பு, பெரிய அளவிலான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. தேவன், தமது ஜனங்களை ஆசீர்வதித்தார். ஆனால், அவர்கள் பிற தேவர்களின் பக்கமாய்த் திரும்பிவிட்டனர். இப்பொழுதோ, அவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குக் கீழாகத் தாங்களாகவே வந்துகொண்டிருந்தனர். ஆகவே, தேவனின் ஆசீர்வாதம் தேசங்களின் மீது வருவதுகுறித்து இருந்த நம்பிக்கைதான் என்ன?

இந்தியாவின் ரிஷிகேஷ் பகுதியை, முதன்முதலில் கண்ட, மறக்க முடியாத தனது அனுபவத்தை, ஒரு போதகர் இவ்விதமாகக் கூறுகிறார். அங்கே சிங்கங்கள், குரங்குகள் மற்றும் பாம்புகளின் உருவங்களில் வடிவமைக்கப்பட்ட விக்கிரகங்களால் நிறைந்து, தெருக்கள் காணப்பட்டன. இங்குதான், பீட்டல்ஸ் இசைக்குழுவினர் ஆன்மீக அர்த்தம் தேடி, அறுபதுகளில் வந்திருந்தனர். அந்தப் பகுதி தேவபிரசன்னத்தை இழந்துபோனதாக, அந்தப் போதகருக்குக் காணப்பட்டது. அவர் அந்தப் பட்டணத்திற்குள் நடந்துசென்றபோது, ‘தேவனின் சித்தம் இங்கு நிறைவேற்றப்பட என்ன செய்யப்படவேண்டும்?’ என்ற கேள்வி அந்தப் போதகருக்குள் எழுந்தது.

பட்டணத்தின் கவர்ச்சிகரமற்ற குடிசைப்பகுதி அல்லது கல்லூரி வளாகம் அல்லது வளர்ந்துவரும் புறநகர்ப்பகுதி போன்ற இடங்களிலும், இதே கேள்வி அந்தப் போதகரின் மனதில் தோன்றுகிறது. ஏசாயாவின் நாட்களிலும் இதில் எந்த வித்தியாசமும் இல்லை. தேவனின் சித்தம் நிறைவேற்றப்பட என்ன செய்யப்படவேண்டும்?

தேவனின் சித்தத்தை நிறைவேற்றுகிற ஒருவர்

தேவனின் பதில், “இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன் …” (ஏசாயா 42:1), என்பதாகும். ஒரு தாசன் அல்லது ஊழியன் என்பவர், தனது எஜமானின் விருப்பத்தை நிறைவேற்றுகிற ஒருவராவார். நீங்கள் ஓர் வேலைக்காரராயிருந்தால், உங்கள் வேலை மிகவும் எளிமையானது: உங்கள் எஜமான் உங்களிடம் என்னவெல்லாம் சொல்கிறாரோ, அதையெல்லாம் நீங்கள் செய்வீர்கள்!

ஆகவே, தேவன் தமது ஊழியரை அறிமுகப்படுத்தும்போது, அவர், “இந்த உலகத்தில் எனது சித்தத்தை நிறைவேற்றுகிற நபரைப்பற்றி நான் உங்களுக்குச் சொல்கிறேன்,” என்று சொல்கிறார். தேவனுடைய ஊழியரைப்பற்றிய அவரது வார்த்தைகள், அவரது சித்தத்தை நிறைவேற்றுகிற ஊழியத்தின் தன்மையைப்பற்றியும், அவர் தமது ஆசீர்வாதத்தை உலகிற்குக் கொண்டுவரப் பயன்படுத்தும் நபரின் தன்மையைப்பற்றியும் ஒரு மாதிரியை நமக்குத் தருகிறது.

தேவனின் ஊழியர், குறிப்பிடத்தக்கச் சிலாக்கியங்களைப் பெற்றிருக்கிறார்: “இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே் என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்் அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்” (42:1).

ஊழியரானவர், தெரிந்துகொள்ளப்பட்டவரும், பிரியமானவரும், அபிஷேகிக்கப்பட்டவரும், நிலைவரமானவருமாய் இருக்கிறார். அவரது அழைப்பு, உலகிற்கு நியாயத்தைக் கொண்டுவருகிறதாய் இருக்கிறது. நியாயம் என்பது, சட்டப்புூர்வமான நீதிமன்றங்களில் சரியான தீர்ப்புகளைப் பெறுவதைவிடவும் மேலானது. ஊழியரின் பணியானது, காரியங்களைச் சீர்ப்படுத்துவதும், அவை இருக்கவேண்டிய வகையில் – ஊழலோ, வஞ்சகமோ, சுரண்டலோ இல்லாதபடி – அவற்றை அமைப்பதும் ஆகும்.

எந்த மதிப்பீட்டளவின்படியும், தேசங்களுக்கு நியாயத்தை வழங்குவதென்பது, ஓர் அசாதாரணமான சாதனையாகவே இருக்கும். இதை யார் நிறைவேற்ற முடியும்? இது எப்படி நிறைவேற்றப்பட முடியும்? இந்த உலகிற்கு நியாயத்தைக் கொண்டுவரும் பணி உங்களுக்குத் தரப்பட்டிருந்தால், நீங்கள் எங்கே தொடங்குவீர்கள்? நீங்கள் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தி, ஒரு கல்வித் திட்டத்தை முன்னெடுத்து, அல்லது திருமணச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி, வீதிகளில் இராணுவத்தை நிறுத்துவீர்களா? தேவனின் ஊழியர் இவற்றுள் எதையும் செய்யமாட்டார். ஆனால், நமக்கு, “அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்” (42:2), என்று கூறப்படுகிறது.

தேவனின் ஊழியர், தன்னையே முன்னிலைப்படுத்திக்கொள்ளமாட்டார். அவர், மற்ற அனைவர்மேலும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும்படியான ஒரு நபராக இருக்கமாட்டார். அவர் கூச்சலிடமாட்டார். சொல்லப்போனால், அவரைப்பற்றிய தனிச்சிறப்புவாய்ந்த விஷயமே, அவரது ஊழியத்தின் அமைதியான போக்குதான். தேவசித்தமானது, தங்களது சொந்த விருப்பப் பட்டியலை முன்னெடுக்கின்ற, கோபமான மக்களால் நிறைவேற்றப்படுவதில்லை. மாறாக, பிறரது நன்மையை நாடுகின்ற, தயவு நிறைந்த மக்களாலேயே நிறைவேற்றப்படுகிறது.

மனதுருக்கத்தின் வல்லமை

கண்கவர் திட்டங்களை நிறைவேற்றுவதில் வல்லவராக விளங்கும் ஒரு நபரின் மூலமாகவோ, பிரபலங்களின் கவர்ச்சி மூலமாகவோ, இவ்வுலகில் தேவனின் சித்தம் நிறைவேற்றப்படுவதில்லை. ஊழியரின் பாணி, இதில் முற்றிலும் வித்தியாசமானதாயிருக்கிறது: “அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்” (42:3).

ஒரு நாணல் வளையும்போது, அது வழக்கமாகக் காலின்கீழ் மிதிபடும். ஒரு மெழுகுவர்த்தி மங்கி எரியும்போது, அதை நீங்கள் அணைத்துவிட்டு, மற்றொன்றை ஏற்றுகிறீர்கள். ஆனால் தேவனோ, தமது ஊழியர் அப்படிச் செய்யமாட்டார் என்று சொல்கிறார். அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார்; மங்கி எரியும் திரியை அணைக்கமாட்டார்.

ஒருவேளை, நெரிந்த நாணலுடன் நீங்கள் உங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம். நீங்கள் மிதிக்கப்பட்டுக் கிடந்து, உங்களால் தாங்கமுடியாததென்று தோன்றுமளவுக்கு நசுக்கும் பாரத்தின் கீழ், எழமுடியாமல் சிரமப்படுகிறீர்கள். அல்லது ஒருவேளை, அணையப்போகும் மெழுகுவர்த்தியின் படத்துடன் தொடர்புபடுத்திக்கொள்ளலாம். ஒரு காலத்தில், உங்களது விசுவாசம் பிரகாசமாய்ச் சுடர்விட்டது. ஆனால் இப்பொழுதோ, உங்களிடம் எண்ணெய் தீர்ந்துவிட்டது. உங்களுக்குள் இருந்த பொறுமை, நம்பிக்கை மற்றும் அன்பு ஆகிய, உங்களது உள்ளான ஆதாரங்கள் அனைத்துமே மெலிதாகத்தான் எரிகின்றன. உங்களுக்குள் இருக்கும் வெளிச்சமானது, அணையக்கூடிய நிலையில் விட்டுவிட்டு எரிகின்றது.

உடைக்கப்பட்டவர்களும், நொறுக்கப்பட்டவர்களும், எரிந்து, அணைந்துபோனவர்களுமான மக்கள், கூச்சலிட்டுப் பேசும், ஆடம்பரக் காட்சியாளர்களிடத்தில் ஒருபோதும் ஈர்க்கப்படமாட்டார்கள். தேவசித்தத்தை நிறைவேற்றும் ஊழியரானவர், காயப்பட்டுச் சோர்ந்துபோன மக்களின் வாழ்க்கையை மனதுருக்கத்தோடு தொடுகிறதான அமைதியானதொரு ஊழியத்தை உடையவராயிருக்கிறார்.

சவாலின் அளவீடு

தேவன் தமது ஊழியரை, நொறுக்கப்பட்டவர்களும், உடைக்கப்பட்டவர்களுமாய் இருப்பவர்களிடம் மட்டும் அனுப்பாமல், பார்வையற்றவர்களும், கட்டப்பட்டவர்களுமானவர்களிடமும் அனுப்புகிறார். ஆகவே ஊழியரானவர், திகைப்புூட்டும் ஒரு மாபெரும் சவாலைச் சந்திக்கிறார். அவர், “குருடருடைய கண்களைத் திறக்கவும்” மற்றும் “கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும் … சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்” வேண்டியிருக்கிறது (42:7).

ஜனங்கள், ஆவிக்குரிய பார்வையுடையவர்கள் என்னும் தகுதி பெற்றிருந்தால், இந்த உலகத்திற்குச் சுவிசேஷத்தின் நல்ல செய்தியைப் பாயச்செய்வது, ஓரளவுக்குச் சுலபமாயிருக்கும். ஜனங்கள், உடனடியாகத் தங்களது தேவையை அறிந்து, கிறிஸ்துவிடம் வந்துவிடுவார்கள். ஆனால், தேவனின் ஊழியர் சந்திக்கும் பிரச்சினை என்னவெனில், அவர் தேவனுடைய மகிமையை விவரிக்கும்போதும்கூட, அவரைக் கேட்பவர்கள், அந்தச் சத்தியத்துக்குக் குருடராயும், அதற்குக் கீழ்ப்படிவதற்குத் தகுதியற்றவர்களாயும் இருக்கிறார்கள்.

பாவம், தெரிந்தெடுக்கப்படும் ஒரு செயலாக மட்டும் இருக்குமானால், ஜனங்களை மேம்பட்டதொரு செயலைத் தெரிந்தெடுக்கச் செய்யும்படிக்கு, அவர்களுக்குக் கற்பிப்பது ஓரளவுக்குச் சுலபமாய் இருக்கும். ஆனால் பாவமானது, நம்மைக் கட்டிப்போடும் ஒரு சக்தியாகும். பரிசுத்த ஆவியானவரின் இந்தக் கிரியையைத் தவிர, நாமனைவருமே ஒரு கலைக்கூடத்தில் பார்வையற்றவர்கள்போல், அல்லது ஒரு வெப்பமண்டலத் தீவில் சிறைக்கைதிகள்போல் இருக்கிறோம்.

இந்த வரையறைக்குப் பொருத்தமானவர் யார்?

தேவன், முதலாவது தமது ஊழியரைப்பற்றிப் பேசியபோது, அவர் இஸ்ரவேலைப்பற்றிப் பேசியதாக ஏசாயாவுக்குத் தோன்றியிருக்கவேண்டும்: “என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே, நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், … என்று சொன்னேன்” (41:8-9).

தேசங்களினிடையே தேவனுடைய ஊழியரின் பங்கை நிறைவேற்றும்படியாகத் தேவஜனமாகிய இஸ்ரவேலர், அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு, தேவனுடைய சத்தியம், நியாயப்பிரமாணம் மற்றும் பலிகள் ஆகியவை வழங்கப்பட்டிருந்தன. தேவனுடைய ஆசீர்வாதம் இந்த உலகிற்கு வருவதற்குரிய வழியாகத் தேவஜனங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தார்கள்.

ஆனால், தேவஜனங்களால், அவர்களது அழைப்பிற்கு ஏற்றபடியான வாழ்வில் நிலைக்க முடியவில்லை. ஊழியர், பார்வையற்றோர்க்குக் கண்களைத் திறந்துவிடவேண்டியவராய் அழைக்கப்பட்டார். ஆனால் தேவன், “என் தாசனையல்லாமல் குருடன் யார்? … இந்த ஜனமோ … கெபிகளிலே அகப்பட்டு, காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்” (42: 19-22), என்று சொன்னார். மற்றவர்களுக்குப் பார்வையையும், விடுதலையையும் கொண்டுவரவேண்டியவர்களாயிருந்த மக்கள், தாங்களே பார்வையற்றோராயும், கட்டுண்டவர்களாயும் மாறிவிட்டார்கள்.

ஏசாயா, அந்த ஊழியராக இருக்கக்கூடுமா?

தேவனுடைய ஊழியரின் பங்கை நிறைவேற்றுகின்ற நிலையில் இஸ்ரவேல் இல்லை என்பது தெளிவாகிவிட்டதால், தேவசித்தத்தை நிறைவேற்றுகின்ற வழியாக ஏசாயா இருந்திருக்கக்கூடுமா? ஏசாயாவினிடத்தில் நேரடியாகத் தேவன் பேசும்போது, “நீ என் தாசன்் இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன்” (49:3), என்று சொன்னார். தேவன், தேசங்களுக்கு வெளிச்சமாயிருக்கும்படி இஸ்ரவேலை அழைத்தார். ஆனால், இஸ்ரவேல் தவறிவிட்டது. ஆகவே, தேவன் ஏசாயாவிடம், “நீதான் இஸ்ரவேல். நீ என் தாசன்,” என்று சொன்னார். ஆனால், தேவனின் ஆசீர்வாதம் உலகிற்கு வரும் வழியாயிருப்பதற்கு, ஏசாயாவால் எப்படி முடியும்?

அது தனக்கு மிஞ்சின காரியம் என்று ஏசாயா அறிந்திருந்தான். “விருதாவாய் உழைக்கிறேன்” (49:4), என்று அவன் சொன்னபோது, அவன், “எனது சின்னஞ்சிறு ஊழியம், ஊழியரின் பங்கை நிறைவேற்றக்கூடும் என்பது எவ்வளவும் சாத்தியமேயில்லை,” என்ற அர்த்தத்தில்தான் சொன்னான்.

ஆனால் தேவன் அதற்கு மேலும் சென்றார்: “யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், … நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது் நீர் புூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன்” (49:6). இது சாத்தியமேயில்லாத ஓர் இலக்கு! எந்தத் தீர்க்கதரிசியும், இதை ஒருபோதும் சாதித்ததில்லை அல்லது அருகாமையில்கூட நெருங்க முடியவில்லை. ஆகவே, யார்தான் ஊழியரின் அழைப்பை நிறைவேற்றி, தேவசித்தத்தைச் செய்ய முடியும்?

யார் அதை விசுவாசிப்பார்கள்?

தேவன், இந்த உலகிற்கு அன்பு, நீதி, வெளிச்சம் மற்றும் இரட்சிப்பைக் கொண்டுவரப்போகிற நபரை வெளிப்படுத்தியபோது, ஏசாயா மிகுந்த தடுமாற்றத்துக்குள்ளாகி, தான் கண்டதை யாருமே நம்பமாட்டார்கள் என்று பயந்தான். “எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?” (53:1). அதாவது, “நான் கண்டதை உங்களிடம் கூறினால், நீங்கள் அதை நம்பமாட்டீர்கள்,” என்று ஏசாயா கூறினான்.

ஏசாயாவால் ஜீரணித்துக்கொள்ள முடியாத ஒரு விஷயம் என்னவென்றால், தேவனின் சித்தத்தை நிறைவேற்றுகிறவராயிருக்கிற ஊழியரானவர், அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவருமாயிருந்தார் என்பதைத்தான். வன்முறை அவர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது. மேலும் அந்த ஊழியரானவர், காண்போர் தங்கள் கைகளால் முகத்தை மறைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு, உருக்குலைந்துபோயிருந்தார். அவரைப் பார்ப்பதையே அவர்களால் சகிக்க முடியவில்லை.

தேவஆசீர்வாதத்தின் நம்பிக்கை யார்மேல் சார்ந்திருக்கிறதோ, அந்த ஊழியரானவருக்கு நிகழப்போவதைக் கண்டபோது, ஏசாயா அமைதியின்றி, நெளிந்திருக்கவேண்டும்: “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது் அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (53:5).

பின்பு தேவன், “கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, …” (53:10), என்று, ஏசாயாவை மூச்சுத்திணறவைக்கக்கூடிய ஒரு காரியத்தை, அவனிடம் கூறினார். கர்த்தருடைய தாழ்மையுள்ள, மனதுருக்கமுள்ள ஊழியரின் மீது, பாடுகளைச் சுமத்துவது, எப்படித் தேவனுடைய சித்தமாயிருக்க முடியும்? தேவனின் ஊழியர், தவறிவிடுவார் என்று இதற்கு அர்த்தமா? ஏசாயா, குழம்பிப்போயிருக்கவேண்டும். ஆனால் தேவன், “கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்” (53:10), என்று சொன்னார். தேவனின் ஊழியர், தேசங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவருவார். அது, அவரது பாடுகள் மற்றும் மரணத்தின் மூலமாகவே வரும்.

புதிய ஏற்பாட்டில் இயேசு, சாந்தமும், மனதுருக்கமும் உள்ள தேவ ஊழியராகத் தெளிவாக அடையாளப்படுத்தப்படுகிறார். அவரது ஊழியம், ஏசாயாவால் உரைக்கப்பட்டதை நிறைவேற்றியது: “இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார். வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை. அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள்” (மத்தேயு 12:18-21). இயேசு, பார்வையற்றிருக்கும் நமது கண்களைத் தேவனை அறிகிறதற்குத் திறந்துவிட்டு, நம்மைக் கட்டிவைத்திருக்கும் பாவத்தின் வல்லமையிலிருந்து நம்மை விடுவிக்கிறார். நொறுக்கப்பட்டும், உடைக்கப்பட்டும், தள்ளாடிக்கொண்டும் இருக்கின்றவர்களிடத்தில், அவர் மனதுருக்கமுள்ளவர் என்று அறிந்து, நீங்கள் அவரை நாடி வரலாம்.

தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிற ஊழியர், இயேசு கிறிஸ்துவே. அவர் தம் சீஷர்களிடம், "பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்" (யோவான் 20:21), என்று சொன்னார். இயேசுவை அறிந்திருப்பவர்கள், உடைக்கப்பட்ட இந்த உலகிற்குள் சென்று, கிறிஸ்துவின் மனதுருக்கத்தை வெளிப்படுத்தவேண்டும். இயேசுவை அறியாத மக்கள், அவர் அளிக்கும் விடுதலையை அனுபவிக்கும்பொருட்டு, இயேசுவில் தேவன் என்ன செய்திருக்கிறார் என்கிற சத்தியத்தை நாம் பறைசாற்றவேண்டியவர்களாய் இருக்கிறோம்.
கிறிஸ்து தமது ஊழியர்களை, பூமியின் சகல தேசங்களுக்கும் அனுப்புகிறார். அவர் நாமத்தினால் நாம் ஊழியம் செய்யும்போது, தேவனுடைய ஆசீர்வாதம் அநேக ஜனங்களின் மீது வரும். அதனால் கிறிஸ்துவும், தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்.

கேள்விகள்

1. ஊழியன் என்பவர் யார்? உங்களை நீங்கள், தேவனுடைய ஊழியர் என்று கருதுவீர்களா?

2. தமது ஊழியங்கள் மனதுருக்கத்தின் மூலமாகவே செய்யப்படவேண்டும் என்று, தேவன் தெரிந்துகொள்வது ஏன் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

3. தேவனுடைய ஊழியத்தைச் சவால் மிகுந்த ஒன்றாக ஆக்குவது குறிப்பாக எது?

4. ஊழியரைப்பற்றி ஏசாயா விவரித்தவற்றுள், உங்களை மிகவும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது எது?

5. இந்த ஊழியர், எந்த வழியில் தேவனுடைய ஆசீர்வாதத்தை உலகிற்குக் கொண்டுவருகிறார்?