மோசேயின் தாயாகிய யோகெபேத், எனது மிகப்பெரிய அபிமானத்துக்குரியவள். தன் தேவன் மீதான எளிய,கள்ளமில்லாத விசுவாசத்துடன்கூடிய அவளது சமயோசித அறிவு,எப்படி நாமும் அவளைப்போல் தேவனைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.

சரித்திரத்தில் அது மிகவும் கொந்தளிப்பான ஒரு காலம். இஸ்ரவேலரில் புதிதாய்ப் பிறந்திருக்கும் அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்றுவிடும்படி முழுவேகத்தில் செயல்படுமாறு எகிப்திய இராணுவத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எகிப்தியப் படைவீரர்கள், பிறந்த சிசுக்களை வாள் முனையில் கொல்லும்போது, தாய்மார்களின் கூக்குரலை யோகெபேத் நிச்சயம் கேட்டிருப்பாள். அவள் அச்சத்தால் நிரம்பியிருக்க அநேகக் காரணங்கள்இருப்பினும், அவள் ராஜாவின் கட்டளைக்குப் பயப்படவில்லை (எபிரெயர் 11:23).

அவள் ஒரு நாணற்பெட்டியைச் செய்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதன்பின்பு யாரும் யோசித்துக்கூடப் பார்க்க முடியாத காரியத்தைச் செய்ய முற்பட்டாள் என்று வேதம் நமக்குச் சொல்கிறது. அந்தச் சிறு பெட்டிக்கு எது வேண்டுமானாலும் நிகழக்கூடுமென அறிந்தே, அப்பெட்டியை நைல் நதியோரத்திலே வைத்தாள்.

அவள் ஒவ்வொரு விரலாகப் பிரித்துத் தன் கரங்களை அந்தக் கூடையிலிருந்து மெதுவாக விலக்கியபோது, எவ்வளவாய் அவளது இருதயம் நடுங்கியிருக்கக் கூடும் என்று ஒரு தாயாக என்னால் கற்பனை செய்ய முடிகிறது. அது அவளுக்கு,“விட்டுவிடு, தேவன் பார்த்துக்கொள்ளட்டும்,”என்று தீர்மானிக்கிற மிக முக்கியமான,புடமிடுதலுக்கான தருணம்!

“மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும், கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்”(நீதிமொழிகள் 29:25).

தனது விசுவாசத்தின் தைரியமான செயல்பாட்டினால்,யோகெபேத்தால் அந்நாளில் தன் மகனின் வாழ்க்கையைக் காப்பாற்ற முடிந்தது. நாம் இதைத் தீர யோசித்துப் பார்த்தால், யோகெபேத் தன் மகனைக் காக்க முடிந்ததற்கானஒரே காரணம், அந்தக் கூடையிலிருந்து தன் கரங்களை எடுத்துவிட மனதாயிருந்தது மட்டுமே.

அநேகந்தரம் நம் வாழ்வில், இப்படிப்பட்ட கூடைகளை இறுகப் பற்றிக்கொள்ள முனைந்து, அவற்றை விட்டுவிட மிகவும் கஷ்டப்படுகிறோம். அப்படிநாம் விட்டுவிடும் தருணத்தில் அவற்றை உறுதியாகப் பிடித்துக்கொள்ளக் காத்திருக்கும் கரத்தைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்!

அந்தப் பிள்ளை யோகெபேத்தின் கரங்களில் இருந்தவரையில், அவன் வெறும் ‘அழகுள்ள’ பிள்ளை மட்டுமே (யாத்திராகமம் 2:2). ஆனால் அவள் அவனை நைல் நதியின் தண்ணீர்களில் போக விட்டுவிட்ட தருணத்தில், தேவனுடைய கரம் அவனை எடுத்துத் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்குப் பெரிதான ஒரு இரட்சிப்பைச் சாதித்து முடிக்கக்கூடிய பாத்திரமாக ஆக்கியது.

உன்னதமான அழைப்புக்கள், அநேகமாக எப்போதுமே வாழ்வின் புடமிடும் உலைக்களத்தில் இருந்து பிறக்கின்றன.

தேவ கட்டளைப்படி தன் மகனை மலையின் மீது பலியாகச் செலுத்தக் கூட்டிச் செல்லும்போது, ஆபிரகாமிடமும் இதேபோன்ற ஓர் உலைக்களத் தருணத்தை நாம் காண்கிறோம்.

என்னதான் அவனது இருதயம் கூக்குரலிட்டு, அவனது மனம் அடுக்கடுக்கான கேள்விகளால் நிரம்பியிருந்தாலும், ஆபிரகாம் தனக்கு மிகவும் அருமையானவனைத் தன்னுடைய தேவனின் கரங்களில் நம்பி ஒப்படைக்க மனதாயிருந்தான்.

ஒரு சில ஆயிரம் ஆண்டுகளின் பின்பதாக,அனைத்து வரலாற்றுத் தொகுப்புகளிலும் மற்றுமொரு புடமிடும் உலைக்களத் தருணம் மிக முக்கியமாகச் செவ்வெழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது: இயேசு தமது சித்தத்தை விட்டுவிட்டு, தேவ சித்தம் செயலாற்ற விட்டுக்கொடுத்த தருணம்.

“…அவர்…பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்”(1 பேதுரு 2:23).

இயேசுவுக்குத் தமது சித்தத்தை விட்டுவிடுவது என்பது எத்தனை கடினமானதாக இருந்தபோதிலும், நம்முடைய இரட்சிப்புக்காக அதை நிறைவேற்றியே முடித்தார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாக அவர் கெத்செமனே தோட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் காரணமாக, இன்று நாம்பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதங்கள் எண்ணிலடங்காதவை.நமக்காகத் தமது ஜீவனையே கொடுத்தஆட்டுக்குட்டியானவருக்கு, நாம் நித்திய நித்தியமாய் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம்,அல்லவா?

“என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,…” (சங்கீதம் 103:2-4).

தேவனுடனான நமது பயணத்திலும்கூட, தேவனிடத்தில் நாம் கொண்டிருக்கும் விசுவாசம் சோதிக்கப்படும் காலங்கள் வரக்கூடும். அப்படிப்பட்டவை,“என் சித்தத்தின்படியல்ல ஆண்டவரே, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது,” என்று கூறிய கிறிஸ்து இயேசு நம்மோடுகூட அச்சோதனைகளில் கடந்து, அவரது கிருபையினால் நமது பயங்களை ஜெயங்கொள்ள உதவி செய்வார் என்று அறிந்து, யோகெபேத், ஆபிரகாம் போன்ற விசுவாச வீரர்களைப் பார்த்து நம் பெலனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நேரங்களாகும்!

விட்டுவிடுங்கள், தேவன் பார்த்துக்கொள்வார்!

பின் குறிப்பு: இந்தத் தலைப்பு, தேவன் மீது நாம் வைத்திருக்கும் அசைக்க முடியாத விசுவாசத்தைக் குறிக்கிறது. அது நமது சார்பிலிருந்து செயலற்ற தன்மையைக் குறிக்கவில்லை. வேதம் நமக்குத் தெளிவாகப் போதிக்கிறபடி, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது.