“அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம். கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” (2 கொரிந்தியர் 3:16-18).

நீங்கள் எப்படியோ, நான் அறியேன். ஆனால் இந்த வேத வசனத்தை இதுவரை அதன் ஆழங்களுக்குச் சென்று புரிந்துகொள்வதற்குப் பதிலாக, நுனிப்புல் மேய்வதுபோல நான் மேலோட்டமாகப் பலமுறை படித்திருக்கிறேன். என்னைப்போல் நீங்களும் இருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கானது.

கிறிஸ்துவை நோக்கிப் பார்த்தல்

இந்த வேதப்பகுதி, “ஆனால், அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது…” என்று தொடங்குகிறது. கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது, கர்த்தரை நோக்கி மனந்திரும்புவதிலும், விசுவாசிப்பதிலும் தொடங்குகிறது. ஆனால் அது அங்கேயே முடிந்துவிடுகிற ஒன்றல்ல. நீங்கள் ஒரு கிறிஸ்தவ வீட்டில் பிறந்ததனாலோ, ஞாயிற்றுக்கிழமையில் தேவாலயத்திற்குச் செல்வதனாலோ கிறிஸ்தவர் அல்ல. நீங்கள் ஒரு பாவி என்றும், உங்களுக்கு ஒரு இரட்சகர் தேவை என்றும் உணர்ந்து, இயேசுகிறிஸ்து உங்கள் பாவங்களுக்காக மரித்தார் என்று விசுவாசித்து, மெய்யான மனந்திரும்புதலுடன் அவரிடம் திரும்பியிருப்பதனாலேயே நீங்கள் ஒரு கிறிஸ்தவர். அப்படி ஒரு தருணம் உங்கள் வாழ்வில் வந்ததுண்டா? ‘இல்லை’ எனில், இப்பொழுதே நீங்கள் கிறிஸ்துவின் வசமாய்த் திரும்புவதுபற்றி யோசிப்பீர்களா? ஒரு சவாலாகவே சொல்கிறேன்: நீங்கள் எடுக்கப் போகும் இந்த முக்கியமான முடிவைப் பற்றி ஒருபோதும் வருந்தவே மாட்டீர்கள். நீங்கள் ‘ஆம்’ என்பீர்களாகில், உங்கள் வாழ்வின் மிகச்சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளீர்கள். ஆனால், இது ஒரு மகிமையான தொடக்கம் மட்டுமே.

நீங்கள் கர்த்தரிடத்தில் திரும்பும்போது, முக்காடு அகற்றப்பட்டு, கர்த்தருடைய மகிமையை, அதாவது, கடவுளின் சாயலாகிய கிறிஸ்துவின் மகிமையைக் காணலாம் (2 கொரிந்தியர் 4:4). ஒரு காலத்தில் உங்கள் மனம் கடினப்பட்டு இருந்தது. ஆனால் இனி அப்படியிராது. முன்பு உங்கள் மனம் குருட்டாட்டமாய் இருந்திருக்கலாம். ஆனால் இனி அப்படி இருக்காது. உங்கள் கண்களைத் திறந்து கிறிஸ்துவின் மகிமையைக் காணும்படியாக விடுதலை உங்களுக்குண்டு. இது நமது சொந்தக் கிரியையல்ல. காரணம், வேதம் சொல்கிறது, “இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்” (2 கொரிந்தியர் 4:6). இது மகிமையான ஒன்றல்லவா?

முக்காடு என்பது எதைக் குறிக்கிறது என நீங்கள் யோசிக்கலாம். மோசே கர்த்தருடைய மகிமையைக் காண விரும்பினார். எந்தத் தயக்கமும் இன்றி தேவமகிமையைக் காட்டும்படிக் கர்த்தரிடம் மோசே கேட்டார். கர்த்தரோ அவரிடம், “நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்” (யாத்திராகமம் 33:20). ஆனால் மோசேயை ஏமாற்றத்துக்குள்ளாக்கக் கர்த்தர் விரும்பவில்லை. எனவே, தம் மகிமையின் ஒரு சிறு காட்சியைக் காட்ட முன்வந்தார். கர்த்தருடைய மகிமையின் புறத்தோற்றத்தைக் காணும் பாக்கியத்தைப் பெற்ற மோசேயின் முகம் பிரகாசிக்கத் தொடங்கியது. ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைக் கவனித்தபோது, அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரப்பயந்தார்கள். இஸ்ரவேலருடைய மனக்கண்கள் மூடியிருந்தபடியால், மக்கள் கர்த்தருடைய மகிமை மோசேயின் முகத்தில் பிரகாசிப்பதைக் கண்டு மாண்டுபோய்விடக்கூடாதென்று உணர்ந்து, மோசே தன் முகத்திற்கு முக்காடு போடத் தீர்மானித்தார். தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! “அந்த முக்காடு கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது” (2 கொரிந்தியர் 3:14). கர்த்தரிடத்தில் திரும்பியவர்களுக்கு மரணமும், ஆக்கினைத் தீர்ப்புமில்லை. ஆகையால், நீங்கள் இப்பொழுது கிறிஸ்துவிலே கர்த்தரின் மகிமையைக் கண்டு பிழைத்திருக்கலாம்.

அதேபோல், ‘காண்கிறது’ என்பதன் அர்த்தம் என்ன என்றும் நீங்கள் சிந்திக்கலாம். ‘காண்கிறது’ என்பது இங்கே ஒரு ‘காட்சி அனுபவத்தை’ச் சித்தரிக்கிறது. அதாவது, தரிசிப்பது. ‘காண்கிறது’ என்பது ஒரு மேலோட்டமான பார்வை அல்ல. மாறாக, அது கூர்ந்து நோக்குவது அல்லது மிகக் கவனமாக நம் புலன்களை ஒருங்கிணைத்து ஆராய்வது. இந்தப் பகுதியில் செவிகொடுக்கும் அனுபவம் அல்லது கவனிக்கும் அனுபவம் கூறப்படவில்லை எனினும், வேதத்தின் பிற குறிப்புகளில் ‘காண்பது’ என்பது, கவனிப்பது என்ற கோணத்திலேயே கூறப்பட்டுள்ளது. ‘காண்பது’ என்பது, அரைகுறையாய்க் கவனிப்பதோ, கவனிப்பது போல் நடிப்பதோ கிடையாது. மாறாக, அது கூர்ந்து கவனிப்பது அல்லது மிகக் கவனமாக ஒருங்கிணைந்த நோக்கத்துடன் கவனித்துக் கேட்பது.

கிறிஸ்துவில் கர்த்தருடைய மகிமையை நாம் எங்கே காணலாம்? பிரதானமாக வேத வசனத்தில்தான். கொலோசெயர் 3:16-ல் பவுல் தேவனுடைய வார்த்தையைக் கிறிஸ்துவின் வார்த்தையாக விவரிக்கிறார். தேவ வசனத்தில் நீங்கள் கிறிஸ்துவைக் காண்பதைத் தவிர்க்கவே முடியாது. காரணம், வேதவசனங்கள் அவரைக் குறித்துச் சாட்சி கொடுக்கின்றன (யோவான் 5:39). “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்” (சங்கீதம் 119:18) என்று தாவீது ஜெபித்ததற்கு இதுவே காரணமாக இருக்கலாமல்லவா?

விசுவாசத்திலும், மனந்திரும்புதலிலும் நீங்கள் கிறிஸ்துவினிடமாய்த் திரும்பினீர்கள். ஆனால் நீங்கள் அதோடு நிறுத்திவிடவில்லை. திரை விலகிய முகத்துடன், தேவ வார்த்தையை உன்னிப்பாக நோக்குவதன் மூலம், கூர்ந்த கவனத்துடன் அவர் சத்தத்தைக் கேட்பதன் மூலம் வேத வசனத்தில் கிறிஸ்துவை நீங்கள் தொடர்ந்து தரிசிக்கிறீர்கள்.

கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது என்பதும் அங்கேதானே முடிந்துவிடுகிற ஒன்றல்ல. அது கிறிஸ்துவின் சாயலுக்கொப்பாக நாம் மறுரூபமாக்கப்படுவதற்கும், கிறிஸ்துவின் சாயலையும், மகிமையையும் பிரதிபலிப்பதற்குமான ஒரு வழியாகும்.

1. கிறிஸ்துவின் சாயலாக மறுரூபமாக்கப்படுதல்

கிறிஸ்துவை நோக்குவது என்பது, நீங்கள் கிறிஸ்துவின் சாயலாக மறுரூபமாக்கப்படுவதற்கு உங்களை வழிநடத்தும் ஆற்றலுடையது. நீங்கள் காண்கிறது எதுவோ, அதுவாகவே மாறுகிறீர்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கிறிஸ்துவைக் காண்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாகக் கிறிஸ்துவைப்போல் மாற முடியும். ‘காண்பது’ என்பது ஒரு காட்சிப் பயிற்சி மட்டுமல்ல. அது ஒரு அனுபவம். நீங்கள் திரை விலகிய முகத்துடன் கிறிஸ்துவினிடமாய்த் திரும்பி, அவரை நோக்கிப் பார்ப்பதன் விளைவாக, அவருடைய மகிமையான பிரசன்னத்தையும், திவ்ய வல்லமையையும் அவருடைய ஆவியினால் அனுபவிக்கிறீர்கள்.கிறிஸ்துவின் மகிமையான பிரசன்னத்தையும், திவ்ய வல்லமையையும் அனுபவித்த நீங்கள் ஒருக்காலும் மாறாமல் இருக்க முடியாது. கிறிஸ்துவின் சாயலாக நீங்கள் மகிமையின் ஒரு நிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்கு மறுரூபமாக்கப்படுகிறீர்கள்.

முதலாவது, “மறுரூபமாக்கப்படுகிறோம்” என்கிற செயப்பாட்டு வினைச்சொல்லானது, யாரோ ஒருவர் இதைச் செயல்படுத்துகிறார் என்பதைக் குறிக்கிறது. அவர் பரிசுத்த ஆவியானவரேயன்றி வேறு யாருமல்ல. பவுல் எழுதுகிறார், “இது ஆவியாயிருக்கிற கர்த்தரிடத்திலிருந்து வருகிறது.” இரண்டாவதாக, “மறுரூபமாக்கப்படுகிறோம்” என்னும் நிகழ்கால வினைச்சொல்லானது, கிறிஸ்துவின் சாயலாக மறுரூபப்படுவது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு என்பதைக் குறிப்பிடுகிறது. மூன்றாவதாக, “மகிமையின்மேல் மகிமையடைந்து” எனும் சொற்றொடர் கிறிஸ்துவின் சாயலாக மறுரூபமடைவதைப் படிப்படியாக மாற்றமடையும் ஒரு செயல்முறையெனக் குறிக்கிறது.

நீங்கள் தேவ வார்த்தையில் கிறிஸ்துவை நோக்கும்போது, கிறிஸ்துவைப் பிரதிபலிப்பதையும் கிறிஸ்துவின் சாயலாக மறுரூபமாக்கப்படுவதையும் உங்களில் தடைசெய்கிற நீங்கள் அறியாத அல்லது நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்ட பகுதிகளைப் பரிசுத்த ஆவியானவர் தொடர்ந்து சுட்டிக்காட்டுவார். நீங்கள் கிறிஸ்துவை நோக்குவதை நிறுத்தினால், கிறிஸ்துவைப் போல் மாறுவதை நிறுத்துகிறீர்கள்.

2. கிறிஸ்துவின் சாயலையும் மகிமையையும் பிரதிபலித்தல்

கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது நீங்கள் கிறிஸ்துவின் சாயலையும் மகிமையையும் வெளியரங்கமாகப் பிரதிபலிக்கச் செய்கிறது காரணம் உங்களது இருதயம் உள்ளான விதத்தில் மறுரூபமாக்கப்பட்டுள்ளது.

“காண்கிறது” என்பது ஒரு காட்சி மற்றும் அனுபவம் சார்ந்த பயிற்சி மட்டுமல்ல. அது பிரதிபலிக்கும் விளைவுடையது. இஎஸ்வி வேதாகம மொழிபெயர்ப்பில், கிரேக்க மொழியில் அரிதான வினைச்சொல்லான ‘katoptrizomenoi‘ என்பதை “மகிமையைக் காண்பது” என்று விளக்குகிற அதே சமயத்தில், என்ஐவி வேதாகம மொழிபெயர்ப்பில் அதை “கர்த்தருடைய மகிமையைப் பிரதிபலித்தல்,” என வியாக்கியானம் செய்கிறது. “மகிமையைக் காண்பது” பிரதானமானதாயிருந்தாலும், மோசே கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்ட அனுபவமும், அதைத் தொடர்ந்து அவரது முகத்தில் ஏற்பட்ட பிரதிபலிப்பும் “கர்த்தருடைய மகிமையைப் பிரதிபலிப்பது” என்பதையும் உள்ளடக்கிய ஒரு எண்ணத்தை நமக்குத் தருகிறது என்றே நான் நம்புகிறேன்.

மாற்றமடைந்த உங்கள் வாழ்வு மறைந்திருக்க முடியாது. நீங்கள் மற்றவர்கள் முன் பிரகாசித்து, மற்றவர்களைக் கிறிஸ்துவுக்கு நேராக நடத்துவீர்கள். அதினிமித்தம் அவர்கள் கிறிஸ்துவினிடமாய்த் திரும்பி, கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து, கிறிஸ்துவின் சாயலாக மறுரூபமடைந்து, கிறிஸ்துவின் சாயலையும் மகிமையையும் பிரதிபலிப்பார்கள். மாற்றமடைந்த உங்கள் வாழ்க்கையல்ல, மனுஷ ரூபமெடுத்து, சிலுவையிலறையப்பட்டு, உயிரோடெழுந்த கிறிஸ்துவினால் மட்டுமே மற்றவர்களிடம் மறுரூபமாகுதலைக் கொண்டுவர முடியும்.

நமது தமிழ் வேதாகமம் “மகிமையைக் காண்பது” அல்லது “கர்த்தருடைய மகிமையைப் பிரதிபலிப்பது” பற்றி எவ்வாறு விளக்குகிறது என்று கூறி இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன். நமது தமிழ் வேதாகமம் “மகிமையைக் காண்பது” அல்லது “கர்த்தருடைய மகிமையைப் பிரதிபலித்தல்” என்பதை “கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு” என வியாக்யானப்படுத்துகிறது. இதில் என்னதான் வெறும் ஒரு கண்ணாடி உருவத்தைப் பார்ப்பதுபோலக் காண்பிக்கப்பட்டாலும்;, இது ஓரளவுக்குச் சரியானதாகவே எனக்குத் தோன்றுகிறது. 1 கொரிந்தியர் 13:12-ல் பவுல், “இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்,” என்று எழுதுகிறார். இவ்விரண்டு வசனங்களிலும் பவுல் நாம் இப்பொழுது காண்கிறதைக் குறைவுபடுத்திப் பேசும் நோக்கில் எழுதவில்லை, மாறாக நமக்கு ஒரு ஏக்கத்தை உருவாக்கி அவரது வருகையின்போது அதிக மகிமையில் முகமுகமாக அவரைத் தரிசிப்பதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறார். கிறிஸ்து வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போம். (1 யோவான் 3:2).