< முன் பகுதி
அடுத்த பாடம் >

பாவம்

2 இராஜாக்கள் 17:6-28

பாடம் 22 – அழைப்புDownload PDF

வேதவசனம்
பாடம்
கேள்விகள்
வேதவசனம்

ஏசாயா 55:1-13

1. ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.

2. நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.

3. உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.

4. இதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜனங்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன்.

5. இதோ, நீ அறியாதிருந்த ஜாதியை வரவழைப்பாய்; உன்னை அறியாதிருந்த ஜாதி உன் தேவனாகிய கர்த்தரின் நிமித்தமும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் உன்னிடத்திற்கு ஓடிவரும்; அவர் உன்னை மேன்மைபடுத்தியிருக்கிறார்.

6. கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

7. துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.

8. என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.

9. பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.

10. மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,

11. அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.

12. நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள்; பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.

13. முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.

பாடம்

இரட்சிப்பு, ஓர் இலவசப் பரிசாகும். ஆனால், இயேசு நம்மை, "வந்து, வாங்கி… கொள்ளுங்கள்" (ஏசாயா 55:1), என்று அழைக்கிறார். அவர், 'வாங்கிக்கொள்ளுங்கள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார், காரணம், கிறிஸ்து வழங்குவதை நீங்கள் பெற்றுக்கொள்வதில், நிச்சயமாக ஒரு கொடுத்தல்-வாங்குதல் அடங்கியிருக்கிறது. என்னதான் நீங்கள் கட்டணம் ஏதும் செலுத்தாவிடினும், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளவேண்டும். மேலும், இந்தப் பரிவர்த்தனை நிகழாவிடில், கிறிஸ்து உங்களுக்கு வழங்குவது, அங்கேயே எப்பொழுதும்போல, அந்த விற்பனையகத்திலேயே இருக்கும். 

ஒரு போதகரும், அவரது மனைவியாகிய கேரனும் வசித்துவந்த, வடக்கு இலண்டனிலுள்ள பட்டணத்தில், வாரந்தோறும் வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகள் சந்தை கூடும் நாட்களாகும். பணியாளர்கள், காலை ஆறு மணியளவில் வந்து, கடைகளுக்கான சாரங்கட்டுதல் மற்றும் பந்தல்களை அமைப்பதில் ஈடுபடுவார்கள்.

அங்கே, பழங்கள் மற்றும் கறிகாய்களுக்கான கடைகளும், சாமான்கள் வைப்பதற்கான அடுக்குகளும், ஆடை விற்பனைக் கூடங்களும் இருந்தன. மேலும் அங்கே, தூசகற்றும் கருவிகளுக்கான உதிரிப் பாகங்களை விற்பதைத் தவிர வேறொன்றும் செய்யாத, வினோதமாகக் காணப்பட்ட ஒரு மனிதனும் இருந்தான். அந்த இடம் எப்பொழுதுமே, நல்ல பேரம் தேடும் மக்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.

தேவன், நமக்குத் தாம் வழங்கும் நம்பமுடியாத சலுகையை விவரிக்கச் சந்தைவெளியின் சித்திரிப்பைப் பயன்படுத்துகிறார்: “ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்” (ஏசாயா 55:1).

நூற்றாண்டுகள் பல கடந்த பின்னர், இயேசு இந்த வார்த்தைகளை எடுத்துத் தமக்கே அவற்றைப் பொருத்திப் பேசுகிறார். அவர், “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்” (யோவான் 7:37), என்று சொன்னார். இங்கே தெரு வியாபாரி, தேவகுமாரனே! அவர், உங்கள் ஆத்துமாவிற்குள் இருக்கும் ஆழ்ந்த தாகத்தைத் திருப்தி செய்வதாக அழைக்கிறார்.

இயேசுவின் அழைப்பானது, கடந்து செல்கிறது. ஆனால், அதைக் கேட்கிற அனைவருமே அதற்குப் பதிலளிப்பதில்லை. இதற்கு ஒரு காரணம் என்னவெனில், கடைத்தெருவில் இருக்கும் சிலர், வேறு கடைகளின் மீதுள்ள ஆர்வத்தால் ஏற்கெனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர். அழைப்பு, அவர்களது செவிகளுக்கு எட்டுகிற எல்லைக்குள்தான் இருக்கிறார்கள். ஆனால், அது கேட்கப்படவில்லை. ஏனெனில் அவர்களது செவிகள் மற்ற வகையான குரலோசைகளினாலும், பிற வகையான ஆர்வங்களினாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

இன்றைய சந்தைவெளியில், அநேகர் விளையாட்டுத்துறை சார்ந்த கடைகளில் ஏற்கெனவே மும்முரமாயிருக்கின்றனர். மற்றவர்களோ, கல்யாணக் கடைகளில் தங்களைத் திருப்திசெய்யக்கூடியவற்றைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். வேறு பலரோ, தொழில், பயணம் மற்றும் பொழுதுபோக்குக் கடைகளைச் சுற்றி, மொய்த்துத் திரிகின்றனர்.

இந்தக் கடைகள், நல்லவற்றை வழங்குகின்றனதான். ஆனால் இயேசு நம்மிடம், “இந்தப் பக்கம் வாருங்களேன்; உங்களால் வேறு எங்குமே காணமுடியாத, விசேஷித்த ஒன்று, உங்களுக்கு வழங்கும்படியாக என்னிடமுள்ளது,” என்று சொல்கிறார். அவர், “நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்?” (ஏசாயா 55:2) என்று கேட்கிறார்.

தேவகுமாரனானவர், மிகவும் விலையேறப்பெற்ற ஒன்றை வழங்குகிறார். அவர், “உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்” (55:3), என்று அழைப்பு விடுக்கிறார். அது மிகப்பெரியதொரு சலுகையாகத் தெரிகிறது. நாம் கடந்து சென்று, அதன் விலை என்னவென்று விசாரிக்கலாம், வாருங்களேன்.

அதன் விலை சரியானதுதான்!

விற்பனை என்பது, வழக்கமாக வியாபாரியானவர், தான் சொல்லும் விலைக்காகத் தனது வாடிக்கையாளரிடம், ஏற்றிப் பேரம் பேசுவதாகத்தான் இருக்கும். ஆனால் இங்கே, விலையை இறக்கிப் பேரம் பேசும் இயேசுவைக் காண்கிறோம்: “நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றி . . . கொள்ளுங்கள்” (55:1). எல்லாமே வழக்கத்துக்கு மாறானதாக நடக்கும், தலைகீழானதொரு ஏலம்போல் இது இருக்கிறது. ஏனெனில் கிறிஸ்து, மிகக்குறைந்தபட்ச விலை பேசுபவருக்கு விற்பதற்கே தீர்மானித்துள்ளார்.

ஆகவே உங்கள் கற்பனையில், நீங்கள் என்னுடன் இந்த ஏல விற்பனைக்கு வாருங்கள்! இயேசு கடையில் நின்றுகொண்டிருக்கிறார். அவர், “முழுமையான மன்னிப்பையும், தேவனோடு ஒப்புரவாகுதலையும் உங்களுக்கு வழங்குவதில், நான் மிகுந்த சந்தோஷமடைகிறேன். இந்தச் சலுகையில், உச்ச மதிப்பாகிய நித்திய ஜீவனும் அடங்கும்; அத்துடன் இன்று அது, மிகக்குறைந்தபட்ச விலையில் ஏலம் எடுப்பவருக்குக் கிடைக்கிறது,” என்று சொல்கிறார்.

நெருங்கிய, மெல்லிய கோடுகளுடனான ‘ஷர்ட்’ அணிந்த ஒரு நபர், முதல் விலை பேரத்துடன் முன்னால் வருகிறார். அவர், “நான் நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். மேலும், நேர்மையானதொரு தொழிலும் நடத்தியிருக்கிறேன்,” என்று சொல்கிறார். தொடர்ந்து அவர், “என் மனைவிக்கு நான் உண்மையுள்ளவனாயும், என் பிள்ளைகளுக்கு நல்லதொரு தகப்பனாகவும், இருந்துவந்துள்ளேன். மூன்று தொண்டு நிறுவனங்களின் குழுக்களில் பணியாற்றியிருக்கிறேன். இந்த நற்கிரியைகளை நான் விலையாக வைக்க விரும்புகிறேன்,” என்கிறார்.

அது மிகவும் கவரக்கூடிய ஒரு பேரம் என்பதாக, மற்ற ஏலதாரர்களிடமிருந்து ஒரு முணுமுணுப்பு எழுகிறது. ஏலம் விடுபவர், “அது, மெல்லிய கோடுகளுடனான ‘ஷர்ட்’ அணிந்த மனிதருடையது. யாரேனும் அதனினும் குறைவான விலை எனக்குத் தரமுடியுமா?” என்கிறார். அதன்பின், நீல நிற ‘சாரி’ அணிந்த ஒரு பெண்மணி தன் கரத்தை உயர்த்துகிறார். அவர், “மெல்லிய கோடுகளுடனான ‘ஷர்ட்’ அணிந்த மனிதரளவுக்கு, நான் அவ்வளவு ஒன்றும் பெரிதாகச் செய்திருக்கவில்லை் ஆனால், நான் உண்மையுள்ளவளாக ஆலயத்துக்குச் சென்றுவந்துள்ளேன். மேலும், நான் ஓர் ஆவிக்குரிய நபராக ஆகியிருக்கிறேன் என்றும் நான் நினைக்கிறேன்,” என்று சொல்கிறார்.

வியாபாரியானவர், “அது நீல நிற ‘சாரி’ அணிந்த பெண்மணியின் விலைபேரமாகும். யாரேனும் அதனினும் குறைவான விலை கொடுக்கிறீர்களா?” என்கிறார்.

நீல நிற ‘ஜீன்ஸ்’ அணிந்த ஒரு பெண் தன் கரத்தை உயர்த்தி, “நீல நிற ‘சாரி’ அணிந்த பெண்மணியைப்போல, நான் ஒன்றும் ஒழுங்காக ஆலயத்துக்குச் சென்றதில்லை. ஆனால் நல்லதொரு வாழ்க்கையை வாழ முயற்சித்திருக்கிறேன்,” என்கிறாள்.

ஏலம் விடுபவர், “சரி, நல்லது. அது ஒன்றும் அவ்வளவு அதிக விலை இல்லைதான். எனினும் ஏலமானது, மிகக்குறைந்த விலை பேசுபவருக்கே போகப்போகிறது. ஆகவே, உங்களுக்கு வாய்ப்பிருக்கிறது. வேறு யாராவது ஏலம் கேட்க மீதமிருக்கிறீர்களா?” என்று கேட்கிறார்.

சிவப்பு நிறத்தில் ‘ஸ்வெட்டர்’ அணிந்து அதனுடன் பொருந்திப்போகும் சிவந்த நிற முகமுள்ள ஒரு மனிதர், மெல்ல எழுகிறார். அவர், “நான் என் சொந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவிதமாகக்கூட வாழ்ந்ததில்லை. நான் பலருடைய வீழ்ச்சிக்குக் காரணமாகியிருக்கிறேன். சில பயங்கரமான காரியங்களைச் செய்துமிருக்கிறேன். ஆனால், குறைந்தபட்சம் வருந்தவாவது செய்கிறேன். நான் அப்படியெல்லாம் வேண்டுமென்றே செய்யவில்லை. எனவே, நான் மெய்யாகவே மனம் வருந்தி, திருந்தி வந்திருக்கிறேன் என்கிற உண்மையை எனக்கான விலை பேரமாக வைக்கட்டும்,” என்று சொல்கிறார்.

விற்பனையாளரோ, “நல்லதுதான், அது மெய்யாகவே அதிகமில்லைதான். ஆனால் இந்த ஏலம், மிகக்குறைந்த விலை பேசுபவருக்குத்தான். ஆகவே, உங்களது சொற்ப விலை பேரம், தற்போதைக்கு அதை உங்களுக்கே தருகிறது. இதனினும் என்னிடம் குறைந்த பேரம் பேசப்போகிறவர்கள் யாரேனும் உண்டா?” என்று கேட்கிறார்.

இது பெருமையின் யுத்தம் அல்ல் மாறாக, அது வெட்கத்தின் யுத்தம். அநேக மக்கள், ஏலத்திலிருந்து விலகிக்கொள்ளத் தீர்மானித்துள்ளனர். காரணம், அதன் தொகை மிகவும் அதிகம் என்பதல்ல் மாறாக, அதன் பேரம், தர்மசங்கடப்படுத்துமளவுக்கு மிகவும் குறைவானது என்பதுதான். பெரும்பாலான மக்கள், ‘சிவப்பு நிற ‘ஸ்வெட்டர்’ அணிந்துள்ள மனிதரைவிடவும் குறைந்த விலை பேரத்தை முன்வைக்க யாராவது துணிந்து முன்வருவார்களா?’ என்று பார்க்கும்படியாகவே காத்திருக்கிறார்கள். இவ்வளவு சொற்பமானதைத் தேவனுக்குக் கொடுக்க, யாரால்தான் கூடும்?

கடைசியாக, யாரோ ஒருவர் முன்னால் வந்து, “கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. என் மனந்திரும்புதல் எப்படி இருக்கவேண்டுமோ, அப்படி இல்லை் என் விசுவாசம் எப்படி இருக்கவேண்டுமோ, அப்படி இல்லை் என் கிரியைகள் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இல்லை. எதுவுமே அது இருக்கவேண்டிய விதத்தில் இல்லை! என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை,” என்று சொல்கிறார். ஏலம் விடுபவர், “அது உங்களுக்குத்தான், அது உங்களுக்கேதான்,” என்று சொல்லி, ஏலத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறார்.

நாம் எதைக் கொண்டுவருகிறோம்?

ஒருவேளை நீங்கள், “சரிதான்; ஆனால், தேவனுக்குக் கொண்டுவருவதற்கென்று நம்மிடம் ஒன்றுமேயில்லையா? நாம் மனம் வருந்தவேண்டியதில்லையா? நாம் விசுவாசிக்கவேண்டியதில்லையா?” என்று கேட்கலாம்.

ஆம். ஆனால், இவற்றையெல்லாம் கொடுப்பதனால் ஒன்றும், நாம் இரட்சிப்பைப் பெறுவதில்லை. இரட்சிப்பு, ஒரு பரிசாகும். அநேக மக்கள், இந்த விஷயத்தில் குழம்பிப்போய்விடுகிறார்கள். இரட்சிப்பென்பது, ஏதோ நமது மனந்திரும்புதல் மற்றும் விசுவாசத்தின் பண்டமாற்றாகத் தேவன், மன்னிப்பையும், ஜீவனையும் வழங்குகிற ஒரு பரிவர்த்தனை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், சுவிசேஷம் அதுவல்ல.

இறுதி நாளில் தேவன் உங்களிடம், உங்களைத் தாம் ஏன் பரலோகத்துக்குள் அனுமதிக்கவேண்டும் என்று கேட்பாரானால், உங்களது பதில், நற்கிரியைகளோ, மனந்திரும்புதலோ, ஏன், விசுவாசமோகூட அல்ல. நமது இரட்சிப்பு, நாம் செய்திருக்கும் எதன்மேலும் சார்ந்திருக்கவில்லை. மாறாக, அது இயேசு கிறிஸ்துவின் மீது மட்டுமே சார்ந்துள்ளது.

நீங்கள், உங்களது மனந்திரும்புதலிலோ, உங்களது விசுவாசத்திலோ, நம்பிக்கைகொண்டிருப்பீர்கள் என்றால், உங்களுக்கு ஒருபோதும் அதைப்பற்றிய உத்தரவாதம் இருக்காது. ஏனெனில், உங்கள் விசுவாசம் எப்பொழுதுமே இன்னும் பலப்படவேண்டியதாயிருக்கிறது. மேலும், உங்கள் மனந்திரும்புதல் ஒருபோதும் முழுமையடையாத ஒன்றாயிருக்கிறது. உங்கள் இரட்சிப்பு, முற்றுமுழுதாக இயேசு கிறிஸ்து ஒருவர் மீதும், மற்றும் அவர் உங்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதையுமே சார்ந்திருக்கிறது. எளிமையாகக் கூறினால், விசுவாசமானது, அவர் வழங்குவதைப் பெற்றுக்கொள்ள விரியும் கரங்களாகும். மற்றும் அதை ஏற்கெனவே பெற்றுக்கொண்ட இருதயத்தின் பதிலே, மனந்திரும்புதல் என்பதாகும்.

மிகக்குறைந்த தொகைக்கு ஏலம் வழங்குதல்

நீங்கள் தேவனை நேசிப்பதைச் சிரமமானதாகக் கண்டால், அது, கிறிஸ்து வழங்குவதை நீங்கள் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என்பதனால் இருக்கலாம், அல்லவா? ஒருவேளை, நீங்கள் ஒரு சன்மார்க்க நெறியைப் பின்பற்றிக்கொண்டு, அதையே தேவனுக்குக் கொடுப்பவராயிருக்கலாம். உங்கள் கரங்கள் நிரம்பி வழிகின்றன. ஆகவே, நீங்கள் பெற்றுக்கொள்வதற்காக ஒருபோதும் கிறிஸ்துவினிடத்தில் வந்ததேயில்லை.

நாம் ஒவ்வொருவருமே, மிகக்குறைந்த விலை பேரத்தை முன்வைக்கும்பொருட்டுத் தேவன் அதைச் செய்தார். பெருமை மட்டுமே உங்களுடைய வழியில் தடையாக நிற்கிறது. மெல்லிய கோடுகளுள்ள ‘ஷர்ட்’ அணிந்த நபரும், நீல நிற ‘சாரி’ அணிந்த பெண்மணியும்கூட, இந்த ஆசீர்வாதத்தைக் கொண்டிருக்கலாம். ஆனால், அதை வாங்குவதற்கு முயற்சிப்பதை அவர்கள் நிறுத்தவேண்டும். அவர்கள், தங்கள் கிரியைகளையெல்லாம் சற்று அப்பால் ஒதுக்கி வைத்துவிட்டு, வெறுங்கையுடன் கிறிஸ்துவிடம் வரவேண்டும்.

நாம் இதை மிகவும் கடினமானதாகக் காண்பதற்கான ஒரு காரணம் என்னவெனில், நாம் கடனை விரும்புவதில்லை. போதகர் ஒருவரின் இல்லத்தில் ஒரு பிரச்சினையைச் சரிசெய்வதற்கு ஒரு நண்பர் உதவ முன்வந்தபோது, இதே நிலை அவரையும் தேடி வந்தது. நண்பர் அதற்காக இரண்டு மணி நேரங்கள் செலவிட்டு வேலை செய்தார். போதகர் அதற்காக நன்றி கூறினார். நண்பரது சட்டைப்பையில் சிறிதளவு பணத்தைச் செருகிவிட போதகர் முயன்றபோது, நண்பர் அதை ஏற்கவில்லை.
அந்தப் போதகர் ஏன் அவருக்குக் கட்டணம் செலுத்த விரும்பினார்? ஏனெனில், அவர் தன் நண்பருக்குக் கடனாளியாயிருக்க விரும்பவில்லை. அவர் ஓர் உதவிபெற்றும், அதற்கு அவரது நண்பர் சிறிது கட்டணம்பெற்றும் இருந்தால், அவர்கள் இருவருமே இந்த உடன்பாட்டில், ஒரு சமநிலையில் இருக்கிறார்கள். தேவனைக் குறித்த காரியங்களிலும், நமது இருதயங்களின் ஏதோவொரு ஆழத்தில், பெரும்பாலும் நமது சிந்தனை, “எனக்குத் தேவையான ஒன்றை அவர் எனக்கு வழங்குகிறார். பதிலுக்கு, அவர் விரும்பும் ஒன்றை அவருக்கு நான் வழங்குகிறேன்,” என்பதாகத்தான் இருக்கிறது. அது எனக்கு ஓரளவு நம்பகத்தன்மையையும், சுயமரியாதையையும் கொடுக்கிறது. அதற்கு இயேசு, “அதன் அடிப்படையில், எந்த ஒப்பந்தமும் இல்லை,” என்று சொல்கிறார்.

கிறிஸ்து வழங்குவதை நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரே அடிப்படை எதுவெனில், வெறுங்கரங்களுடன் அவரிடமிருற்து பெற்றுக்கொள்வதும், அதைத் தொடர்ந்து, நமது வாழ்நாட்களின் எஞ்சிய காலமெல்லாம், நித்திய நித்தியமாய், அளவிட முடியாதபடி, அவருக்குக் கடன்பட்டவர்களாக நம்மை விட்டுவிடுவதுமே ஆகும்.

கொள்முதல் செய்தல்

சிலர், கடைகளில் சென்று, “வெறுமனே பார்ப்பதை” மட்டுமே அனுபவிக்கின்றனர். அதில் நிச்சயமாக எந்தத் தவறும் இல்லை. ஆவிக்குரிய விதத்திலும், சிலர் அதே நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்கள், கிறிஸ்துவின் கடைப்பக்கம் கடந்து வந்து, வேதாகமம் மற்றும் இரட்சிப்பைக் குறித்துக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்துள்ளனர். பார்ப்பது சிறந்ததுதான்் ஆனால் பார்ப்பதே, வாங்குவது ஆகாது. உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய அர்ப்பணம், மிகவும் ஆழமானதொரு விசாரணைக்குத் தகுதியானதே. ஆகவே, கிறிஸ்து கூறும் கூற்றுக்களைக் கவனமாய் உற்றுப் பாருங்கள். ஆனால், பார்ப்பதையும், வாங்குவதையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள். கிறிஸ்து வழங்குவது, உங்களுடையதாய் மாறவேண்டுமானால், நீங்கள்தான் கொடுத்தல்-வாங்குதலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.

மேலும், கடைகளில் ஆடைகளை அணிந்துபார்ப்பதென்பது, வாங்குவது ஆகாது. நீங்கள் ஒரு கடையில் நின்று, ஆடைகளை வாங்கும்படி காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரையும், திங்கள் முதல் வெள்ளி வரையும் அணிந்துபார்த்தும், ஒருபோதும் ஒன்றுமே வாங்காதிருக்கவும் முடியும். அவ்வாறாகவே, நீங்கள் ஆலயத்துக்கு வந்து, வேதம் வாசித்து, உங்கள் ஜெபங்களையெல்லாம் செய்தும், கிறிஸ்துவுடனான கொடுத்தல்-வாங்குதலை இன்னும்கூட முடிக்காமல் இருக்கலாம். நீங்கள் வாங்கவேண்டும் என்று உணர்ந்தும்கூட, ஒருபோதும் வாங்காமல் போகக்கூடும்.

அத்துடன், அறிந்திருப்பது என்பது, வாங்குவது ஆகாது. சென்றமுறை அந்தப் போதகரின் குடும்பத்தினர், சலவை இயந்திரங்களை வாங்குவதற்காகப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு கலைக்களஞ்சியம்போலவே காணப்பட்ட, மிகவும் பயனுள்ளதொரு விற்பனை உதவியாளரைக் கண்டனர். அவர், சற்று மூக்கினால் பேசும் குரலில், “இது, இருபத்துமூன்று நிமிட அலைவுகளுடன் சுழல்கிறது் இதில் தக்கையினாலான திருகு அச்சு உள்ளது. ஆயினும் அதில், தானியங்கி வெப்பநிலை அளவீடு இல்லை,” என்று சொன்னார்.

அவர்கள் அந்த நபருடன் பேசத் தொடங்கினார்கள். பேச்சுவாக்கில் அவர், தனக்கே ஒரு சலவை இயந்திரம் சொந்தமாக இல்லையென்றும், காரணம், அவர் தனியே வாழ்ந்துவந்ததாகவும், மேலும், மாதமொருமுறை அவர் சலவைநிலையத்துக்குச் சென்றுவருவதாகவும் கூறினார். அவர் பொருட்களின் அனைத்து விவரங்களையும் அறிந்திருந்தார். ஆனால் தனக்கென்று ஒன்றை, ஒருபோதும் வாங்கிக்கொள்ளவில்லை. இன்னும் மோசமான செய்தி என்னவெனில், போதகரின் குடும்பத்தினரும் சலவை இயந்திரத்தை வாங்காமலேயே திரும்பிவிட்டனர் என்பதுதான்.

ஒருவேளை, நீங்களும் ஆவிக்குரிய விதத்தில், அதே நிலையில் இருக்கலாம். நீங்கள் இயேசுவைப்பற்றி அநேகக் காரியங்களைக் கற்றிருக்கிறீர்கள். ஆனால் அவர் வழங்குவது, இன்னும் உங்களுடையதாகவில்லை. அறிந்திருப்பது என்பது, வாங்குவது ஆகாது.

நீங்கள் உங்களுடைய நிலையில் ஆராய்ச்சி செய்வதற்கு ஒரு காலமுண்டு. ஆனால் நீங்கள் வாங்கப்போகிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு முடிவெடுத்துக் கொடுத்தல்-வாங்குதலை முடிக்கிறதான ஒரு தருணம் வரவேண்டும். அப்படி நீங்கள் வாங்கும்போது, கிறிஸ்து வழங்குவது உங்களுடையதாகிவிடுகிறது.

இயேசு கிறிஸ்து, உங்கள் ஆத்துமாவின் மிக ஆழ்ந்த தாகங்களைத் தீர்ப்பதாகக் கூறி, அழைக்கிறார். அவர், உங்களைத் தேவனுடன் ஓர் உறவிற்குள் கொண்டுவருவதாகவும், அவ்வுறவில் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்றும் மற்றும் நீங்கள் அவரைப் பிரியப்படுத்துகிறதான வழியில் வாழும்படியாக, அவரது வல்லமையை அனுபவிக்கத் தொடங்குகிறீர்கள் என்றும் வாக்குப்பண்ணுகிறார். இந்த வாழ்வு, மரணத்துக்குப் பின்னரும், நித்திய காலத்துக்கும் தொடரும்.

நீங்கள் இந்தப் பரிசை வாங்க முடியாது. ஆனால், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். அதைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, நீங்கள் தேவனுக்குக் கொடுப்பதற்கும் ஏதோ ஒன்று இருக்கிறது என்ற எண்ணத்தை ஒதுக்கிவைத்துவிடவேண்டும். உங்களிடம் இல்லாததை, உங்களுக்குக் கொடுக்கும்படி, நீங்கள் அவரிடம் கேட்கவேண்டும். விசுவாசம் என்பது, கிறிஸ்து உங்களுக்கு வழங்குவதைப் பெற்றுக்கொள்ளத் திறக்கப்படும் கரம் போன்றது. பெற்றுக்கொள்ள வாஞ்சிக்கும் யாவருக்கும் கொடுக்க, அவர் ஆயத்தமாக நிற்கிறார்.

கேள்விகள்

1. இயேசுவின் அழைப்பிற்கு, ஏன் அனைவருமே கீழ்ப்படிவதில்லை?

2. அதிக விலை பேசுபவர் அல்லது குறைந்த விலை பேசுபவர் – இவர்களில் யாருக்கு மன்னிப்பையும், ஒப்புரவாகுதலையும், நித்திய ஜீவனையும், இயேசுவானவர் வழங்கினால், நீங்கள் சரியானது என உணர்வீர்கள்? ஏன்?

3. தேவன், கடைசி நாளில் உங்களிடம், “நான் ஏன் உன்னைப் பரலோகத்துக்குள் அனுமதிக்கவேண்டும்?” என்று கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்?

4. உங்கள் கிரியைகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டுக் கிறிஸ்துவிடம் வெறுங்கையாய் வருவதற்கு, உங்கள் வழியில் தடையாக ஏதாவது நின்றுகொண்டிருக்குமானால், அது என்ன?

5. இயேசுவுடன் உங்களது கொள்முதல் காரியத்தில், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நீங்கள் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் வாங்க முயற்சித்துக்கொண்டிருக்கிறீர்களா? இன்னும் அதிகம் கற்றுக்கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் கொடுத்தல்-வாங்குதலை முடித்துவிட்டீர்களா?