< முன் பகுதி




அடுத்த பாடம் >

பாவம்

2 இராஜாக்கள் 17:6-28

பாடம் 25 – மகிமை



Download PDF

வேதவசனம்
பாடம்
கேள்விகள்
வேதவசனம்

எசேக்கியேல் 1 : 1-28

1. முப்பதாம் வருஷம் நாலாம் மாதம் ஐந்தாந்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.

2. அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருஷமாயிருந்தது.

3. அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.

4. இதோ, வடக்கேயிருந்து புசல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறமும் உண்டாயிருந்தது.

5. அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷ சாயலாயிருந்தது.

6. அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு முகங்களும், ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு செட்டைகளும் இருந்தன.

7. அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாயிருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாயிருந்தன; அவைகள் துலக்கப்பட்ட வெண்கலத்தின் வருணமாய் மின்னிக்கொண்டிருந்தன.

8. அவைகளுடைய செட்டைகளின்கீழ் அவைகளின் நாலு பக்கங்களிலும் மனுஷ கைகள் இருந்தன; அந்த நாலுக்கும் அதினதின் முகங்களும் அதினதின் செட்டைகளும் உண்டாயிருந்தன.

9. அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன.

10. அவைகளுடைய முகங்களின் சாயலாவது, வலதுபக்கத்தில் நாலும் மனுஷமுகமும் சிங்கமுகமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன.

11. அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய செட்டைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு செட்டைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு செட்டைகள் அவைகளுடைய உடல்களை மூடின.

12. அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை.

13. ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது.

14. அந்த ஜீவன்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன.

15. நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, பூமியில் ஜீவன்களண்டையிலே நாலு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.

16. சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை வருணமாயிருந்தது; அவைகள் நாலுக்கும் ஒரேவித சாயல் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாப்போல் இருந்தது.

17. அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை.

18. அவைகளின் வட்டங்கள் பயங்கரப்படத்தக்க உயரமாயிருந்தன; அந்த நாலு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.

19. அந்த ஜீவன்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; அந்த ஜீவன்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின.

20. ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; அவ்விடத்துக்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.

21. அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும்போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது, சக்கரங்களும் அவைகள் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.

22. ஜீவனுடைய தலைகளின்மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப்பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.

23. மண்டலத்தின்கீழ் அவைகளுடைய செட்டைகள் ஒன்றுக்கொன்று எதிர் நேராய் விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு செட்டைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன.

24. அவைகள் செல்லும்போது அவைகளுடைய செட்டைகளின் இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும், சர்வவல்லவருடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம்போலவுமிருந்தது; அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன.

25. அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.

26. அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், அந்தச் சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது.

27. அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன்.

28. மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

பாடம்

எசேக்கியேலின் முப்பதாவது பிறந்தநாள், அவரது வாழ்வின் மிகக்கடினமான நாளாக இருந்திருக்கக்கூடும். அவர் தேவனுடைய ஆலயத்தில், தன்னுடைய ஊழியத்திற்காக ஆயத்தப்படுவதில், தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டிருந்தார். ஆனால், இருபத்தைந்தாம் வயதில், அவரது பயிற்சியின் மத்தியில், யுத்தம் மூண்டது. அவர் கேபார் நதியண்டைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஓர் ஆசாரியரின் முப்பதாவது பிறந்தநாள்தான், ஆலயத்தில் அவரது ஊழியம் தொடங்கும் நாளாக இருந்தது. ஆனால், ஆலயத்திலிருந்து எழுநூறு மைல்களுக்கப்பால் இருக்கையில், ஒரு புதிய ஆசாரியரால் என்ன செய்ய முடியும்?

எசேக்கியேல், நொறுங்கிய நம்பிக்கைகள் மற்றும் சிதைந்த கனவுகளுடன்கூடிய மனிதராயிருந்தார். அவர் மட்டும் வேறொரு காலப் பகுதியில் வாழ்ந்திருப்பாரானால்… அவர் மட்டும் வேறொரு இடத்தில் இருந்திருப்பாரானால்… அவர் மட்டும்…! ஊழியத்துக்கான அவரது பாதையைச் சூழ்நிலைகள் தடுத்துவிட்டதுபோல் காணப்பட்டது. அவர், பாபிலோனுக்கு அருகிலுள்ள உப்பங்கழிப் பகுதியில், குழப்பமடைந்த மற்றும் மனச்சோர்வு நிறைந்த மக்கள் கூட்டத்தாரிடையே காணப்பட்டார்.

ஒருவேளை நீங்களும் எசேக்கியேலுடன் உங்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடும். உங்களுக்கு ஒருவேளை அதிகபட்ச நம்பிக்கைகளும், பெரிய கனவுகளும் இருந்திருக்கலாம். நீங்கள் இன்று இருக்கும் நிலையில் உங்களை ஒருபோதும் நீங்கள் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க மாட்டீர்கள்.

இரண்டு இடங்களில் தேவஜனங்கள்

எசேக்கியேலின் காலத்தில், தேவஜனங்கள் இரண்டு இடங்களில் இருந்தார்கள். அவர்களில் பத்தாயிரம் பேர், பாபிலோனிலுள்ள கேபார் நதியண்டையில் இருந்தார்கள். மீதமிருந்தவர்கள், சிதேக்கியா ராஜா ஏதோ தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஆண்டுவந்த எருசலேமிலேயே தங்கியிருந்தார்கள்.

சிறைப்பட்டவர்களிடத்தில் தேவனுடைய வார்த்தையைப் பேசும்படியாக எசேக்கியேல் அழைக்கப்பட்டார். அதே காலக்கட்டத்தில், எருசலேமில் எஞ்சியிருந்த மக்களிடம் தேவனுடைய வார்த்தையை எரேமியா பிரசங்கித்துக்கொண்டிருந்தார்.

குடும்பங்கள் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொருவரும், அடுத்து என்ன நிகழுமோ என்று கலங்கிக்கொண்டிருந்தார்கள். எருசலேமிலுள்ள, நெருக்கப்பட்ட மக்கள் பிழைப்பார்களா? சிறைப்பட்டவர்கள் எப்பொழுது திரும்பி வரக்கூடும்? அடுத்த மாதமா? அடுத்த வருடமா? எப்பொழுதாவது வரக்கூடுமா?

தேவனுடைய வார்த்தையைப் பேசுவதாகக் கூறிக்கொள்ளும் மக்களிடமிருந்து, இந்தக் கேள்விகளுக்கான விடைகளுக்குப் பஞ்சமேயிருக்கவில்லை. “தேவன் தமது ஆலயத்தைவிட்டு ஒருபோதும் நீங்க மாட்டார். சிறைப்பட்டவர்கள் விரைவிலேயே வீடு திரும்புவார்கள். அதெப்படி எருசலேம் வீழ்ச்சியடையக்கூடும்?” இப்படியாக, நிகழ்ந்தது ஒரு தற்காலிகமான பின்னடைவு மட்டுமே என்று, மக்களுக்கு உறுதியளிக்கக் கள்ளத் தீர்க்கதரிசிகள் ஆவலாயிருந்தார்கள்.

தீர்க்கதரிசி எரேமியாவிடமோ, வேறு விதமான செய்தி இருந்தது. அது நல்ல செய்தியாக இல்லை. சிறைப்பட்டவர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்ட பத்தாயிரம் மக்களிடம், அவர்கள் திரும்பி வருவதற்குத் தேவன் அனுமதிக்குமுன், எழுபது ஆண்டுகள் செல்லும் என்று அவர் கூறினார். அவர்களது வாழ்நாள் காலம் முழுவதும், ஓர் அந்நியமான, புறதேசத்தில் கழிக்கப்படும் (எரேமியா 29). அவர்களுக்கு ஓர் ஆறுதல் தேவைப்பட்டது. எசேக்கியேல் மூலமாகத் தேவன் அதை அவர்களுக்குக் கொடுத்தார்.

மகிமை தோன்றுகிறது

தேவனுடைய மகிமையைக் குறித்த எசேக்கியேலின் தரிசனத்தில், ஏழு அம்சங்கள் இருக்கின்றன.

அவற்றுள் முதலாவதாக, சூரிய ஒளியில் மின்னும், கண்ணாடியால் செய்யப்பட்ட ஒரு மண்டலம் இருந்தது (எசேக்கியேல் 1:22). அந்த மண்டலமானது, ஜீவன்களினால், ஒவ்வொரு மூலைக்கொன்றாகத் தாங்கப்பட்டு, உயர விரிந்திருந்தது. இந்த ஜீவன்கள், தேவதூதர்களாயிருந்தன (1:20). அவை, அந்த மண்டலத்தைத் தங்கள் சிறகுகளின்மேல் உயரத் தாங்கியிருந்தன. ஆனால் அவை, ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடிகளில் செட்டைகளைக் கொண்டிருந்தன. ஆகவே, அவற்றால் பறக்கவும் கூடுமாயிருந்தது. ஆனால் அந்தத் தளமானது,
ஒரு ஹெலிகாப்டரைப்போலச் செங்குத்தாகவும் மேலே எழும்ப முடியும் (1:19).

அதன்பின்பு எசேக்கியேல், சக்கரங்களைப் பார்த்தார்: “நான்… பூமியில் ஜீவன்களண்டையிலே… ஒரு சக்கரத்தைக் கண்டேன்… அவைகள்… சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாப்போல் இருந்தது” (1:15-16). வடக்கிலிருந்து தெற்குமுகமாய்ச் செல்லும் ஒரு சக்கரத்தையும், அதற்கு உள்ளாக, அதன் குறுக்குவாக்கில், வேறொரு சக்கரம் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்வதையும் கற்பனை செய்துபாருங்கள். இந்தச் சக்கரங்கள், நான்கு திசைகளுள் எந்தத் திசையில் வேண்டுமானாலும் நகர முடியும். அப்படியிருப்பது, உதாரணத்துக்கு உங்கள் காரை, ஒரு நெருக்கடியான இடத்தில், முன்னும், பின்னுமாக நிற்கும் இரு கார்களுக்கிடையில் நிறுத்தவேண்டுமென்றால், பேருதவியாக இருக்கும். நீங்கள் அப்படியே தெற்கு-வடக்கு நிலையிலிருந்து கிழக்கு-மேற்கு நிலைக்குச் சக்கரங்களைத் திருப்பிக்கொண்டு, இடைப்பட்ட சிறிய இடத்தில் மிக எளிதாகக் காரை நிறுத்திவிட முடியும்!

இந்தச் சக்கரங்கள், அந்த மண்டலத்துக்கு ஒரு நகரும் தன்மையைக் கொடுத்தன. இங்கே நமக்குச் சொல்லப்படுவது என்னவென்றால், தேவனுடைய பிரசன்னம், எந்த ஓரிடத்துக்கும் நிலையானதும், அல்லது வரையறுக்கப்பட்டதும் அல்ல என்பதாகும். தேவன், தாம் தெரிந்துகொள்கிற எவ்விடத்துக்கும் மற்றும் எந்தத் திசையிலும் செல்லக்கூடியவராய் இருக்கிறார். தேவஜனங்களில் ஒருவர்கூட அவரது எல்லைக்கு அப்பாற்பட்டிருக்கக்கூடியதாக, பூமியில் எந்த ஓரிடமும் இல்லை.

அந்த மண்டலம், தேவதூதர்கள் மற்றும் சக்கரங்கள் ஆகியவற்றின்மேலே, “நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், … இருந்தது” (1:26). “சாயல்” என்னும் சொல்லைக் கவனியுங்கள். தாம் காண்பது என்னவென்று விவரிப்பதற்கு, எசேக்கியேல் பொருத்தமான வார்த்தை கிடைக்காமல் திணறுகிறார். எவ்வளவுக்கு மேன்மையானவைகளைக் காண்கிறாரோ, அவ்வளவுக்கு அவற்றை வெளிப்படுத்துவது இன்னும் கடினமானதாயிருக்கிறது.

அதன்பின்பு, அந்தச் சிங்காசனத்தின்மேலே எசேக்கியேல், “… உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்…” கண்டார் (1:27). அதே நேரத்தில் அதனுடன், காணக்கூடுமென்று நீங்கள் எதிர்பார்த்திருக்கவே முடியாத வேறொன்றும் இருந்தது: “மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது…” (1:28). தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் குறித்துப் பேசுகிற அக்கினியையும், மின்னலையும் எசேக்கியேல் கண்டார்; ஆனால் அதே சமயத்தில், தேவனுடைய கிருபையைக் குறித்துப் பேசுகிற வானவில்லையும் கண்டார். மேலும், அவை இரண்டுமே சிங்காசனத்திலிருந்துதான் புறப்பட்டு வந்தன.

இந்தத் தரிசனத்துக்குள் உற்றுப் பார்த்த எசேக்கியேல், அதற்கும் மேலாகப் பார்த்துக்கொண்டிருந்தார். ஜீவன்களுக்குமேலே, அந்த மண்டலமிருந்தது. அந்த மண்டலத்தின் மீது, “சிங்காசனத்தின் சாயலை” அவர் கண்டார் (1:26). மேலும், அவர் அந்தச் சிங்காசனத்தின்மேலே, “மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயல்” உடைய, சுற்றிலும் பிரகாசமாக இருக்கிற, மகிமையான ஒரு நபரைக் கண்டார் (1:26-27).

எசேக்கியேல், தான் விரும்பிய இடத்தைவிட்டு வெகு தொலைவில் இருந்தபோது, அவர் முக்கியமாகப் பார்க்கவேண்டியிருந்தது, தேவன் சிங்காசனத்தில் வீற்றிருந்தார் என்பதையும், மற்றும் தேவனுடைய பிரசன்னம் தன்னுடன் இருந்தது என்பதையும்தான். நீங்கள், உங்கள் விருப்பத்துக்கு மாறான, தொலைதூரமான ஓரிடத்திலிருக்கும்போது, உங்களுக்கு அதிகம் தேவைப்படுவது, தேவமகிமையின் புத்தம் புதிய ஒரு தரிசனம்தான்.

மகிமை விலகுகிறது

அதன்பின் சற்று நேரத்தில், எசேக்கியேலுக்கு மிக வித்தியாசமான ஒரு தரிசனம் தரப்படுகிறது. அதில் அவர், தேவாலயத்தில் ஒரு பிரம்மாண்டமான விக்கிரகத்தைப் பார்க்கிறார். விக்கிரகங்களின் அவலட்சணமான உருவங்கள், ஆலயச் சுவர்களில் வரையப்பட்டிருந்ததை அவர் கண்டார் (8:7-10). அருவருப்பான காரியங்களெல்லாம், ஆலயத்தின் உள்ளேயே இரகசியமாக நிகழ்ந்துகொண்டிருந்தன. மக்களும், “கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை,” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் (8:12).

பின்பு எசேக்கியேல், தனது முந்தின தரிசனத்தில் தான் கண்ட, கர்த்தருடைய அதே மகிமையைக் கண்டார் (8:2-4). அது, தேவன் அந்த விக்கிரகத்தைச் சர்வ சங்காரம் செய்ய வந்ததுபோலிருந்தது. தமது ஆலயத்தைத் தீட்டுப்படுத்திய தவறான ஆராதனைகளை அழிக்கக் கர்த்தர் ஆயத்தமாகியிருந்தார்.

எசேக்கியேல், தேவ மகிமையின் தரிசனத்தை மீண்டும் கண்டபோது, அவர் அந்த மண்டலத்தையும், சக்கரங்களையும், வாசற்படியை நோக்கி நகர்கின்ற தேவனின் சிங்காசனத்்தையும் கண்டார். தேவன், தமது ஆலயத்தையும், தமது நகரத்தையும்விட்டு, வெளியேறவிருந்தார் (எசேக்கியேல் 10:4, 18; 11:22-23).

பறந்துகொண்டிருந்ததான அந்த மண்டலத்தினால் குறிப்பிடப்பட்ட தேவபிரசன்னம், எருசலேமைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தது. ஆனால், தமது ஜனங்களையோ, தமது வாக்குத்தத்தங்களையோ தேவன் கைவிடவில்லை. அவரது மீட்பின் கிரியைகளைக் குறித்த கவனம், எருசலேமைவிட்டுத் தொலைவில் விலகிச் சென்றுகொண்டிருந்தது. தேவன், தமது ஆலயத்தைவிட்டு நீங்கிச் சென்றுகொண்டிருந்தார். ஆனால் அவரது பிரசன்னம், கேபார் நதியண்டையில் இருக்கும் சிறைப்பட்டுப்போன ஜனங்களிடையே இப்பொழுது காணப்படப்போகிறது. எசேக்கியேல், தனது குடும்பத்தையும், தேவாலயத்தையும்விட்டு, வெகு தொலைவில்தான் இருந்தார். ஆனால் அவர், தேவனுடைய சித்தத்தின் மையத்தில் இருந்தார்.

உங்களுக்கு விருப்பமான இடத்தில் நீங்கள் இல்லாமலிருக்கலாம். ஆனால், நீங்கள் இருக்குமிடத்தில் உங்களை நிறுத்தியிருப்பதற்குத் தேவனுக்கு ஒரு காரணம் உண்டு. இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தவாறு உங்களை உருவாக்குகிறதான, அவரது மாபெரும் நித்திய நோக்கமானது, நீங்கள் எங்கிருந்தாலும் அற்புதமாக நிறைவேற்றப்படும்.

மகிமை திரும்புகிறது

எசேக்கியேலின் முதல் தரிசனத்துக்குப் பின்பு, இருபது ஆண்டுகள் கழித்து, அவரிடம் தேவன் மீண்டும் பேசினார். அப்பொழுது எசேக்கியேல் கண்ட காட்சி, அவரது இருதயத்திற்கு மகிழ்ச்சியளித்திருக்கவேண்டும்: “கர்த்தருடைய மகிமை கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசித்தது… இதோ, கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று” (43:4-5). ஒரு நாள், தேவனுடைய மகிமையானது, எல்லாக் கோத்திரங்களையும், தேசங்களையும் சார்ந்த ஜனங்களுக்கு ஆராதனை மையமாகப் பயன்படக்கூடியதான ஓர் ஆலயத்தை நிரப்பும்.

இது இயேசுவின் கதை

எசேக்கியேல், “கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய” தரிசனத்தைக் கண்டார் (1:28). எபிரெயருக்கு எழுதப்பட்ட நிருபம், இயேசுவை, “தேவனுடைய மகிமையின் பிரகாசம்” (எபிரெயர் 1:3), என்று நமக்குக் கூறுகிறது. தேவனுடைய மகிமை நம்மிடையே இறங்கி வந்தது: “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” (யோவான் 1:14).

“தேவன், தமது பிரசன்ன மண்டலத்தைவிட்டுப் புறப்பட்டு வந்தார்” என்று இதை, இப்படி யோசித்துப் பாருங்கள்! நித்திய சிருஷ்டிகரும், மகிமையின் கர்த்தருமானவர், தமது சிங்காசனத்திலிருந்து இறங்கி வந்தார். வானவில்லினாலும், அக்கினியினாலும், மின்னலாலும் சூழப்பட்ட, விவரிக்கவே இயலாத இந்த மகிமையான நபர், மனித ரூபமெடுத்துப் பெத்லகேமிலே பிறந்தார். தேவதூதர்களால் உயர்த்தித் தாங்கப்பட்ட, சிங்காசனத்தில் வீற்றிருந்தவர், அதே தேவதூதர்கள் குனிந்து அவரைப் பார்க்கும்படியாக, முன்னணையிலே படுத்திருந்தார்.

மகிமையின் ஆண்டவர், தமது மண்டலத்தைவிட்டுக் கீழே இறங்கியதோடு மட்டுமல்லாமல், தேவாலயத்துக்கும் அவர் வந்து, தேவனுடைய வார்த்தையைப் பேசினார். அவ்வாறு கீழே இறங்கி வந்த மகிமையின் ஆண்டவர், தேவாலயத்தைவிட்டு, ஒரு மண்டலத்தில் ஏறிக்கொண்டு போகவில்லை் மாறாக, ஒரு சிலுவையைச் சுமந்துகொண்டு சென்றார்.

ஆனால், தோன்றியதும், விலகியதுமான அந்த மகிமை, ஒரு நாள் திரும்பும். சரித்திரங்கள் எல்லாம் அதை நோக்கியே முன்செல்கின்றன. மகிமையின் ஆண்டவர், பரலோகத்திலிருந்து இறங்கி வரப்போகிறதான அந்த நாளுக்காக, நாம் ஆவலாய், எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறோம். நாம் அவரைப் பார்ப்போம்; நாம் அவரைப்போல் இருப்போம்; நாம் நித்திய காலமாய் அவருடனேகூட இருப்போம்!

இதுவே உங்கள் கதையாகவும் இருக்கலாம்

எசேக்கியேல், தனது வாழ்வின் சிறப்பான வாலிபக்காலக்கட்டத்தில், வரம் பெற்ற ஒரு மனிதராக இருந்தார். இருப்பினும், பாபிலோனிய உப்பங்கழிப் பகுதியில், நிச்சயமற்ற தன்மையில், தள்ளப்பட்டவராக அவர் காணப்பட்டார். அவரது எதிர்பார்ப்புக்கள் நம்பிக்கையற்றவையாகத் தோன்றின. எதிர்காலம் குறித்த அவரது தனிப்பட்ட நம்பிக்கைகள் சிதைந்துபோயின. ஒருவேளை, நீங்களும் அதேபோல உணர்ந்திருக்கலாம். ஏதோ ஒன்று உங்கள் வாழ்வில் சம்பவித்து, அதினிமித்தம் நீங்கள், “இது இப்படி ஆகியிருக்கவேண்டியதே இல்லை!” என்று சொல்லிக்கொண்டிருக்கிறவராகக் காணப்படலாம். அல்லது ஒருவேளை, நீங்கள் மகிழ்ச்சியாய் இருந்த ஓரிடத்திலிருந்து, வேறு ஏதோ ஓரிடத்திற்குத் தேவன் உங்களைக் கொண்டுசென்றிருக்கலாம்.

பறந்துகொண்டிருந்ததாக எசேக்கியேல் கண்டதான அந்தத் தேவ மண்டலம், ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் மட்டும் தேவனின் பிரசன்னம் அடங்கியதல்ல என்பதை, நமக்கு நினைவூட்டுகிறது. தேவன் உங்களைக் கொண்டுசெல்வாரானால், அவரது பிரசன்னமும் உங்களுடன்கூடச் செல்லும். அவர், “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5), என்று சொல்கிறார். அவரது பிரசன்னம் செல்லக்கூடாத எந்த ஓரிடமும் பூமியில் இல்லை. தேவபிரசன்னத்துடன் பாபிலோனில் இருப்பது, தேவபிரசன்னம் இல்லாமல் எருசலேமில் இருப்பதைவிடவும் மேலானது என்பதை எசேக்கியேல் கண்டறிந்துகொண்டார்!

தேவனின் மகிமையான பிரசன்னம், இயேசு கிறிஸ்துவில் நம் மத்தியில் இறங்கி வந்தது. மகிமையின் ஆண்டவர், தமது ஆலயத்திற்கு வந்தார். ஆனால், மக்கள் அவரைப் புறக்கணித்தார்கள். எனவே இயேசு, சிலுவையைச் சுமந்துகொண்டு, எருசலேமைவிட்டு வெளியேறினார். மகிமை தோன்றியது் மகிமை விலகியது் ஆனால், மகிமை மீண்டும் திரும்பும். தேவனுக்கு ஸ்தோத்திரம்! இயேசு கிறிஸ்து, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்; ஒரு நாள், அவர் வல்லமையோடும், மகிமையோடும் மீண்டும் வருவார். வேதாகமக் கதை, மனிதகுல வரலாற்றின் மாபெரும் சிறையிருப்பு முடிவுக்கு வரப்போகிறதும், தேவனின் ஜனங்கள், நித்திய நித்தியமாய் அவரை அனுபவிக்கும்படியாக, அவரது பிரசன்னத்துக்குள் கொண்டுவரப்படப்போகிறதுமான அந்தக் காலத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

கேள்விகள்

1. நீங்கள், “நான் இருக்கவேண்டிய இடத்தில் இல்லை!” என்று எப்பொழுதாவது சொன்னது (அல்லது நினைத்தது) உண்டா?

2. எசேக்கியேல், வீட்டைவிட்டும், தேவாலயத்தைவிட்டும், வெகுதொலைவில் இருந்தபோதிலும், தேவனுடைய சித்தத்தின் மையத்தில் அவர்
இருந்ததைக் குறித்து, நீங்கள் உணர்வது என்ன?

3. எசேக்கியேலின் தரிசனங்கள், எவ்வாறு இயேசுவின் கதையை முன்னறிவிக்கின்றன?

4. “தேவபிரசன்னத்துடன் பாபிலோனில் இருப்பது, தேவபிரசன்னம் இல்லாமல் எருசலேமில் இருப்பதைவிடவும் மேலானது,” ஏன் என்பதை, உங்கள் சொந்த வார்த்தைகளில் விளக்குங்கள்.

5. தேவமகிமையைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனத்தை, இயல்பாக நீங்கள் தேவனைப் பற்றி நினைக்கக்கூடிய விதத்துடன், எவ்வாறு ஒப்பிடலாம்?